
ஆட்டுக்குத் தாடியும் ஆளுநருக்கு … என்ற திமுக.,வின் மேடைப்பேச்சுகள் அது ஆளுங்கட்சியாக பதவியில் அமர்ந்து அவியல் செய்யும் காலங்களில் அதிகம் ஒலிக்கும். அதே நேரம் எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் செய்யும் காலங்களில், ஆளுநர் மாளிகை நோக்கி மனு கொடுப்பதற்கும் சட்டையைக் கிழித்துக் கொண்டு பேரணி செல்வதற்கும் மும்முரமாக இருக்கும்.
ஏற்கெனவே முன்னர் இருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அரசுத் திட்டங்கள் பற்றி ஆய்வுகளை மேற்கொள்ள அடிக்கடி சென்ற போது அதுபற்றி ஊடகங்கள் மூலம், வயது முதிர்ந்த உயர் பொறுப்பில் இருந்த நபரைப் பற்றி திராவிட இயக்கங்கள் செய்த துர்பிரசாரத்தை தமிழகம் பார்த்தது. துணை வேந்தர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை என்ற அவரின் செயல்பாடுகளுக்கு எதிராக, அன்றும் திராவிட ஊடகங்கள் தீயாய் வேலை செய்து வந்தன.
திமுக., ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்துக்கு நியமிக்கப்பட்ட ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி, ஐபிஎஸ் என்ற பின்புலத்தில் வந்தவர் என்பதால் அவரது நடவடிக்கைகள் அதிரடியாகவும் அதேசமயம் தேச நலனுக்கு உகந்ததாகவும் அமைந்திருந்தது. அதை முடக்கும் விதமாக ஊடகங்களை வைத்து பெரும் தாக்குதல்களை திராவிட இயக்கங்கள் செய்து கொண்டே வந்தன. சொல்லப்போனால் இப்போது திமுக.,வுக்கு அரசியல் செய்யும் நேரம்.
சட்ட திட்டங்களுக்கு முரண்பாடான வகையில், தங்களது கொள்ளை அடிக்கும் ஆசைகளை சட்டரீதியாக நிறைவேற்றிக் கொள்ள, சட்டமன்றத்தையே பயன்படுத்திக் கொள்வது என்ற விஞ்ஞான ஊழலில் திமுக., இறங்கிவிட்டது என்பதன் வெளிப்பாடுதான் ஆளுநருக்கு தமிழக அரசுக்கும் இடையிலான சச்சரவுகள்.
தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி வைத்த மசோதாக்கள் பலவற்றை உடனே கையெழுத்திட்டு அனுப்பி வைத்த ஆளுநர் ரவி, அவற்றின் ஊடே அனுப்பி வைத்த சர்ச்சைக்குரிய, சட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும் அல்லது சட்ட முரண்பாடுகள் உள்ள சில மசோதாக்கள் மட்டும் கிடப்பில் வைத்தார். அது திமுக., அரசு தங்களுக்கு பணபலம் அதிகம் தரும் மசோதாக்கள் எனும் காரணத்தால் தீவிரமாக எதிர்க்க தடைப்பட்டது.
அதன் விளைவாக வெடித்ததே ஆளுநர் மற்றும் தமிழக அரசுக்கு இடையிலான மோதல்கள் என்பதை பள்ளிப் பாடம் கற்ற எவருமே எளிதாகப் புரிந்து கொள்வர். இப்போது அந்த நிறுத்தி வைக்கப்பட்ட மசோதாக்களின் நிலையைப் பற்றி சிறிது யோசித்துப் பார்ப்போம்.
1. NEET தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். சட்டசபை மீண்டும் இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பியதை குடியரசு தலைவருக்கு அனுப்ப தாமதம் செய்தார். குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை நிராகரிக்க தமிழக அரசு நீதிமன்றம் சென்று போராட உள்ளது. இதன் முடிவு – மாணவர்கள் கூட்டமாக இந்த வருடமும் நீட் தேர்வு எழுதினார்கள்.
2. செந்தில் பாலாஜி கைதுக்குப் பிறகு அவர் அமைச்சராகத் தொடர/ பதவி பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுத்தார். இதன் முடிவு – உச்ச நீதிமன்றமே தான் அளித்த ஜாமீனுக்கு வருந்தி, செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்யச் சொன்னது. அரசுக்கு தலைகுனிவு. ஆனால் அதைப் பற்றி எல்லாம் எவர் கவலைப்படுவது?
3. பொன்முடி வழக்கு விசாரணையின் முடிவில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்ய மறுத்தார் ஆளுநர் ரவி. இதன் முடிவு – நீதிமன்றம் அவர் மீது உள்ள வழக்கை துரிதப் படுத்தி உள்ளது மேலும் புதிய வழக்கு தொடரப்பட்டது.
