
தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து, மாநில அரசுக்கு மாற்றம் செய்து, சட்டத்தில் திருத்தம் செய்து 10 சட்ட மசோதாக்கள் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. ஆனால், இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்தார்.
இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் பேரில் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்ச நீதிமன்றம் தமிழக அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கும் தானே ஒப்புதல் அளித்து உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து, அந்தத் தீர்ப்பின் விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டு, துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்குரைஞர் வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அவரது மனுவில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிகளுக்கு முரணாக இந்த சட்டப் பிரிவுகள் உள்ளதால் இதை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும். புதிய சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமிக்க தடை விதிக்க வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், ”10 பல்கலைக்கழகங்களில் இரண்டுக்கு மட்டுமே துணைவேந்தர் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எனவே தடை கோரிய வழக்கில் பதில் அளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் அளிக்க வேண்டும்,” என்று கோரினார். அடுத்து, உயர் கல்வித் துறை தரப்பில் வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி, ”இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பதில் அளிக்க, அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது” என்றார்.
எனினும் மனுதாரர் தரப்பில் வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் அனுமதித்தனர். மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, ”பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிமுறைகளுக்கு முரணாக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. துணைவேந்தர் நியமிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், ”தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ளது. பல்கலை மானியக் குழு சட்டத்தில், சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. யூகத்தின் அடிப்படையில் சட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது,” என்றார்.
இவ்வாறு அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு, இடைக்கால தடை விதித்தனர்.





