சேலம்: சேலம் அருகே அடகு கடை உரிமையாளர், மனைவியை கட்டிப் போட்டு கத்தி முனையில் மிரட்டி 350 பவுன் நகை, ரூ.4.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டியைச் சேர்ந்தவர்கள் பொன்னுரங்கம் (71) அவரது மனைவி கண்ணம்மாள் (63). இருவரும் பூசாரிப்பட்டியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான திருமண மண்டபம், வணிக வளாகம், அடகுக் கடையுடன் வீடு அமைந்துள்ளது. இவர்களது மகன்கள் இருவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். நேற்று மதியம் இருவரும் வீட்டில் இருந்தபோது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்குள் புகுந்து இருவரையும் கட்டிப்போட்டது. பின்னர் கண்ணம்மாளை கத்தியால் கையில் கிழித்து காயப்படுத்தி, நகை, பணம் இருக்குமிடத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். இதில் மிரண்டு போன பொன்னுரங்கம் நகை, பணம் இருக்கும் இடத்தை காட்டியுள்ளார். அடமான நகை 350 பவுன், ரொக்கம் 4.50 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு மர்ம கும்பல் தலைமறைவாகிவிட்டது. வீட்டுக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்கவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். வீடு முழுவதும் ரத்தம் சிதறியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இருவரையும் மீட்டு தீவட்டிபட்டி போலீஸுக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் இருந்து மூன்று செல்போன்களை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் எடுத்துச் சென்ற செல்போன்களின் டவர், சேலம் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா அருகே காட்டியதையடுத்து, போலீஸார் குரும்பப்பட்டி வன உயிரியல் காப்புக்காடு பகுதியில் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.
Popular Categories



