அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்கிறார்.
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் ஜூலை 11-ந்தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அவரிடம், உயர் நீதிமன்ற தீர்ப்பு குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்புக்கு, டெல்லி உச்சநீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்லில் வரும் 5ஆம் தேதி (திங்கட்கிழமை) மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகாமல் பொதுக்குழுவை கூட்டியது எப்படி செல்லும் என்று நீதிமன்றத்தில் முறையிடவும் ஒ.பன்னீர் செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.