
திருவிழாக்களின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த, உள்ளாட்சி அமைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை கூறியதற்கு, “இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் இவ்வளவு கட்டுப்பாடா? இதனை
உயர் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கோரியிருப்பதாவது…
திருவிழாக்களின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என நீதிமன்ற தீர்ப்பு அமலில் இருந்தது. தற்போது 14 மாவட்டங்களில் திருவிழாவின் போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் எனவும், நிகழ்ச்சி தொடர்புடைய ஏற்பாட்டாளர்கள் உள்ளாட்சி அமைப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்படும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆன்மீக விழாக்களில் ஆடல் பாடல் மற்றும் ஆபாசமான நிகழ்ச்சிகள் நடத்துவது ஏன்? என கேட்டால் அதில் நியாயம் இருக்கிறது. அதை விட்டுவிட்டு பணம் செலுத்தினால் நடத்திக் கொள்ளலாம் என்றால் ஆபாச ஆடல் பாடல்களை நடத்திக் கொள்ளலாமா? எனும் கேள்வி எழுகிறது.
எத்தனையோ அரசியல் கட்சிகள் தங்களது மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் இது போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இந்து மதத்தை தவிர வேற்று மத விழாக்களிலும் இதுபோல சில நிகழ்ச்சிகள் உள்ளன. இவர்களுக்கெல்லாம் இந்த உத்தரவு பொருந்துமா?
ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள கோவில்களில் கடவுளை தரிசனம் செய்ய காசு வாங்குகிறார்கள். கடவுளை காட்சி பொருளாக்கி பக்தர்களை பொருளாதார தீண்டாமையை கடைப்பிடிக்க வைக்கிறார்கள்.
இப்போது திருவிழாக்களில் நிகழ்ச்சி நடத்தவும் பணம் செலுத்த வேண்டும் என்பது இந்துக்களின் வழிபாட்டு உரிமையை முடக்கும் செயலாகும். இந்துக்களின் பழக்கவழக்கங்கள் திருவிழாக்கள் போன்றவற்றில் மட்டும் மூக்கை நுழைக்கும் உத்தரவாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது.
ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்தலாம், ஆபாசம் கூடாது என சில கட்டுப்பாடுகளை விதிப்பதை வரவேற்கிறோம். தவிர பணம் செலுத்தி விட்டு நடத்திக் கொள்ளுங்கள் என்பது பக்தர்களினுடைய மனதை காயப்படுத்துகின்ற செயலாகும்.
ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்துவதற்காக செலுத்தும் பணத்தை வைத்து தான் நீர்நிலைகளை தூர்வார வேண்டுமா? என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். நீர் நிலைகளை பாதுகாப்பது, பள்ளிக்கூடங்கள் அமைப்பது, சமுதாய கூடங்கள் அமைப்பது என்பதெல்லாம் அரசாங்கத்தினுடைய வேலை.
ஒருவேளை இதற்கு பணம் செலுத்தாவிட்டால் நீர்நிலைகளை அரசாங்கம் தூர் வாராமல் அப்படியே விட்டு விடுமா?
தமிழர்களின் கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் போன்ற நூற்றுக்கணக்கான கலைகள் கோவில்களின் மூலமாகத்தான் வளர்ந்தன. ஆனால் இன்று படிப்படியாக பல கலைகள் நம் கண் முன்னே அழிந்து வருகின்றன. கிராமிய கலைஞர்களுடைய வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வருகிறது.
இதை பாதுகாக்க வேண்டிய அரசாங்கமோ வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்க்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க நீதிமன்றமும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு பணம் செலுத்தி விட்டு நடத்திக் கொள்ளலாம் என்றால் பல கலைகள் அழிந்து போகும் சூழ்நிலை உருவாகும்.
அப்படியே நீதிமன்றம் சொன்னபடி 25 ஆயிரம் ரூபாய் பணத்தை விழா ஏற்பாட்டாளர்கள் செலுத்துகிறார்கள் என்றால், உள்ளாட்சி அமைப்புகள் அந்த பணத்தைக் கொண்டு நீர்நிலைகளை தூர்வாருவார்களா? அல்லது அந்தப் பணத்திலும் ஊழல் செய்வார்களா? என்பதை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது.
இந்து விழாக்களுக்கு மட்டும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கும் இந்தத் தீர்ப்பை மாண்புமிகு நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.





