
தமிழகத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் அரசியல் பணியைச் செய்யும் ஒற்றை நபராகத் திகழ்கிறார் தமிழக பாஜக., முன்னாள் தலைவர் கு. அண்ணாமலை. தமிழகத்தின் அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் இதை உறுதியாகச் சொல்கிறார்கள்.
ஜூன் 4 – அன்று அண்ணாமலையின் பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கு, தற்போது தமிழக பாஜக., மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இல்லாவிட்டாலும் கூட, பாஜக.,வினர் மட்டுமல்ல, பொதுவான பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரும் ஆர்வம் காட்டினார்கள். அரசியல் மட்டத்தில் அதிமுக.,வினர், ஓபிஎஸ்., டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதில் ஆர்வம் காட்டியதைக் காண முடிந்தது. இதன் பின்னணியில் வெளித் தெரிவது, மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மக்கள் தலைவராக அண்ணாமலையை ஏற்கின்றனர் என்பதுதான்!
மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி இருந்தாலும், இனி எனக்கு பாரம் தடைகள் எதுவும் இல்லை, அடித்து ஆடுவேன் என்று அண்ணாமலை கூறியதற்கு ஏற்ப, எதிர்க்கட்சியினரின் அரசியலை மிகச் சரியாக, தனது கடமையை செவ்வனே செய்து வருகிறார் என்பது அண்மைக்கால அவரது செயல்பாடுகளில் வெளித் தெரிந்தது.
கடந்த அதிமுக., ஆட்சியின் போது எதிர்க்கட்சி அரசியலைச் செய்து வந்த திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின், “எதிர்க்கட்சி என்றால் அரசியல் தான் செய்யும், அது அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?” என்று கேள்வி எழுப்பினார். கடந்த நான்கு வருடங்களாக ஆளும் கட்சியாக இருக்கும் திமுக.,வுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து கேள்விகளை எழுப்பி அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அண்ணாமலை. அதனால் தான் அவ்ரை மட்டும் குறிப்பிட்டு, அண்ணாமலை அரசியல் செய்கிறார் என்றார் ஸ்டாலின். அதே நேரம், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள அதிமுக.,வின் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்யாமல் அவியல் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
அண்ணாமலை பாஜக., தலைவர் பதவியில் நயினார் நாகேந்திரனை அமர்த்திவிட்டு விலகும் போது, இனி தனக்கு சுதந்திரம் கூடியுள்ளதாகவும், தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப் படுத்துவேன் என்றும் சொல்லியிருந்தார். அதன்படி, அண்மைக்காலமாக அவரது செயல்பாடுகள், தொய்வுற்றிருந்த ஊடக மற்றும் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரியை அடுத்த விளாங்காட்டு வலசைச் சேர்ந்த முதிய தம்பதி ராமசாமி, பாக்கியம் இருவரும் தோட்டத்து வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இத்தகைய தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை கண்டித்தும், திமுக., அரசைக் கண்டித்தும் பாஜக., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சிவகிரியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அண்ணாமலை, குற்றவாளிகள் விரைவில் கண்டறியப்பட்டு தண்டனை தரப்படாவிட்டால் தாம் தொடர் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து அதிர வைத்தார். ஆனால் அவர் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாகச் சொன்ன நாளுக்கு முன்பே குற்றவாளிகள் கைதானார்கள்.
சென்னைப் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்தொல்லைக்கு உள்ளான விவகாரத்தில் ஆளும் திமுக.,வின் செயல்பாடு, காவல் துறையின் கண்மூடித்தனமான ஆளும்கட்சி அடிமைப் போக்கு இவற்றைக் கண்டித்து தன்னையே சாட்டையால் அடித்துக் கொண்டு, ஒரு சகோதரிக்கு உதவ முடியாமல் போன கையறு நிலையில் வெளிப்படுத்திய காட்சி மக்கள் மனத்தை வெகுவாகவே பாதித்தது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் கைதான திமுக., நிர்வாகி ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்றும், ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு இனி இடமில்லை அவ்வாறு கேட்பது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அரசு வழக்கறிஞர் கூறியது சந்தேகத்தை எழுப்பியது. இந்த விவரமெல்லாம் தெரிந்துதான், இது போன்ற உண்மைகள் வெளிவரக்கூடாது என்ற காரணத்திற்காகவே பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே இருப்பார் என்ற அறிவிப்பு வெளியானதா? இந்த அறிவிப்பிற்கும் இந்த நிகழ்விற்கும் ஏதும் தொடர்பு உள்ளதா என்றெல்லாம் மக்கள் கேள்வி எழுப்பிய போது, தான் கையில் எடுத்த விவகாரத்தை மக்கள் முன் வைத்தார் அண்ணாமலை.
