சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் புகுந்து தன்னை கட்டிப்போட்டு நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்து நாடகம் ஆடியவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து குமரன் நகர் போலீஸார் தெரிவித்தது…. குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு மாம்பலம் சீனிவாச அய்யங்கார் தெருவில் வசித்து வரும் சபீதா (35) (கணவர் பெயர்: சுரேஷ்) என்ற பெண்மணி நேற்று (05,03,15) மாலை குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில். இன்று நண்பகல் அடையாளம் தெரியாத 2 நபர்கள் எனது வீட்டிற்குள் புகுந்து என்னை கட்டிப் போட்டுவிட்டு. வீட்டிலிருந்த 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000-ஐ திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்ததன் பேரில் குமரன் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதில் நகை திருட்டு சம்பவம் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாத காரணத்தால், சபீதாவை விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், சபீதாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சபீதாவே அந்த நகைகளை அடகு வைத்திருப்பதையும், பணத்தை எடுத்து வைத்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், தீவிரமாக விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் சபீதாவின் தந்தை ரவிக்குமார் ரெட்டி என்பவர் வீடு கட்டி வருவதால், அதற்கு பணம் தேவைப்படுவதாக தந்தை கூறியதன் பேரில், 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000 ஐ சபீதாவே எடுத்துக் கொண்டு, நகைகளை அடகுக் கடையில் வைத்துக் கிடைத்த பணம் ரூ.4 லட்சத்தையும் தந்தையிடம் கொடுத்துள்ளார். பின்னர், மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார். இது குறித்து சபீதாவிடம் குமரன் நகர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்ம நபர்கள் தன்னை கட்டிப் போட்டு நகை திருடிச் சென்றதாக நாடகமாடிய பெண்!
Popular Categories



