
கேரளத்தில் ராகுல்காந்தியின் பாதயாத்திரைக்கு கிடைத்துவரும் ஆதரவால் கேரளா பாஜக தரப்பிலும் தேர்தலுக்கு முன்னதாக ஆன்மிக யாத்திரை ஒன்றை நடத்த திட்டமிடல் துவங்கி உள்ளதாக தெரிகிறது.
கேரளத்தில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 தொகுதிகள் இப்போது காங்கிரஸ் வசம் உள்ளது. இதைக் கவனத்தில் கொண்டு தனது இந்திய ஒற்றுமை பயணத்தில் கேரளத்துக்கு மட்டும் 18 நாட்களை ஒதுக்கி இருக்கிறார் ராகுல்காந்தி.
2024 மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளையும் வென்றெடுக்கும் வகையில் அங்கே வியூகங்களை வகுத்து வரும் காங்கிரஸ், நடை பயணத்தில் இந்து மத தலைவர்களையும் மறக்காமல் ராகுலைச் சந்திக்க வைத்து வருகிறது.
அப்படித்தான், யாருமே எதிர்பாராத வகையில் மாதா அமிர்தானந்த மயியையும் சந்தித்து ஆசிபெற்றார் ராகுல். கூடவே ராகுலின் படகு பயணம் மாற்று திறனாளிகளுடனான கலந்துரையாடல் என தொடரும் இந்த சந்திப்புகளால் பாஜக முகாம் படபடத்துக் கிடக்கிறது. கேரளத்தில் ராகுலின் யாத்திரைக்கு கிடைத்துவரும் ஆதரவை சமன் செய்யவேண்டுமானால் பாஜக தரப்பிலும் தேர்தலுக்கு முன்னதாக ஆன்மிக யாத்திரை ஒன்றை நடத்த வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் டெல்லி தலைமைக்கு தகவல் அனுப்பி இருக்கிறாராம்.
இந்த யாத்திரையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்பதும் சுரேந்திரன் கூடுதல் கோரிக்கையை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
