
நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம்… என்று குறிப்பிட்டு, திமுக., அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார் தமிழக பாஜக., முன்னாள் தலைவர் கு. அண்ணாமலை.
ஸ்டாலினின் கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் :
நீதிமன்றத்திலோ, மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம்.
எப்போதெல்லாம், மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும், திமுக அசிங்கப்படுகிறதோ, அப்போதெல்லாம், ஒரு திரைப்படத்தில் வரும் வடிவேலு காமெடியைப் போல, ஹிந்தி எதிர்ப்பு அல்லது, மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற பெட்டியைத் திறப்பது வழக்கம். அறுபது ஆண்டுகளாக, அவரது தந்தை காலத்தில் தொடங்கி, அவரது பேரன் காலத்திலும், அதே நாடகத்தை அரங்கேற்ற முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கூச்சமாக இல்லையா?
குழப்பத்தில் இருக்கும் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சில விளக்கங்கள்.
ஊழலைப் பற்றிப் பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அதிலும், முன்னாள் சாராய அமைச்சரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு Washing Machine பற்றி முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் பேசுவது உச்சகட்ட நகைச்சுவை.
அனைத்துச் சட்டங்களும், திட்டங்களும், அந்தந்த மாநிலங்களில் மாநில மொழிகளிலேயே மொழிபெயர்த்து அழைக்கப்படுகின்றன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அந்தந்த அங்குள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள், தலைவர்களைப் புறக்கணித்து விட்டு, உங்கள் தந்தையின் பெயரையும், சிலையையும் வைப்பதை விடவா ஆணவம் வந்துவிடப் போகிறது?
தாய்மொழி தமிழை, பிழையின்றிப் பேச, எழுதத் தெரியாதவர்களை அமைச்சர்களாக வைத்துக் கொண்டு, ஐம்பது ஆண்டு காலமாக, யுனெஸ்கோ விருது உள்ளிட்ட போலி வரலாறுகளை உருவாக்கி, நமது மாணவர்களை மட்டுப்படுத்தியதை விட தரம் தாழ முடியாது என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா?
நீங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தபோது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களை ஆளுநர்களாகக், கேட்டுப் பெற்று, ஆடிய ஆட்டத்திற்குத்தான் பத்து ஆண்டுகள் ஆட்சியைப் பறிகொடுத்து, அதே ஆளுநர் மாளிகையில் சட்டையைக் கிழித்துக் கொண்டு நின்ற வரலாற்றை தமிழக மக்கள் அறிவார்கள். உங்களுக்கு வேண்டப்பட்டவர்களை நியமிக்க, அது டாஸ்மாக்கைக் கையாளும் அமைச்சரவை இல்லை.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆர்.கே. நகர் தொகுதியில் போலி வாக்காளர்களை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்ததை முதலமைச்சர் திரு ஸ்டாலின் மறந்துவிட்டாரா? போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தால். முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார்?
இரும்பின் தொன்மை குறித்த ஆய்வு, கீழடி ஆய்வறிக்கை இவை எல்லாம். உலக அரங்கில் செல்லும்போது, நமது இந்திய நாட்டின் வரலாறாகவே பார்க்கப்படும். உலகின் பல நாடுகளும் ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கும்போது. நாமும் அதற்கேற்ப கூடுதல் ஆய்வுகளும், தகவல்களும் வழங்க வேண்டும். அவற்றைக் கேட்டால். திமுக அரசு தர மறுப்பது ஏன்?
நீதிமன்றத்தில், ஒன்றல்ல இரண்டல்ல. நான்கு வழக்குகளில் ஒரே நாளில் குட்டு வாங்கிய திமுக அரசு, அதை மடைமாற்ற வேறு வழியின்றி தமிழக நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்களை மீண்டும் அனுப்பியிருக்கிறது. இதே கேள்விகளை, திமுக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள். மாற்றி மாற்றி வெவ்வேறு நேரத்தில், வெவ்வேறு தளங்களில் கேட்பதும், ஒவ்வொரு முறையும் நாம் அவர்களுக்குப் பொறுமையாக அதே பதிலை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
எழுப்பிய கேள்விகளும் பதில்களும்…
கேள்வி: மாநிலங்களை கலந்தாலோசிக்காமல் GST சீர்திருத்தம் COOPERATIVE FEDERALISM என்பது வெற்று முழக்கமா?
