திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றம்..

Published:

500x300 1825105 thiruparmkundram - 2026

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. வரும் 30-ந்தேதி தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். 31-ந்தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை பெற்றது திருப்பரங்குன்றம். இங்கு கொண்டாடப்படும் விழாக்களில் தெப்ப திருவிழா பிரசித்தி பெற்றது. தை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக கோவிலின் கம்பத்தடி மண்டபத்தில் தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்தில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தர்ப்பைபுல், மா இலை, பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. உற்சவர் சன்னதியில் இருந்து சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் பல்லக்கில் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த திருவிழாவில் தினமும் சுவாமி தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் அன்னம், சேஷ, தங்க மயில், பச்சைக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வருகிற 30-ந்தேதி தை கார்த்திகை நாளில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும்.பின்னர் சுவாமி தெய்வானையுடன் சிறிய தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார். முக்கிய நிகழ்ச்சியான வருகிற 31-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

அப்போது சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி வலம் வருவார். இரவு தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுரேஷ் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img