3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் நெல்லையில் நேற்று இரவு 7.15 மணிக்கு இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோத இருந்தன.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதால், இந்த போட்டி உடனடியாக ரத்து செய்யப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மறைவுக்கு அனுதாபமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல் இன்று இரவு 7.15 மணிக்கு நத்தத்தில் (திண்டுக்கல்) நடக்க இருந்த கோவை கிங்ஸ்- காரைக்குடி காளை அணிகள் இடையிலான வெளியேற்றுதல் சுற்று ஆட்டமும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
ரத்து செய்யப்பட்ட இவ்விரு ஆட்டங்களும் மற்றொரு தேதியில் நடத்தப்படும், அதன் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.