பதில்: GST திருத்தத்தால் மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதில் திமுக அரசுக்கு என்ன கோபம் என்று புரியவில்லை.
கேள்வி: NEP இந்தியை திணித்து தமிழ்நாட்டு குழந்தைகள் கல்வியை சிதைப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?
பதில்: புதிய தேசிய கல்விக்கொள்கையில் இந்தி திணிக்கப்படவில்லை என்று தமிழகத்தின் சாமானிய மக்கள் அனைவருக்கும் புரிந்துவிட்டது. இந்தி திணிப்பு என்ற புளித்துப்போன பொய்யை இன்னும் எத்தனை நாட்களுக்குச் சொல்வீர்கள்?
மாற்றாந்தாய் மனப்பான்மை என்றால் எது தெரியுமா? திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழி கற்கும் வாய்ப்பை வழங்கி, அதை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுப்பதே மாற்றாந்தாய் மனப்பான்மை.
கேள்வி: உ.பி, குஜராத், மகாராஷ்டிராவுக்கு அளிக்கப்படும் சாலை திட்டங்களை தமிழ்நாட்டிற்கு தராதது ஏன்?
பதில் : கடந்த 4 ஆண்டுகளில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செயல்படுத்த, 46,617 கோடி ரூபாய் வழங்கியுள்ளது நமது மத்திய அரசு. இங்கே திமுக அரசு இந்த சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கையும் எடுக்காமல், மூலப்பொருட்கள் கிடைப்பதில் கூட தட்டுப்பாடு ஏற்படும் சூழலை உருவாக்கி, அற்ப அரசியல் செய்து வருவதை மக்கள் நன்கு அறிவார்கள்.
கேள்வி: புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தென்னக ரயில்வேவுக்கு மட்டும் ஏன் பாரபட்சம்?
பதில்: கடந்த 4 ஆண்டுகளில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த, 33,467 கோடி ரூபாய் வழங்கியுள்ளது நமது மத்திய அரசு. இந்த நிதியாண்டு தொடங்குகையில், தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை செயல்படுத்த தேவையான மொத்த நிலம் 4288 ஹெக்டேர். அதில் தமிழக அரசு கையகப்படுத்திய நிலத்தின் அளவு 991 ஹெக்டேர். அதாவது, ரயில்வே திட்டங்களை செயல்படுத்த தேவையான நிலத்தில் 22 சதவீத நிலங்களை மட்டுமே திமுக அரசு கையகப்படுத்தி வழங்கியுள்ளது. உண்மை இப்படி இருக்கையில் இந்தக் கேள்வியை எழுப்ப உங்களுக்கு கூச்சமாக இல்லையா?
கேள்வி: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு அனுமதி தர ஏன் இவ்வளவு தாமதம்?
பதில்: மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான DPR, 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. ஆனால், DPR உடன் வழங்கவேண்டிய Mobility Plan மற்றும் Alternative Analysis Report ஆகிய இரண்டை இணைக்காமல் அரைகுறை DPRஐ தமிழக அரசு கொடுத்துள்ளது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், விடுபட்டஇந்த இரண்டு ரிப்போர்ட்களை மத்திய அரசிடம் கொடுத்தது திமுக அரசு. நடப்பாண்டு ஆரம்பத்தில், இந்த DPRக்கு ஒப்புதல் பெற 9 மாதங்கள் ஆகும் என்று CMRL நிர்வாக இயக்குனர் தெளிவுபடுத்தினார். அரைகுறை DPR கொடுத்தது யார் தவறு?
கேள்வி: தமிழ்நாடு அரசின் நிதியில் கட்டப்படும் வீடுகளில் பிரதமர் பெயர் எதற்கு?
பதில்: தமிழக மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு திரு முக ஸ்டாலினின் பெயர் எதற்கு? திமுக காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சி செய்த காலத்தில், பிரதமரின் திட்டம் என்று பொதுவாக இல்லாமல், இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியோரின் பெயரில் திட்டங்கள் தொடங்கப்பட்ட போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள்?
கேள்வி: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி ரூ.975 கோடி நிதி எங்கே?
