அதிர்ச்சி… அபாயம்!பொத்தேரி எஸ்.ஆர்.எம். கல்லூரியில் மாணவர்களின் கொலைவெறித் தக்குதல்; கத்தி துப்பாக்கியுடன்!

Published:

srm students fight - 2026

சென்னையில் காட்டாங்குளத்தூரை அடுத்த பொத்தேரியில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள் சிலர் கைகளில் கத்தி, துப்பாக்கி என சண்டையிட்டுக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு குழுவாக கேன்டீனுக்கு சென்றபோது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகக் கூறப் படுகிறது!

இந்த சண்டையில் கத்தி, கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தியதால் அங்கு கூடியிருந்த மாணவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினர். கையில் பட்டாக்கத்தி மற்றும் துப்பாக்கி வைத்துக் கொண்டு, மோதலில் மாணவர்கள் ஈடுபட்ட இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களைத் தேடினர். எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவர்களிடம் கத்தியும், கள்ளத் துப்பாக்கிப் புழக்கமும் அதிகரித்திருப்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

முன்னரும் இது போல் கத்தியாலும் துப்பாக்கி கொண்டும் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் போலீசார் உறுதியான நடவடிக்கை எடுத்ததில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து துப்பாக்கி சுலபமாக அனைவரது கையிலும் கிடைக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டான சம்பவமாக இதனை பொதுமக்கள் குறிப்பிடுகின்றனர்.

ரவுடிகளின் கையில் இருக்கும் கள்ளத்துப்பாக்கிகள் தற்போது கல்லூரி மாணவர்களிடையே சுலபமாக கிடைப்பது, இப்பகுதியில் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொத்தேரி பகுதியில் மாணவர்களுக்கு தங்கள் பிளாட்களை வாடகைக்குக் கொடுத்தவர்கள், தங்கள் இடங்களில் மாணவர்களின் நடமாட்டத்துக்கு இடம் கொடுத்தவர்கள் என பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Related articles

Recent articles

spot_img