கேரளாவில் மலையாளிகள் அதி விமர்சையாக கொண்டாடும் திருவோணம் பண்டிகை செப் 7முதல் நான்கு நாட்கள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது.திருவோணம் செப் 8இல் கொண்டாடப்படுகிறது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், வரும் 8ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பிரசித்தி பெற்ற ஓணம் பண்டிகை, வரும் 8ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஒரு வாரமாக பல்வேறு விழாக்கள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் வசிக்கும் கேரள மாநிலத்தவர் ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில், உள்ளூர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.இதன்படி, சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு, வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஈரோடு, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும், வரும் 8ம் தேதி உள்ளூர் விடுமுறை என, தமிழக அரசு நேற்று அறிவித்துஉள்ளது.இந்த நிலையில் தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தில் செப்8இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களில், பள்ளி, கல்லுாரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. அதற்கு பதில், வேறொரு நாளில் வேலைநாளாக கடைப்பிடிக்கப்படும்.கொரோனா பரவல் காரணமாக, இரு ஆண்டுகளாக, கேரளாவில் கொண்டாட்டங்கள் இல்லை. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், ஓணம் பண்டிகை களைகட்டி உள்ளது.
ஓணம் பண்டிகையையொட்டி, கேரளா செல்லும் ரயில்கள் ‘ஹவுஸ்புல்’ ஆகியுள்ளன.ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக, தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தினர், ரயில்களில் சொந்த மாநிலத்துக்கு செல்லத் துவங்கியுள்ளனர்.காரைக்கால் – எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ், சென்னை – ஆலப்புழா எக்ஸ்பிரஸ், சென்னை – திருவனந்தபுரம் சூப்பர் பாஸ்ட், ஹைதராபாத் – திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ்.புதுடில்லி – திருவனந்தபுரம் கேரளா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட தினசரி ரயில்கள், ஹிம்சாகர், அகல்யநகரி, கன்னியாகுமரி, ஸ்வர்ணயஜெயந்தி, பாட்னா உள்ளிட்ட வாராந்திர ரயில்களில் டிக்கெட் முன்பதிவு நிறைவடைந்துள்ளது.அந்த ரயில்களில் காத்திருப்போர் பட்டியல், 100 முதல், 250ஐ கடந்துள்ளது.ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:பணி நிமித்தமாக வெளியூரில் வசிப்பவர்கள், சொந்த ஊருக்கு வருகின்றனர். அதனால், ரயில்கள் ஹவுஸ்புல் ஆகியிருக்கின்றன. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஒரு வாரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஓணம் பண்டிகை நாட்களில் பூக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.தமிழகத்தில் தோவாளை மதுரை மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.