
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் குரல்கள் பல பலமாக ஒலிக்கத் துவங்கியுள்ளன. இந்நிலையில், அதிமுக., எம்பி., நவநீதகிருஷ்ணன், நாடாளுமன்றத்திலேயே பகிரங்கமாக, தாங்கள் தற்கொலை செய்வதைத்தவிர வேறு வழியில்லை என்றார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை இன்று அதிமுக., நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நெல்லையைச் சேர்ந்த முத்துக்கருப்பன், தாம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
அதிமுக., உறுப்பினர்கள், குறிப்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தால், திமுக., உறுப்பினர்களும் ராஜினாமா செய்வார்கள் என்று கூறினார் ஸ்டாலின்.
இத்தகைய சூழ்நிலையில், இன்று சிலர் தெரிவித்த கருத்துகளும், பின்னணியும் பற்றிய தொகுப்பு இங்கே!

காவிரி விவகாரத்தில் அதிமுக உண்ணாவிரதம் இருந்து என்ன பயன்? மக்களை ஏமாற்றும் நாடகம், பாஜக, காங்கிரஸ் யாராக இருந்தாலும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது இல்லை. தமிழக விவசாயிகள் பல மாதங்களாக போராடிய போது பார்க்காத பிரதமர் காவிரிக்கு தீர்வு காண்பாரா? – சீமான்

காவிரி விவகாரத்தில் எங்களை விமர்சிக்க தார்மீக உரிமை திமுகவிற்கு இல்லை; மத்திய அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை வலியுறுத்துவோம், எது தேவையோ அதை செய்வோம். காவிரி விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முதல்வர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை. – மாஃபா பாண்டியராஜன்
மக்கள் எழுச்சியை காண்பிக்கவே உண்ணாவிரதப் போராட்டம். காவிரி விவகாரத்தில் மக்கள் எழுச்சியை காண்பிக்கவே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட இருக்கிறது. கர்நாடக காங்கிரஸ் அரசு சொல்லித் தான் மத்திய பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கோரியிருக்கிறது. – மாஃபா பாண்டியராஜன்.
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். காவிரி விவகாரத்தில் அதிமுக நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஏமாற்று வேலை – பி.ஆர். பாண்டியன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து ஒரு அறிக்கை கூட வெளியிடாத ஆளும் அதிமுக தனது தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்ய வேண்டும் – காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

காவிரி மேலாண்மைவாரியத்திற்காக தமிழக அரசு ராஜினாமா செய்ய முன்வர வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் கோரி அ.தி.மு.க உண்ணாவிரதம் அறிவித்திருப்பது தாமதமான முடிவு. காவிரி நீரைப் பெறுவதற்காக எம்.பிக்கள் தியாகம் செய்ய வேண்டும். தியாகத்தை தமிழக அரசில் இருந்து தொடங்க வேண்டும். – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.