பதில்: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கடந்த ஆண்டுகளில் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 39,339 கோடி ரூபாய். கிராமப்புற மக்கள்தொகை குறைவாக உள்ள மாநிலங்களில் அதிக நிதி பெற்ற மாநிலம் தமிழகம். ஏன்?
ஒவ்வொரு ஊராட்சியிலும் பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நிதி இடைத்தரகர்கள் போல் உள்ள திமுக நிர்வாகிகள் பொய்யான விவரங்கள் வழங்கி பல லட்ச ரூபாய் ஊழல் செய்து வருகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல ஈரோடு மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் நடந்த ஊழலை மக்கள் மன்றத்தில் வைத்தோம். என்ன நடவடிக்கை எடுத்தது ஊழல் திமுக அரசு?
கேள்வி: ஓய்வூதிய திட்டத்திற்கு வெறும் ரூ.200 தருகிறீர்கள். ஆனால் தமிழ்நாடு அரசு ரூ.1,200 வழங்குகிறது.
பதில்: மத்திய அரசின் கிசான் கடன் அட்டை திட்டத்தில் கருணாநிதியின் புகைப்படம் போடுவது ஏன்?
கேள்வி: ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய ரூ.3,709 கோடி நிதி ஏன் இன்னும் விடுவிக்கப்படவில்லை?
பதில்: ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஜல் ஜீவன் திட்டத்திற்கு ஒதுக்கும் நிதியை செலவிடாமல் வைப்பு வைத்திருந்த வரலாறு தான் திமுக அரசுடையது. பயன்பாட்டு சான்றிதழ் வழங்காமல் நிதி பெற இயலாது என்பது கூடவா நிதி அமைச்சருக்கு தெரியவில்லை?
கேள்வி: நாட்டின் மக்கள் தொகையில் தமிழ்நாடு 6%, ஆனால், 4% மட்டும் நிதிப் பகிர்வு அளிப்பது ஏன்?
1969ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ள நிதிப்பகிர்வு நடைமுறை இது. கடந்த 55 ஆண்டுகளில் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதிப்பகிர்வில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு, அப்போது 32 சதவீதமாக இருந்த நிதிப்பகிர்வை, 42 சதவீதத்திற்கு உயர்த்தியது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடிஅவர்கள்.
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி பகிர்வு மற்றும் மானியம் (Devolution + Grants) 2004-05 to 2013-14: 1,52,902 கோடி ரூபாய் 2014-15 to 2024-25: 6,21,938 கோடி ரூபாய். ஓரவஞ்சனை செய்தது யார்?
அரைகுறை திமுக அரசுக்கு ஆறு கேள்விகள்
1. 2023-24ஆம் ஆண்டு CAG அறிக்கையின்படி, 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14,808 கோடி ரூபாய் நிதி செலவிடப்படாமல் வீணாக்கியது ஏன்?
2. 2023-24ஆம் ஆண்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட மின்சார வரி 1,985 கோடி ரூபாய். இதில், 507 கோடி ரூபாயை TANGEDCO நிறுவனம் ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்தாமல் மடைமாற்றியது ஏன்?
3. 2021-22 முதல் 2023-24 வரையிலான 3 ஆண்டுகளில் மத்திய அரசிடம் பெற்ற GST இழப்பீடு தொகையான 28,024 கோடி ரூபாயில் 10 சதவீதம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டும் என்பது மாநில திட்டக்குழுவின் பரிந்துரை. ஆனால் இவை வழங்கப்படவில்லை. ஏன்?
4. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வருவதற்காக, 511 வாக்குறுதிகளை கொடுத்தீர்கள். இவையன்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனி தனியாக தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தது திமுக. இவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாமல் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
5. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம் என்று கூறி, கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் புதிதாக கடன் வாங்கியது ஏன்?
6. தமிழகத்தில், மத்திய அரசின் திட்டங்களில் நடக்கும் ஊழல்களை ஊக்குவிக்கும் விதமாக, திமுக அரசு கள்ள மௌனத்தில் இருப்பது ஏன்?
இவற்றிற்கு பதிலளிக்க முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு திராணி இருக்கிறதா? அடுத்த முறை நீதிமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ திமுக அசிங்கப்படும்போது, அறுபதாண்டு கால பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வராமல், புதியதாகச் சிந்தித்து வரக் கேட்டுக் கொள்கிறோம்.
என்றும் தேசப் பணியில்
K. அண்ணாமலை





