
தந்தை தனக்கு ஆசையாக வாங்கிக்கொடுத்த மோட்டார் பைக் திருட்டு போனதால் மன உளைச்சலில் இருந்த இளைஞர் திடீரென தற்கொலை செய்துக் கொண்டது அவர்கள் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் தாண்டவராயன் தெரு பகுதியில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் தியாகராஜன்(21). பள்ளிபடிப்பை முடித்துவிட்டு செல்போன் கடையில் பணிப்புரிந்து வந்தார்.
நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த தியாகராஜனுக்கு மற்ற இலைஞர்கள் போல் புதிய அதிவேக பைக் வாங்க வேண்டும் என ஆசை. மகன் மேல் மிகுந்த பிரியம் வைத்திருந்த தந்தை ரவிச்சந்திரன் தன்னிடம் இருந்த சேமிப்பை திரட்டி ரூ.1 இலட்சத்து 60 ஆயிரம் கொடுத்து யமஹா ஆர்.15 வகை அதிவேக மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்தார்.
தந்தைக்கு மகன் மீதும், மகனுக்கு தந்தை மீதும் மிகுந்த பாசம் உண்டு. மகன் அவன் ஆசைப்பட்டப்படி மோட்டார் சைக்கிள் வாங்கி அதை ஓட்டிச் செல்வதை பார்த்து தந்தை சந்தோஷப்பட்டு வந்தார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி அந்த குடும்பத்தில் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை. திடீரென ஏற்பட்ட உடல் நலக்குரைவு ரவிச்சந்திரன் உயிரைப்பறித்தது. தனக்கு நண்பன் போல் விளங்கிய தந்தையின் மறைவு தியாகராஜனை அதிகம் பாதித்தது.
தனது தந்தை தனக்காக ஆசையாக வாங்கித்தந்த பைக்கை பார்க்கும்போதெல்லாம் தந்தையின் அன்பு மனம் தியாகராஜனுக்கு வந்துபோகும். தனது தந்தையைப்போல் அவரது நினைவாக அந்த மோட்டார் சைக்கிளை தியாகராஜன் நேசித்து வந்துள்ளார். ஊரெங்கும் வந்த கொரோனாவின் பொது முடக்கத்தால் அனைவரும் வீடடங்கினர். தியாகராஜன் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்து வைத்திருந்தார்.
இந்நிலையில் கடும் நோய்த்தொற்று பரவி போலீஸ் பாதுகாப்பு கடுமையாக இருந்த காலக்கட்டத்திலும் ஏப் 5 அன்று நள்ளிரவு, பைக் திருடர்கள் தியாகராஜனின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றனர்.
மறுநாள் மோட்டார் சைக்கிள் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தியாகராஜன் அதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வேப்பேரி போலீஸார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் மோடார் சைக்கிளில் வரும் 3 இளைஞர்கள் தியாகராஜனின் மோட்டார் சைக்கிளின் சைட் லாக்கை உடைத்து இன்னொரு மோட்டார் சைக்கிள் மூலம் தள்ளிச்சென்றது தெரிந்தது.
சிசிடிவி காட்சிகளின் உதவிகளோடு போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். கொரோனா பாதிப்பு காரணமாகவும், பல இடங்களில் கடை அடைப்பால் சிசிடிவி காட்சிகளின் தொடர்ச்சி விடுபட்டதாலும் வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
கடந்த ஒருமாத காலமாக இருசக்கர வாகனம் திருடு போனதால் மன உளைச்சலில் இருந்த தியாகராஜன் தனது பைக் காணாமல் போனதைவிட தனது தந்தையின் நினைவாக வைத்திருந்த பைக் காணாமல் போனதால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
அதே விரக்தியில் இருந்தவர் இன்று காலை வீட்டின் கீழ் தளத்தில் தூங்கி கொண்டு இருந்தவர் திடீரென காணவில்லை. இதையடுத்து அவரை பல இடங்களில் அவரது மாமா தேடி வந்த நிலையில் காலை 11 மணியளவில் மாடியில் சென்று பார்த்த போது அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த போலீஸார் தியாகராஜன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தையின் நினைவாக வைத்திருந்த பைக் காணாமல் போனதால் மன உளைச்சலால் இருந்த இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.