
சதுரகிரி மலையில், மூச்சுத்திணறல் ஏற்பட்டு கோயம்புத்தூர், ஈரோடு பக்தர்கள் 2 பேர் பரிதாப உயிரிழப்பு!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்ற 2 பக்தர்கள், மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
சதுரகிரிமலையில் உள்ள பிரசித்திபெற்ற சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு, நேற்று புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர். வழக்கமாக அமாவாசை தினங்களில் இருக்கும் கூட்டத்தை விட, மகாளய அமாவாசைக்கு பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.
மலைக் கோவிலுக்கு பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது கோயம்புத்தூர் மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன் (47), ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்த நாகராஜன் (55) ஆகிய 2 பக்தர்களுக்கும் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து சாப்டூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.