4. பல்கலைக் கழக துணைவேந்தர் பல்கலைக்கழக மானியக் குழு யு சி ஜி சட்டப்படிதான் இருக்க வேண்டும் என்று ஆளுநர் சொன்னார். அரசு வழக்கம் போல மீறி நடந்து, பின் மசோதா அனுமதிக்கு நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அனுமதி அளித்த தீர்ப்புக்குப் பிறகு முதல்வரே வேந்தர் என்று வெற்றி விழா கொண்டாடிக் கொண்டது திமுக.,! இதன் முடிவு – தனது மற்றும் ஆளுநர் அதிகாரங்களில் தலையிடும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இப்போது குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்தைக் கருத்து கேட்டுள்ளார். இப்போது, சென்னை உயர் நீதிமன்றம் இந்த ‘முதல்வரே வேந்தர்’ மசோதாவை நிறுத்தி வைத்துள்ளது. மீண்டும் திமுக ., அரசுக்கு தலைகுனிவு.
பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான வழக்கில் இடைக்காலத் தடை கொடுக்கப்பட்டதற்கு திமுக.,வினர் மற்றும் திராவிட ஊடகங்கள், இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்ற அவமதிப்பு என்று கதை விட்டுக் கொண்டிருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு தமிழக அரசு vs ஆளுநர். ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது பற்றி மட்டுமே வழக்கு. 10 மசோதாக்கள் நிலுவையில் இருந்தது. அப்படி கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்தானது அந்த வழக்கு.
சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிலுவையில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றது உச்ச நீதிமன்றம். மேலும் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலவரம்பு நிர்ணயித்தது உச்ச நீதிமன்றம். ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாதாக்களையும் தங்களுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் ஒப்புதல் கொடுத்தது.
இதில் கவனிக்க வேண்டியது “அந்த 10 மசோதாக்களில் என்ன இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் பார்க்கவே இல்லை. அதாவது வழக்கின் தகுதி என்ன என்பதை உச்ச நீதிமன்றம் பார்க்கவில்லை. ஆளுநரின் அதிகாரம் என்ன என்பதோடு அவர்கள் நின்று விட்டார்கள். தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்கள் சட்டபூர்வமாக சரியானதா என்பதை ஆளுநர் ஆராய்கிறார். அதாவது ஆளுநர் வழக்கின் ‘தகுதி’ என்ன என்பதைப் பார்க்கிறார். அதனால்தான் திருப்பி அனுப்புகிறார். ஆனால், சட்ட மசோதாக்களை ஆராய்வது ஆளுநரின் வேலை இல்லை; சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களின் மீது உடனே ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போடுவது மட்டும்தான் ஆளுநர் வேலை என்பதுதான் தமிழக அரசின் வாதம்.
இப்போது உயர் நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கும் வழக்கு ‘சட்டத்தின் தகுதி’ பற்றியது. அதாவது சட்ட மசோதாவில் ஆளுநரின் அதிகாரத்தைப் பறித்து, துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு அளிப்பது யு ஜி சி சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்பதுதான் வழக்கு. இதைத்தான் ஆளுநரும் சொன்னார். அந்த வழக்கில்தான் தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவுக்கு இடைகாலத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதில் உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது. எனினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதியலாம். ஆனால் அந்த வழக்குக்கும், உச்ச நீதிமன்றம் முன்னர் கொடுத்த தீர்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதால், இதன் தீர்ப்பும்கூட யுஜிசி நெறிமுறைகளுக்கு உட்பட்டு எனும் பிரிவின் கீழ் வரக்கூடும்.
இப்படி ஆளுநருடனான அரசியல் விவகாரத்தில் அனைத்திலும் திமுக., அரசு ஒரு எதிர் நிலைப்பாடு எடுத்து செயல்பட்டுள்ளதை நன்றாகப் புரிந்து கொள்ள முடிகிறது. தண்டனைக்கு உள்ளான / கைதான அமைச்சர்களுக்கு வக்காலத்து, வழக்குகள், மேல் முறையீடு என்று ஒவ்வொரு விஷயத்திலும் செயல்பட்டுள்ளதும் நன்றாகத் தெர்கிறது.
இறுதியில், ஆளுநர் கூறிய அறிவுரையே சரி என்ற நிலை தான் அனைத்து விஷயத்திலும் வெளித்தெரிய, இந்த சட்டப் போர்களுக்கு எல்லாம் திமுக,.வின் சொந்தப் பணமா செலவழிக்கப்படுகிறது? பொது மக்களின் வரிப் பணம் தானே! ஒரு பக்கம் நிதிப் பற்றாக்குறை என்று போக்குவரத்துப் பணியாளர்களுக்கும் ஆசிரியர்களும் அரசுப் பணியாளர்க்குமே துரோகம் இழைக்கும் திமுக., அரசு, இன்னொரு பக்கம் அரசுக்கு வர வேண்டிய வருமானத்தை ஊழல்களால் தன் கட்சிக்குத் திருப்பிக் கொண்டிருக்கும் அயோக்கியத் தனங்களைச் செய்து கொண்டிருக்கிறது என்பதைத்தான் டாஸ்மாக் ஊழல் இப்போது பூதகாரமாக்கி வெளிசமிட்டுக் காட்டியுள்ளது.





