
திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தை புனிதமாக கருதி தமிழகத்தில் உள்ள அனைத்து இந்துக்களும் வணங்கி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் முருகன் ஆலயமும், அதனுடன் உள்ள மலை மற்றும் வீதிகளும் திருப்பரங்குன்றம் முருகனுக்கே சொந்தம் என்றும், மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்கா ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது, இருந்தாலும் அதனை அகற்றாமல் மேற்கொண்டு எந்த கட்டுமானமும் கட்டக்கூடாது எனவும் லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது சில இஸ்லாமிய அமைப்புகள் மேற்படி சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி அறுத்து கந்தூரி கொடுக்கப் போவதாக திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுக்கும் விதத்தில் பிரச்சனை செய்து வருகின்றன.
மேற்படி தர்காவில் ஆடு கோழி பலியிட்டு கந்தூரி கொடுத்ததற்கான எந்தவிதமான ஆவணமும் 1920 முதல் நடைபெற்று வந்த நீதிமன்ற வழக்குகளில் தாக்கல் செய்யப்படவில்லை. அதே போன்று வருவாய்த் துறையினரால் நடத்தப்பட்ட பல்வேறு அமைதி கூட்டங்களிலும் ஆடு, கோழி பலி கொடுத்து கந்தூரி கொடுக்கப்பட்டதாக எந்த ஆவணமும் இல்லை என்பதே உண்மையாகும்.
இதன் அடிப்படையிலேயே முன்னதாக மலையில் கந்தூரி கொடுக்கப்படும் என தர்கா நிர்வாகத்தால் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை வருவாய்த்துறையினர் அகற்றினர்.
மேலும் திருப்பரங்குன்றம் மலையில் கந்தூரி கொடுக்க முயற்சித்த இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்களுக்கு அனுமதி மறுத்து நீதிமன்ற உத்தரவு பெற்று வருமாறு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையால் வலியுறுத்தப்பட்டது.
மேற்குறிப்பிட்ட வகையில் மலைமீது பலி கொடுக்கும் எந்தவிதமான வழக்கமும் இல்லாத போது வலுக்கட்டாயமாக திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப் போவதாக மீண்டும் சில இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் செய்திகள் வெளி வந்துள்ளன.
மேலும் திமுக கூட்டணி கட்சிகள், திருப்பரங்குன்றம் மலையில் ஆடு கோழி பலியிட்டு தந்தூரி விழா நடத்த ஆதரவாக செயல்படுவதுடன்.
இந்துக்கள் மீது அவதூறு பரப்பி அறிக்கைகள் வெளியிடுவது கண்டனத்துக்குரியது.
தற்போது அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில் வேண்டுமென்றே எந்தவிதமான நடைமுறையும் இல்லாமல் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளதன் மூலம் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் ஒரு பதட்ட சூழலையை உருவாக்கி மதக்கலவரத்தை ஏற்படுத்த திமுக கூட்டணி கட்சிகளும், ஜமாத் நிர்வாகமும் இணைந்து செயல்படுகிறதோ என்னும் ஐயம் எழுகின்றது.
மத நல்லிணக்கம் என்னும் பெயரில், வேற்று மதத்தினர் நடைமுறைகளை
முருக பக்தர்களிடம் திணிப்பதை திமுக கூட்டணி கட்சிகள் கைவிட வேண்டும்.
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் வழிபாட்டுத்தலத்தை ஆக்கிரமித்து அதன் புனிதத்தை கெடுப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். முருக பக்தர்களின் உணர்வுகளுக்கு திமுக மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.