புத்தாண்டு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்கு சென்ற 3 பயிற்சி நர்சுகள் வாகனம் மோதி பலி

ஸ்ரீபெரும்புதூர்:

புத்தாண்டு பிரார்த்தனைக்காக சர்ச்சுக்குச் சென்ற பயிற்சி செவிலியர்கள் நடந்து வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி 3 நர்சுகள் பலியாயினர்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூர்குப்பத்தில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த செங்காடைச் சேர்ந்த கலையரசி (வயது 22), மேல்விசாரை சேர்ந்த குப்பு (22), ஆம்பூரை சேர்ந்த சரஸ்வதி (22) உள்ளிட்ட ஏராளமானோர் விடுதியில் தங்கி பயிற்சி நர்சுகளாக பணியாற்றி வந்தனர்.

புத்தாண்டு என்பதால், நேற்று நள்ளிரவு மேவலூர்குப்பத்தில் உள்ள சர்ச்சு ஒன்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள கலையரசி, குப்பு, சரஸ்வதி ஆகியோர் உடன் பணியாற்றும் தோழியருடன் சென்றனர். அதிகாலை 1 மணி அளவில் அவர்கள் பிரார்த்தனை முடித்து திரும்பினர். அவர்கள், சென்னை – பெங்களூர் சாலை ஓரத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தபோது சென்னை நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் திடீரென தாறுமாறாக ஓடி நர்சுகள் வந்த கூட்டத்துக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திச் சென்றது. இந்த விபத்தில் கலையரசி, குப்பு, சரஸ்வதி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் உடன் சென்ற குடியாத்தத்தைச் சேர்ந்த கவிதா, தூத்துக்குடியைச் சேர்ந்த சரஸ்வதி, மாலா, கலையரசி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

விபத்து ஏற்படுத்திய வாகனத்தில் வந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர். தகவல் அறிந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அவர்கள் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. நர்சுகள் பலியானது குறித்த செய்தி அறிந்ததும் உடன் பணியாற்றுபவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்த விபரம் தெரியவில்லை. வாகனத்தை அடையாளம் காண சுங்கச்சாவடி மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

புத்தாண்டு பிரார்த்தனைக்கு சர்சுக்கு சென்ற 3 நர்சுகள் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.