தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணியின் கோரிக்கைகள் என்று குறிப்பிட்டு, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…
இந்து முன்னணி அரசியல் இயக்கம் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு தேர்தலிலும் இந்து சமுதாய நலனை கருத்தில் கொண்டு ஜனநாயக வழியில் பொதுவாக செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கைகளை முன் வைக்கும். இந்து முன்னணியின் கோரிக்கைகளை ஏற்கின்ற கட்சிகளை தேர்தலில் வெற்றி பெற வைக்க நமது ஆதரவை தெரிவித்து ஒட்டுமொத்த இந்துக்களும் வாக்களித்திட வேண்டுகோள் விடுக்கும்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜனநாயக வழியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணி சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம். அவற்றை ஏற்று தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக தரும் அரசியல் கட்சியை இந்து முன்னணி ஆதரிக்கும்.
இந்து முன்னணியின் கோரிக்கைகளை ஊடகங்களின் மூலம் பொதுமக்களின் கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம்.
தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் இந்து முன்னணியின் கோரிக்கைகள்:
ஆலயங்கள் பாதுகாத்திட..
புராதனமான கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள், இறைவன் திருமேனிகள், அரிய கட்டிட கலைகள், நமது ஆயிரமாயிரம் ஆண்டு வரலாற்றிற்குச் சாட்சியாக இருக்கும் கல்வெட்டுகள் முதலானவற்றை வழிபாட்டுடன் கூடிய பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருக…
ஒரு தேசத்தின் முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத்தை பொறுத்து அமைந்திருக்கிறது. ஆனால் இன்றைக்கு பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பெருகி வருகிறது. குறிப்பாக பாலியல் வன்முறை போன்றவை மிக அதிக அளவில் நடக்கிறது. இதுபோன்ற கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் நன்னெறிக் கல்வி, நல்லொழுக்க கல்வி போன்றவை பள்ளி அளவில் இதற்காக நடத்தப்பட வேண்டும்.
பெருகிவரும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டும்…
வருங்கால பாரதத்தின் வளமான எதிர்காலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் உள்ளது. ஆனால் அவர்களின் வாழ்வை சீரழித்து சிதைக்கும் வண்ணம் அனைத்து வகையான போதைப் பொருட்களும் நாடு முழுவதும் குறிப்பாக தமிழகத்தை மையப்படுத்தி தாராளமாக புழங்கி வருகிறது. மது உட்பட அனைத்து போதை பொருட்களும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். அவற்றை விற்போர், வாங்குவோர், அவர்களுக்கு உதவுவோர் என அனைவரின் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை விவசாயம்- முன்னுரிமை வழங்குக..
பசுஞ்சாண உரம், இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.
*நாட்டுப் பசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தருக… *
நாட்டுப் பசுவை பாதுகாக்கவும், நாட்டு பசு இனம் பெருகிடவும் கவனம் கொடுக்க வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதியையும், மாட்டுத்தோல் பொருட்களையும் தடை செய்ய வேண்டும். தோல் தொழிற்சாலைகளால் ஆறுகள், நிலத்தடி நீர் நாசமாகிறது. அதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாழாவதுடன், மர்ம நோய்கள் பரவுகின்றன. எனவே, மாமிச ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஆகியவற்றைத் தடை செய்ய நடவடிக்கை தேவை.
இந்துக்களும் சேவை மையங்கள், கல்வி நிலையங்கள் நடத்திட அனுமதி.. சலுகை..
சிறுபான்மையினர், அவர்கள் மதத்தை பரப்பிடவும், மதத்தின் பெயரால் சேவை மையங்களும், கல்வி நிலையங்களும் நடத்திடவும் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. கல்வி துறையும் எந்தவித கட்டுப்பாடுமின்றி அனுமதி வழங்குகிறது. ஆனால், பெரும்பான்மையான இந்துக்களுக்கு இச்சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இந்த பாரபட்சமான சட்டத்தை நீக்கி, இந்து சமுதாயத்தை, சமயத்தை பாதுகாத்திட, வளர்த்திட சேவை மையங்கள் நடத்திடவும், கல்வி நிறுவனங்கள் நடத்திடவும் அனுமதி அளித்திட வேண்டும். உரிய உதவித் தொகை, வரி சலுகை முதலானவையும் வழங்கிட வேண்டும்.
இந்து விரோத தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை..
தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் தொடர்ந்து திட்டமிட்டு இந்து விரோத கருத்துக்களை, தேசவிரோத கருத்து திணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கைத் தேவை.
குடும்ப உறவுகளை கெடுத்தும், கலாச்சார சீரழிகளை ஏற்படுத்தியும் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி மெகா தொடர்களுக்கு தணிக்கை (சென்ஸார்) அவசியம். மது மற்றும் போதை காட்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும்.
பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்..
பி.எப்.ஐ. போன்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் படுகொலைகள் முதலான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக தடை செய்யப்பட்டுள்ளன. அந்த அமைப்பினர் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வேறு பெயரில், வேறு தளத்தில் இயங்கி வருகின்றனர். அவர்கள் இன்னும் முழுவதுமாக கண்காணித்து முடக்கப்படவில்லை. அவர்களுக்கு உதவியவர்கள், குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை முழுமையாக எடுக்கப்படவில்லை. எனவே, பயங்கரவாதம் முற்றிலுமாக ஒழிக்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஊடக கருத்துரிமையை ஒழுங்குப்படுத்த வேண்டும்..
