ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் சிபிசிஐடிக்கு மேலும் 2 மாத அவகாசம்

மதுரை:

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு மேலும் 2 மாத கால அவகாசத்தை அளித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று ராமஜெயத்தின் மனைவி லதா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு பலமுறை விசாரணைக்கு வந்தும், சிபிசிஐடி போலீஸார் மேலும் மேலும் அவகாசம் கோரி வந்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நேற்று இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தபோது சிபிசிஐடி தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு முறையும் சிபிசிஐடி போலீஸார் முக்கியத் தடயம் கிடைத்துள்ளதாகக் கூறி கூடுதல் அவகாசம் கேட்கின்றனர். ஆனால், குற்றவாளியைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கை முறையாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின்போது கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்த மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே கூடுதலாக 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார்.

இதைப் பதிவு செய்த நீதிபதி, சிபிசிஐடி போலீஸாருக்கு ஒவ்வொரு முறையும் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மூன்று மாதம் அவகாசம் அளிக்க முடியாது எனக்கூறி 2 மாதம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார்.