ஆற்றங்கரையிலும் அரச மரத்தடியிலும் பெரும்பாலும் விநாயகர் கோயில் கொண்டிருப்பார். ஓர் ஊரில் அண்ணனுக்குப் பதிலாக தம்பியான முருகப்பெருமான் நதிக்கரையோரம் கோயில் கொண்டிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்ரீவைகுண்டத்துக்கு அருகே, புதுக்குடி எனும் ஊரை ஒட்டிப் பாயும் தாமிரபரணி நதிக்கரையோரம் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இங்கே சுப்ரமணிய ஸ்வாமியாக வள்ளி- தெய்வானையுடன் அருள்கிறார் முருகர்.
சஷ்டி தினங்களும் தை மாத செவ்வாய் வெள்ளியும் இங்கே மிகவும் விசேஷம்! அன்றைய தினம் சுப்ரமணிய ஸ்வாமியைத் தரிசிக்க, தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும்; பிரிந்த தம்பதி ஒன்றுசேருவர். அதோடு, எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடவும் இங்கே வேண்டிக்கொள்கிறார்கள்
கோயிலுக்கு எதிரில் மிகவும் பழைமை வாய்ந்த வேம்பும் அரசும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இந்த மரத்தடியில் நாகர் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமைகளில் வந்து, இங்கே பாயும் தாமிரபரணியில் நீராடி, அந்த ஈரத்துணியுடனேயே பச்சரிசி, எள் ஆகியவற்றை நாகர் விக்கிரகங்களின் மீது தூவி, மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் சர்ப்பதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.