தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, தாமதிக்காமல் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் சங்கங்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது
சென்னை, தாம்பரத்தில் இருந்து, திருநெல்வேலி மற்றும் செங்கோட்டைக்கு, அந்தியோதயா ரயில்கள் இயக்கப்படும்’ என, கடந்த ஆண்டு நவம்பரில், தெற்கு ரயில்வே கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.
இந்த ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிப்பு தாமதமானதால், குறிப்பிட்ட நாளில் இயக்கவில்லை.இந்நிலையில், தாம்பரம் – திருநெல்வேலி இடையே, ஜூலையில் இருந்து, அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா ரயில் இயக்கப்படவில்லை.இந்நிலையில், ஆக., 14ல், தெற்கு ரயில்வே, புதிய ரயில் கால அட்டவணை வெளியிடப்பட்டது.
அதில், கடந்த ஆண்டு அறிவிக்கபட்ட அந்தியோதயா ரயில், நேரம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய ரயிலாக மீண்டும் அறிவிக்கப்பட்டது.இந்த ரயில், தாம்பரத்தில் இருந்து, தினமும் காலை, 7:00 மணிக்கும், செங்கோட்டையில் இருந்து, காலை, 6:00 மணிக்கும் இயக்கப்படும். மற்ற விபரங்கள், விரைவில் அறிவிக்கப்படும் என, தெரிவித்தது.
இந்த ரயிலுக்கு, நான்கு மாதங்களாக, பெட்டிகள் தயாராக இருந்தும், ரயில் சேவை இன்னும் துவங்கப்படவில்லை.’இந்த ரயிலை, இனியும் தாமதிக்காமல் இயக்க வேண்டும்’ என, தஞ்சை பயணியர் சங்க ஆலோசகர் கிரி, செங்கோட்டை ரயில் பயணியர் சங்க செயலர் கிருஷ்ணன் ஆகியோர், தெற்கு ரயில்வேக்கு, மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, தென் மாவட்ட ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது.
செங்கோட்டை அந்தியோதயா ரயில், முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் என்பதால், தென் மாவட்ட பயணியருக்கு மிகவும் பயனுள்ளாக இருக்கும். எனவே, தாம்பரம் – செங்கோட்டை அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, இனியும் தாமதிக்காமல், உடனடியாக இயக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




