

பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது களைகட்ட துவங்கி உள்ளது.
பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அனுமதி மறுப்பு இந்த ஆண்டும் கால்நாட்டுதல் வைபவத்துடன் திருவிழா தொடங்கி உள்ளது.
வழக்கமாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதிக அளவில் அங்கு சென்று தங்கி இருந்து வழிபடுவார்கள். இந்த ஆண்டு அங்கு செல்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே தனியார் வாகனங்களுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் குறைந்தது 3 நாட்களாவது தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியாவிடம் பேசியதன் பேரில் இன்று முதல் 3 நாட்களுக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.
இதனால் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஆர்வமுடன் குடில் அமைத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற காரையார் செரிமுத்து அய்யனார் கோவிலில் வருகிற 28 -ந் தேதி ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற இருக்கிறது. இதில் தென்காசி, ஆலங்குளம், நெல்லை உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பத்தினருடன் குடில் அமைத்து வருகி்ன்றனர். இவர்கள் வரும் 30- ந் தேதி வரை இக்கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்து வருவார்கள். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, மணிமுத்தாறு பேரூராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. 26-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அகஸ்தியர்பட்டியில் இருந்து கோவிலுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மூன்று நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.