பொய்யுரை விவாதங்கள், தவறான தகவல்களைப் பரப்பும் தொலைக்காட்சி ஊடகத்திற்கும், சமூக ஊடகத்திற்கும் சட்டக் கட்டுப்பாட்டை கொண்டு வர வேண்டும். கருத்துரிமை என்ற பெயரில் பொய்யான தகவல்கள், தேசவிரோத கருத்துக்கள் பரப்புவதையும், சமூக விரோத நிகழ்ச்சிகள் நடத்துவதையும் தடுக்க சட்டம் கொண்டுவந்து, கடுமையான நடவடிக்கைகள் மூலம் சமூக பொறுப்புணர்வோடு செய்திகள், கருத்துக்கள், விவாதங்கள் நடைபெற வழி காண வேண்டும்.
தேச விரோத கருத்தை பரப்பும் பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளுக்குத் தடை..
தேசவிரோத கருத்துக்களை பரப்புகின்ற நகர்புற நக்ஸல் அமைப்புகளையும், பயங்கரவாத ஆதரவு அமைப்புகளையும் நாடு முழுவதும் களைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொருளாதாரத்தை சீர்குலைக்கும் போக்கை மாற்றுக..
பட்டாசு, நெசவு போன்ற உள்ளூர் தொழில்களை முடக்கும் போக்கு அதிகரித்துள்ளது. உள்ளூர் தொழில்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தீபாவளி, ஜல்லிக்கட்டு, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளை திட்டமிட்டு ஏதேதோ காரணம் கூறி சீர்குலைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். நமது பாரம்பரியமான விழாக்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்திட வேண்டும்.
மதமாற்றத்தை தடை செய்க..
மதமாற்றம் தேசிய அபாயம். இந்துக்களை குறிவைத்து நடத்தப்படும் மதமாற்றத்தை தடுக்க வேண்டும். ஆசைகாட்டி, அச்சுறுத்தி மதம் மாற்றுவதைத் தடுக்க நாடு முழுவதற்குமான சட்டம் இயற்றப்பட வேண்டும்.
நீர் நிலைகள், மலைகள், மழைக் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டும்..
நீர் நிலைகள், மலைகள், காடுகள் முதலானவை இறை ரூபமாக பார்க்கப்பட்டதால் தான் இது நாள் வரை அவை இருக்கின்றன. சமீபகாலமாக கிறிஸ்தவ மிஷனரிகள் இவற்றை ஆக்கிரமிப்பு செய்து வருகின்றன. அதுபோல காடுகள், சதுப்பு நிலங்கள் முதலானவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இவற்றை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பாளர்களை அகற்றவும் உறுதியான நடவடிக்கை தேவை.
தேசத்தின் வளர்ச்சியை தடுக்கும் தேசவிரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை..
தவறான பிரச்சாரத்தின் மூலம் பொது மக்களைக் குழப்பி, தேசத்தின் வளர்ச்சியை தடுக்க நகர்புற நக்சல் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இவர்களை ஒடுக்க உறுதியான சட்ட நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
ஆன்மீக யாத்திரைக்கு சலுகை வழங்குக..
நாடு நெடுகிலும் இந்துக்கள் யாத்திரை சென்று வருவது தொன்றுதொட்டு நடைபெறும் ஆன்மிக நிகழ்வு. இதன் மூலம் பாரதத்தின் இறையாண்மை, ஒற்றுமை உணர்வு பலப்படுகிறது. எனவே, ஆன்மீக யாத்திரைக்கு சலுகைகள் வழங்கிடவும், பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து தரவும் முன் வர வேண்டும்.
பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும் எதிரான நடவடிக்கைகளை தடுத்திட..
தமிழகத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் , ரேவ் பார்ட்டி, பப் பார்ட்டி, கிளப் பார்ட்டி போன்றவை அதிகரித்து வருகிறது. இது நமது பண்பாட்டிற்கு எதிரானது மட்டுமல்ல போதை வலையில் இளைஞர்களை சிக்க வைக்கும் வஞ்சகச் செயல். இவற்றையெல்லாம் முற்றிலுமாக தடை செய்ய உறுதி அளிக்க வேண்டும்.
கல்வியில்..
அனைத்து பள்ளிகளிலும் தாய்மொழியும், மற்றொரு மொழியாக இந்தியோ அல்லது அவரவர் விருப்ப மொழியோ கற்பிக்க வழிவகை வகுக்கப்பட வேண்டும். அத்துடன், ஆரம்பக் கல்வி கட்டாயம் தாய்மொழியில் அமைந்திட வேண்டும்.
ஒவ்வொரு நாளும், யோகா, விளையாட்டு மற்றும் நன்னேறிக் கல்வி வகுப்பும், தற்காப்பு கலைகள் பள்ளிகளில் கற்றுத்தர வேண்டும்.
மருத்துவ கல்லூரி நுழைவு தேர்வில் (நீட் தேர்வில்) இந்தியாவிலேயே அதிக இடங்களில் தமிழக மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம், அதன் பலனை எல்லோரும் பெற்றிட, விருப்பம் உள்ள, திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து எட்டாம் வகுப்பு முதலே, இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளியிலேயே தொழில் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திட வேண்டும்.
சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித்தொகை போல, ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கிட வேண்டும்.
இந்து முன்னணி, வைக்கும் இக்கோரிக்கைகள் குறித்த
அரசியல் கட்சிகளின் மேலான பதிலை உடனே எதிர்பார்க்கிறோம்.
இந்து சமுதாயத்தின் நியாயமான கோரிக்கைகளை ஊடகத்தில் வெளியிட்டு, தேர்தலில் அவை வாக்குறுதிகளாக, அரசியல் கட்சிகள் ஏற்றிட, ஊடக நண்பர்கள் உதவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.