
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் (96) வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை மோசமானதையடுத்து பெரியகுளத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு பழனியம்மாளின் உயிர் பிரிந்தது.
உடல் நலன் பாதிக்கப்பட்ட பழனியம்மாள் நாச்சியார் (95) வியாழக்கிழமை பெரியகுளத்தில் இருந்து தேனி என்.ஆர்.டி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்குச் சென்று அவரது தாயாரைப் பார்த்து வந்தார்.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு விசாரித்தார். தொடர்ந்து ஓபிஎஸ் தாயாருக்கு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் மரணம் அடைந்தார்.
அவருக்கு ஓ.பன்னீர்செல்வம், ஓ.ராஜா, ஓ.சண்முகசுந்தரம், ஓ.சுசேந்திரன், ஓ.பாலமுருகன் என 5 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
தாயார் மறைவு செய்தி கேட்டறிந்த ஓ.பன்னீர்செல்வம் அவசர அவசரமாக சென்னையிலிருந்து தேனிக்கு புறப்பட்டு வந்து மறைந்த தாயாரின் உடலை பார்த்து அழுதார்.
இவரது இறுதிச் சடங்கு, பெரியகுளத்தில் சனிக்கிழமை (பிப்.25) நடைபெறுகிறது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனை அடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நாச்சியார் மறைவிற்கு சசிகலா,டிடிவி.தினகரன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





