இன்று முதல் 3 மாதங்களுக்கு உதகையில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு தடை

ooty-botanical-garden உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் தொடங்குவதை ஒட்டி திரைப்பட வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 3 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதகையில் கோடை சீசன் ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நீளும். இந்த 3 மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் உதகையிலும் நீலகிரி மாவட்டத்திலும் அதிகளவில் இருக்கும். இதனால், உதகை நகரில் திரைப்பட வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு இந்த மூன்று மாதங்களிலும் அனுமதி வழங்கப்படுவதில்லை. அவ்வகையில், இந்த ஆண்டும் இன்று முதல் இந்த 3 மாத தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. உதகையின் முக்கிய சுற்றுலா மையங்களான அரசினர் தாவரவியல் பூங்கா, மரபியல் பூங்கா, குன்னூரில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளிலும், சுற்றுலாத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பகுதிகளிலும் திரைப்பட வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.