யார் அந்த சார்? – அண்ணா பல்கலை கழக மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் 5 மாதத்தில் தீர்ப்பு பெற்றுக் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தன்னைத் தானே பாராட்டிக் கொள்கிறார். ஆனால் இந்த விவகாரத்தில் இன்னும் விடை கிடைக்காத கேள்விகள் ஏராளமாக இருக்கிறது – என்று சொல்லி கேள்விகளை முன்வைத்தார் அண்ணாமலை.
இந்த வழக்கு விசாரணை நடக்கும் போதே, “ஞானசேகரனின் செல்போன் கால் ரெக்கார்டஸ் என்னிடம் இருக்கிறது, விசாரணை முடியும் போது இதை வெளியிடுவேன்” என்று அண்ணாமலை பகிரங்கமாக அறிவித்தார். அதை சொன்னதற்கான காரணம், விசாரணைக் குழுவுக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கை. வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாமல் போனால் அவர்களும் மாட்டிக்கொள்வார்கள் என்று மறைமுகமான செய்தி அதில் இருந்தது.
அண்ணாமலை சொன்னது போலவே ஞாணசேகரன் யார் யாரிடம் பேசினார் என்ற விவரத்தை வெளியிட்டார் அண்ணாமலை. அவர் வெளியிட்ட விவரங்கள் – 23 ம் தேதி இரவு பாலியல் சம்பவம் முடிந்த அந்த இரவே ஞானசேகரன் ஒரு காவல்துறை அதிகாரியுடன் பேசியிருக்கிறார். அதாவது குற்ற சம்பவம் செய்த ஒருவர் அது முடிந்த பிறகு காவல்துறை அதிகாரியிடம் பேசியிருப்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. 8.55 மணிக்கு காவல்துறை அதிகாரிக்கு போன் செய்திருக்கிறார். அதே காவல்துறை அதிகாரி 6 நிமிடங்களுக்கு பிறகு ஞானசேகரனுக்கு திரும்ப அழைத்திருக்கிறார். இது பற்றி விசாரிக்கப்பட்டதா என்பது முதல் கேள்வி.
24 ம் தேதி சம்பவம் நடந்த மறுதினம், திமுக.,வைச் சேர்ந்த வட்டச் செயலாளர் கோட்டூர் ஷண்முகம் என்பவரிடம் 5 முறை பேசியிருக்கிறார் ஞானசேகரன்.
காலை 7 மணியிலிருந்து 4 மணிக்குள் 5 முறை பேசியிருக்கிறார். அதன் பிறகு காவல்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஞானசேகரன் இரவு விடுவிக்கப்பட்டிருக்கிறார். வெளியே வந்த ஞானசேகரன் மீண்டும் கோட்டூர் ஷண்முகத்திடம் பேசியிருக்கிறார்.
24 ம் தேதி ஞானசேகரனை காவற்துறை எதற்காக விடுவித்தது? திமுக.,வின் வட்டச் செயலாளர் கோட்டூர் ஷண்முகம் விசாரிக்கப்பட்டாரா? வெளியே வந்த ஞானசேகரன் ஆதாரங்களை அழித்தாரா? சிறப்பு விசாரணைக் குழு பதிவுசெய்த வழக்குகளில் ஆதாரங்களை அழித்தார் என்பதும் ஒரு வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளி ஆதாரங்களை அழிப்பதற்காகத் தான் 24 ம் தேதி ஞானசேகரன் விடுதலை செய்யப்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது.
24 ம் தேதி ஞானசேகரன் வெளியே வந்த பிறகு கோட்டூர் ஷண்முகம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியத்திடம் பேசுகிறார். சில நிமிட இடைவெளியில் சுப்பிரமணியம் சண்முகத்தை அழைக்கிறார். அதேபோல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை பார்க்கும் நடராஜன் என்பவருடன் கோட்டூர் ஷண்முகம் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். 23 ம் தேதியில் இருந்து 26ம் தேதி வரை இருவரும் 13 முறை பேசியிருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தியதா என்பது அடிப்படைக் கேள்வி.
அதே போல் 24ம் தேதி இரவு ஞானசேகரன் காவல்துறை விசாரணை முடித்து வெளிவந்த பிறகு, கோட்டூர் ஷண்முகம் ஒரு காவல்துறை அதிகாரியிடம் பேசுயிருக்கிறார். இதன் பிறகு தான் 25 ம் தேதி தான் ஞானசேகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார். – என்ற தனது கேள்விகளை அடுக்கடுக்காக ஒரு புலனாய்வு அதிகாரி முன்வைப்பது போல் மக்கள் முன் வைத்தார் அண்ணாமலை.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்கறிஞர் பேசும் போதும், வழக்கு போடாமல் தடுப்பதற்கு காவல்துறை முயற்சி செய்தது என பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். ஞானசேகரன் கைது செய்யப்பட்ட பிறகு, “யார் அந்த சார்” என்ற கேள்வி அனைவராலும் கேட்கப்பட்ட பிறகு ஆணையர் அருண் பேட்டியளித்தார். அதில் அண்ணா பல்கலை சி சி டி வி வேலை செய்யவில்லை என்று சொன்னார். ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என்று சொன்னார்.
