கோவை: கோவையில் ஜிம் மாஸ்டரான் ரவுடி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கணவருடன் தலைமறைவான பெண் கவுன்சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள செங்காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்ற ஜிம் ஆறுமுகம், 51. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர், கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டார். இவருக்கும், கோவை மாநகராட்சி துடியலுார் 1வது வார்டு பாஜக கவுன்சிலர் வத்சலா, மற்றும் சுப்பிரமணியம்பாளையத்தை சேர்ந்த குமார், பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளங்கோ ஆகியோருடன் தொழில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஜிம் ஆறுமுகத்திடம், தங்க கட்டிகள் கொடுத்து அதை நகைகளாக செய்யுமாறு கவுன்சிலர் வத்சலா தரப்பினர் கூறியுள்ளனர். இதில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக பிரச்னை நீடித்து வந்தது. இது தொடர்பாக, வியாழக்கிழமை மதியம் துடியலுார் பேருந்து நிலையம் அருகே உள்ள கவுன்சிலர் வத்சலா வீட்டிற்கு ஜிம் ஆறுமுகம் வந்துள்ளார். அப்போது, வத்சலா தரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் வலுத்துள்ளது. அப்போது ஜிம் ஆறுமுகம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதில் படுகாயமடைந்த அவர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கவுன்சிலர் வத்சலா, அவரது கணவர் வரதராஜ், சுப்பிரமணியம்பாளையம் குமார், இளங்கோ, கனகராஜ், செந்தில்குமார் ஆகியோர் தலைமறைவாயினர். இவர்கள் மீது துடியலுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொலை செய்யப்பட்ட ஜிம் ஆறுமுகத்தின் மீது திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரிசி ஆலை உரிமையாளரிடம் மோசடி செய்து, ஒரு கோடி ரூபாய் பறித்தது மற்றும் பல்வேறு இடங்களில் நிலம் அபகரிப்பு, கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே இவரை ரவுடிகள் பட்டியலில் அவிநாசி போலீசார் சேர்த்தனர். இந்நிலையில், துடியலுார் போலீசார் கவுன்சிலர் வத்சலா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கே வீட்டில் சிந்திய ரத்தத்தை துடைக்க பயன்படுத்திய துணியை கைப்பற்றினர். தலைமறைவாக இருந்த கவுன்சிலர் வத்சலா மற்றும் அவரது கணவர் வரதராஜ் மற்றும் பாஜக நிர்வாகி இளங்கோ உள்ளிட்டவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். அதில், கவுன்சிலர் வத்சலா இன்று போலீசில் பிடிபட்டார். அவரது கணவர் மற்றும் பாஜக நிர்வாகியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவையில் ஜிம் மாஸ்டர் கொலை: தலைமறைவாக இருந்த பாஜக பெண் கவுன்சிலர் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari