எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று செவ்வாய் கிழமை விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018-ம் ஆண்டில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், முதலமைச்சராக பதவி வகித்த பழனிசாமி மீதான இந்தக் குற்றச்சாட்டு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் விசாரிக்க வேண்டியிருப்பதால், இந்தப் புகார் குறித்து சி.பி.ஐ. விசாரித்து, முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டில் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க தலைமை நீதிபதி அமர்வில் தமிழக அரசு வழக்கறிஞர் ரஞ்சித்குமார் இன்று முறையீடு செய்தார். வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணை முடங்கியிருப்பதாக தமிழக அரசு தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விரைந்து பட்டியலிடப்படும் என உறுதி அளித்துள்ளது.
தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை விசாரணைக்கு வருகிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரிக்கிறது.
