பிரதமர் நரேந்திர மோடி மக்களை சந்திப்பதை ஏதாவது காரணம் சொல்லி தடை செய்ய முடியாது, பாதுகாப்பு கொடுக்க வேண்டியது காவல் துறையின் கடமை என்று கூறியது சென்னை உயர் நீதிமன்றம்.
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 18ம் தேதி கோவை மாவட்டத்திற்கு வருகிறார். கோவை பயணத்தின்போது கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி நாடாளுமன்றத்தில் போட்டியிடும் பாஜக., மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மேலும், பிரதமர் மோடி நேரடியாக மக்களை சந்திக்கும் வகையில், பிரமாண்ட ரோடு ஷோ நடத்த பாஜக., திட்டமிட்டது.
இது தொடர்பில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்த ஆலோசனையின் போது, கோவையில் பிரதமர் மோடி பேரணி நடத்த அனுமதிக்க, மாநகர காவல்துறை மறுத்தது.
இதை அடுத்து, கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு காவல் துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. பொதுத் தேர்வு, மத பதட்டம் உள்ளிட்ட பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப்பட்டதாக காவல் துறை விளக்கம் அளித்தது. மேலும், எந்தக் கட்சிக்கும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் விளக்கம் அளிக்கப் பட்டது.
இதனால், கோவை மாவட்ட பாஜக., சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு அவசமாக விசாரிக்கப்பட்டு, இன்று மாலை 4.30 மணிக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்தார். அதில், பிரதமர் மோடியின் பேரணிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து, காவல் துறைக்கு உத்தரவிட்டார்.
அப்போது, மக்களை சந்திக்க தலைவர்களை தடுக்க முடியாது என்று, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது…
- தலைவர்களை மக்கள்தான் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால் மக்களை சந்திக்க அவர்களை தடுக்க முடியாது
- நலத்திட்டங்களை எடுத்துக் கூறி மக்களை சந்திக்க பிரதமர் விரும்புகிறார்
- வாகனப் பேரணி மாலை 5 மணிக்கு நடப்பதால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது
- தேர்வை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி மறுத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது
- பிரதமரின் பாதுகாப்பை சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் உறுதி செய்துகொள்வார்கள்
- காவல்துறை ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர மத ரீதியாக பதட்டமான பகுதி எனக்கூறி அனுமதி மறுக்கக் கூடாது
- உரிய பாதுகாப்புடன் நியாயமான கட்டுப்பாடுகளை விதித்து பேரணிக்கு அனுமதி வழங்க வேண்டும்
- சட்டம் ஒழுங்கு பிரச்னை இன்றி சுமூகமாக நடப்பதை அனைத்துத் தரப்பும் உறுதி செய்ய வேண்டும்
- இவ்வாறு, கோவையில் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.