மதுரை திருப்பரங்குன்றத்தில் குழந்தைகள் சாப்பிட்ட ஜிகர்தண்டா ஐஸ்கிரீமில் தவளை கிடந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இது தொடர்பாக போலீசார் ஒருவரை இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம். இவரது மனைவி ஜானகிஸ்ரீ. தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது மகள்கள் மித்ராஸ்ரீ(வயது 8), ரக்சனாஸ்ரீ(7) மற்றும் உறவினர் மகள் தாரணி(4) ஆகியோரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு கூட்டி சென்றாராம் .
அப்போது கோவில் அருகில் உள்ள ஒரு குளிர்பான கடையில் குழந்தைகளுக்கு ஜிகர்தண்டா வாங்கி கொடுத்தார். அதனை குடித்த 3 குழந்தைகள் திடீெரன வாந்தி எடுத்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த ஜானகிஸ்ரீ குழந்தைகள் குடித்த ஜிகர்தண்டாவை வாங்கி பார்த்தார்.
அப்போது அதில் போடப்பட்டிருந்த ஐஸ்கிரீமில் ஒரு தவளை செத்து கிடந்தது. இதையடுத்து வாந்தி எடுத்த 3 குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். ஜிகர்தண்டாஐஸ்கிரீமில் தவளை கிடந்தது பற்றி ஜானகிஸ்ரீ திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இன்று குளிர்பான கடையின் உரிமையாளர் துரைராஜன்(60) என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இப்போது மதுரையின் அடையாளங்களும் ஒன்றாகிப்போனது இங்கு தயாரிக்கப்பட்டு அதிகம் விற்பனையாகும் ஜிகர்தண்டா வை பெரியோர்கள் குழந்தைகள் பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர். இவை சுகாதார உணவு பாதுகாப்பு விதிகள் படி தயாரிக்கப்படுகிறாதா என்று இப்போது பலரும் கேள்வி கேட்க துவங்கி விட்டனர். ஜிகர்தண்டா ஐஸ்கிரீமில் தவளை இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் தவளை இறந்து கிடந்த விவகாரம் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.உரிய உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை பின்பற்றி ஐஸ்கிரீம்களை தயாரிக்கும் சில உள்ளூர் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா? என்பது குறித்தும் இது பற்றி அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு மேற்கொள்கின்றனரா? என்பது தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதேபோல், சாலையோரம் விற்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் மற்றும் அவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் பற்றியும் உரிய ஆய்வை நடத்தி இதுபோன்ற உணவு பண்டங்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பொதுநல விரும்பிகள் மதுரை மாநகராட்சிக்கு கோரிக்கை முன் வைத்துள்ளனர்.