கள்ளத்தொடர்பு தப்பில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததற்குப் பின், பல நாட்கள் கழித்து அந்தத் தீர்ப்பை கண்டித்து தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது 12 வயது மகளுடன் தந்தை தீக்குளிக்க முயற்சி செய்தார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ளது எர்ணஹள்ளி கிராமம். இக்கிராமத்தை சேர்ந்த ஐஸ் வியாபாரி மாரியப்பன் (வயது 45). இவருடைய மனைவி முருகம்மா (வயது 36). இவர்களுக்கு தமிழ்ச்செல்வி (வயது 12) என்ற மகள் உள்ளார். இங்குள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறார்..
இந்நிலையில், மாரியப்பன் தனது மகள் தமிழ்ச்செல்வியுடன் திடீரென்று, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளிக்க முயன்றார். தனது மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிவிட்டு தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக் குளிக்க முயன்றார்.
அங்கே பாதுகாப்புப் பணியிருந்த போலீஸார் இருவர் மீதும் தண்ணீர் ஊற்றி, காப்பாற்றி விசாரணைக்கு தருமபுரி காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், தான் ஐஸ் வியாபாரம் செய்து வருவதாகவும், தன் மனைவி முருகம்மா, தன் மகன் முறையுள்ள 19 வயது இளைஞருடன் ஓடிவிட்டாதாகவும், வீட்டில் இருந்த 13 பவுன் நகை, ரூ.2.50 லட்சம் பணத்தையும் எடுத்துச் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அவர்கள் இருவரையும் போலீஸார் கண்டுபிடித்து, தம் நகைகளையும் பணத்தையும் மீட்டுத் தருமாறு கேட்டுள்ளார். மேலும், உச்ச நீதிமன்றம், கள்ளத் தொடர்பு தப்பில்லை என்ற தீர்ப்பு கொடுத்த பிறகுதான் தம் மனைவி ஓடி விட்டார் என்றும், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் தம் வாழ்க்கை பாழானதாகவும், தாம் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் மாரியப்பன் கூறினார்.




