மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சகோதரியின் வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள ராமகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு மதுபோதையில் தனது சகோதரி செல்வராணியிடம் தகராறு செய்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவும் மது அருந்திவிட்டு வந்த முருகன் தனது சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத செல்வராணி முருகனைத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகன் தனது நண்பரான சின்னதுரையை அழைத்து வந்து செல்வராணி வீட்டின் மீது 4 நாட்டு வெடி குண்டுகளை வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.
விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தும் நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டதில் செல்வராணி மற்றும் அவரது இரு மகன்கள் இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் உடல் சிதைந்து உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முருகனைக் கைது செய்துள்ளனர். தப்பி ஓடிய சின்னதுரையைத் தேடி வருகின்றனர்.