பிரதமர் மோடி பிறந்தநாளன்று நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரத்தில் மாட்டுவண்டி போட்டி நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் இந்த பகுதியின் முக்கிய பிரமுகராக இருந்து வருகிறார். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்; தனது கிராமத்தில் பிரதமர் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகளும் அதேபோல மாட்டுவண்டி பந்தையம் மற்றும் குதிரை வண்டி பந்தையங்கள் நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளோம்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முறையாக அனுமதி கேட்டோம். ஆனால் இந்த பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினர் இடையே கலவர பிரச்சனை இருப்பதாகவும் எனவே இதற்கு அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எனவே இதனை தடை செய்து மோடியின் பிறந்த நாளில் மாட்டுவண்டி பந்தையம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்; அந்த பகுதியில் மாட்டுவண்டி பந்தையம் நடத்துவது தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் இங்கு அனுமதி தர இயலாது. மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனை கருத்தில் கொண்டே காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி; பிறந்த நாள் நிகழ்ச்சி என்றால் நலத்திட்ட உதவிகள், இனிப்பு வழங்கலாம்; மாட்டு வண்டி போட்டி தான் நடத்த வேண்டும் என்பதில்லை என கூறி மாட்டுவண்டி போட்டி நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளனர்.