ஆனால் இதற்கு பின்னணியில் இவ்வளவு விஷயம் நடந்திருக்கிறது என்பது பொதுமக்களுக்கு இப்போதுதான் தெரிய வந்தது. அண்ணா பல்கலை வழக்கு விசாரணை பற்றி மூச்சுக்கூட விடாமல் பாதுகாத்து எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை ஏன் வெளியிடப்படவில்லை – என்பது போன்ற பல கேள்விகள் இந்தச் சம்பவத்தில் கேட்கப்பட்டு வருகின்றன.
மேலும் சம்பவம் நடந்த 23 ம் தேதியில் இருந்து அடுத்த 10 – 15 நாட்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியம் மீடியா கண்களில் படாமல் காணாமல் போனது ஏன்? அவருக்கும் ஞானசேகரனுக்குமான தொடர்பு குறித்து இதுவரை அமைச்சர் பேசவில்லையே ஏன்? என்ற கேள்விகளும் இப்போது முன்வைக்கப்படுகின்றன.
எந்த ஒரு பத்திரிகையாளரும் மா சுப்ரமணியத்திடம் ஞானசேகரன் குறித்தோ, அவர் வீட்டில் சென்று பிரியாணி சாப்பிட்டது குறித்தோ மா சுப்பிரமணியம் எங்கு சென்றாலும் ஞானசேகரன் பின்தொடர்ந்து வந்தது குறித்தோ அமைச்சரிடம் கேள்வியே கேட்கவில்லையே ஏன்? சம்பவம் நடந்த 10 – 15 நாட்களுக்கு முதல்வரின் நிகழ்ச்சியில் கூட அமைச்சர் மா சுப்பிரமணியம் கலந்து கொள்ளவில்லையே ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வாரா முதல்வர் என்றும் அண்ணாமலையின் கேள்விகளால் பொதுமக்களிடமும் இந்தக் கேள்விகள் வெளிப்படையாகச் சென்றன.
இதனிடையே, இந்த விவகாரத்தில், செல்வப்பெருந்தகைக்கு ஏனிந்த பதற்றம்? என்று கேட்டு அண்ணாமலை வெளியிட்ட பதிவில், “அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என்று கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டமைடைகிறார் என்று தெரியவில்லை. ஒரு பொதுப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு. திரு. செல்வப்பெருந்தகை அவர்கள், எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்சப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன். – என்று குறிப்பிட்டு கேள்வி எழுப்பினார்.
https://x.com/annamalai_k/status/1929855807279259943
குறிப்பாக, கல்வி விஷயத்திலும் அவர் எழுப்பிய கேள்விகள் கவனம் பெற்றன. ஆளுநர் விவகாரத்தில் ஆளும் கட்சி கடைப்பிடித்த விரோதப் போக்கு, அதன் உள்நோக்கம் இவற்றை அண்ணாமலை பொதுவில் பேசி மக்களிடம் தெளிவை ஏற்படுத்தினார்.
“சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பேராசிரியர்களும், ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு, போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறையை கேலிக்கூத்தாக்கியிருக்கும் அவலநிலையை உருவாக்கியிருப்பதுதான் முதலமைச்சர் திரு முக ஸ்டாலின் ஆட்சியின் சாதனை. திமுக ஆட்சியில், வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுகள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தின் கடன் சுமை, ₹ 9 லட்சம் கோடிக்கும் அதிகமாகிவிட்டது. ஆனால், அடுத்த தலைமுறையை உருவாக்கும் ஆசிரிய பெருமக்களுக்கு, மாத ஊதியம் ஒழுங்காக வழங்க முடியவில்லை. இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? உடனடியாக, பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மே மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், மீண்டும் இது போன்ற நிலையில், ஆசிரிய பெருமக்களை நிறுத்த வேண்டாம் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்”. – என்று கல்வி தொடர்பிலான ஆற்றாமையை வெளிப்படுத்தினார் அண்ணாமலை.
இது போன்று மேலும் பல முக்கியப் பிரச்னைகளை, பொதுமக்களின் மற்றும் வேறூ அரசியல் கட்சித் தலைவர்களின் கவனம் பெற்றோ பெறாமலோ கேட்கத் தவறிய கேள்விகளை எழுப்பியதன் மூலம், ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை அண்ணாமலை ஒருவரே செய்வது போன்ற பிரமை மக்களிடம் தோன்றியிருக்கிறது.





