சென்னை: மறைந்த திமுக. தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை நள்ளிரவில் தட்டியது திமுக., அதன் பின் தற்போது காலை தொடங்கி இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர் தனபால், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் வந்தனர்.
அப்போது அமைச்சர் ஒருவரிடம் பேசிய திமுக நிர்வாகி ஒருவர், கலைஞருக்கு மெரினாவில் இடம் தரக்கூடாதா? என கேட்டுள்ளார். அதற்கு அவரோ, ”உங்களால்தான் இவ்வளவு பிரச்னையும்! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் ராணி மேரி கல்லூரிக்கு அருகில் தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோதுதான், கடற்கரைக்கு உட்பட்ட பகுதிகளில் 500 மீட்டர் தொலைவுக்கு கட்டடம் எழுப்ப வேண்டும் என்றால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தைதான் இப்போது நடைமுறைப் படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம் ” என்றாராம் அமைச்சர்.
அதற்கு அந்த திமுக., நிர்வாகி, அங்கே கட்டடம் கட்டுவதில்தான் பிரச்னை… சமாதிக்கு எந்த சிக்கலும் இல்லை என்றாராம்.
இருப்பினும் இப்போது வழக்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.




