
ஐ.பி.எல் 2025 – மும்பை vs டெல்லி
வான்கடே மைதானம், மும்பை – 21.05.2025
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
மும்பை இந்தியன்ஸ் அணி (180/5, சூர்யகுமார் யாதவ் 73, திலக் வர்மா 27, ரியன் ரிக்கிள்டன் 25, நமன் தீர் 24, வில் ஜேக்ஸ் 21, முகேஷ் குமார் 2/48, சமீரா, ரஹ்மான், குல்தீப் தலா ஒரு விக்கட்), டெல்லி கேபிடல்ஸ் அணியை (18.2 ஓவர்களில் 121, சமீர் ரிஸ்வி 39, விபின் நிகம் 20, அஷுதோஷ் ஷர்மா 18, கே.எல். ராகுல் 11, மிட்சல் சாண்ட்னர் 3/11, பும்ரா 3/12, போல்ட், தீபக் சாஹர், வில் ஜேக்ஸ், கர்ண் ஷர்மா தலா ஒரு விக்கட்) 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 5 ரன், 1 ஃபோர்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்கவீரரான ரியன் ரிக்கிள்டன் (18 பந்துகளில் 25 ரன், 2 சிக்சர்) வில் ஜேக்ஸ் (13 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து அணியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார். அவருக்குப் பின் ஆட வந்த சூர்யகுமார் யாதவ் (43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) இறுதிவரை ஆடி அனிக்கு வலு சேர்த்தார்.
அவருக்குப் பின்னர் வந்த திலக் வர்மா (27 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (3 ரன்), நமன் தீர் (8 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) என அடித்து ஆடியதால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.
181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் மட்டையாளர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சமீர் ரிஸ்வீ (35 பந்துகளில் 39 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (11 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய இருவர் மட்டுமே சற்று பொறுப்போடு ஆடினர். மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் மிட்சல் சாண்ட்னர் மற்றும் பும்ரா அற்புதமாக பந்துவீசி தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர்.
டெல்லி அணியில் கே.எல். ராகுல், முதலில் விளையாட வரவில்லை. அந்த அணி பேட்டிங் செய்த போது அவர் தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் அவர் இன்று சோபிக்கவில்லை. இறுதியில் டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன் எடுத்து, அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. எனவே மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் நாலாவது இடத்திற்கு வந்துள்ளது. மும்பை, டெல்லி அணிகள் பஞ்சாப் அணியோடு தனது கடைசி ஆட்டங்களை ஆடும். அந்த இரண்டு ஆட்டங்களும் பிளேஆஃப் சுற்று எந்த அணி செல்லும் என்பதை முடிவு செய்யுமா எனப் பார்க்கவேண்டும்.





