அதே கண்கள் தந்திரா பாடல்
பொங்கலுக்குள் சசிகலா முதல்வர் பதவி ஏற்பு?
சென்னை:
பொங்கலுக்கு முன்பாகவே முதல்வர் பதவியை ஏற்பார் சசிகலா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ பன்னீர் செல்வம் முதல்வர் ஆனார். அவருக்கு மோடி அரசின் ஆதரவும் உள்ள நிலையில், அமைச்சர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை சசிகலா பதவி ஏற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பியுள்ளனர்
அனைத்து மாவட்ட செயலாளர்களும் சசிகலா முதல்வராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, அதை போயஸ் கார்டனில் சசிகலாவைச் சந்தித்துக் கொடுத்துள்ளனர். ஏற்கெனவே அனைத்து அமைச்சர்களும் சசிகலா முதல்வராக வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
குறிப்பாக அமைச்சர்கள் தங்கமணி, உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ அவர்கள் சசிகலா போட்டியிட்டு எம்எல்ஏவாக வசதியாக தங்கள் தொகுதியையே விட்டுத் தருவதாகவும் கூறி வருகின்றனர்.
திங்கள் நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பி துரை சசிகலா முதல்வர் பதவி ஏற்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார். இதைத் தொடர்ந்து நேற்று கார்டனில் சசிகலாவைச் சந்தித்த முதல்வர் பன்னீர் செல்வம், தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சசிகலா முதல்வராக பதவி ஏற்பது குறித்து மூத்த தலைவர்களும் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புத் தேதி அறிவிப்பதற்குள் சசிகலா முதல்வராக பதவி ஏற்பார் என்றும், அவர் ஆண்டிப்பட்டி அல்லது திருமங்கலம், அல்லது நன்னிலம் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
sasikala-swear-as-cm-before-pongal
கட்சி நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்திக்கிறார் சசிகலா
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அன்று இரவோடு இரவாக தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்தது.
அப்போது, தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் அனைவரும் போயஸ் கார்டன் இல்லம் சென்று ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்கள். மேலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராக பதவி ஏற்கவும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 29-ந் தேதி சென்னையில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவை தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மான நகலும் அன்றே வி.கே.சசிகலாவிடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில், 31-ந் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த வி.கே.சசிகலா, கட்சியின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இதற்கிடையே, அ.தி.மு.க. வின் அமைச்சர்கள் சிலர், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்தனர். அதாவது, கட்சியும், ஆட்சியும் ஒருவர் கையில் இருந்தால் தான் நன்றாக இருக்கும் என்று அதற்கு அவர்கள் விளக்கம் அளித்தனர். முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வி.கே.சசிகலாவுக்கு ஆதரவு பெருகியது. நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளருமான மு.தம்பிதுரையும், வி.கே.சசிகலா தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று அறிக்கை மூலம் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைத்து அமைச்சர்களும், மாநில நிர்வாகிகளும் போயஸ் கார்டன் சென்று வி.கே.சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினார்கள். இதனால், வி.கே.சசிகலா முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து ராஜினாமா கடிதம் அளிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதாவின் ஆள் உயர உருவப்படம் திறக்கப்பட்டதாகவும், அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் முதல்-அமைச்சர் உள்பட அனைத்து அமைச்சர்களும் வந்தார்கள் என்றும் தகவல் பரவியது.
இந்த பரபரப்புகளுக்கு இடையே அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இதய தெய்வம் புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் நல்லாசியோடு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக நான் பொறுப்பேற்றுள்ளேன். இந்நிலையில் கட்சிப் பணிகள் குறித்து, மாவட்டக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், தொகுதி வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை செய்திடும் வகையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தில், வருகின்ற 4-1-2017 (நாளை) முதல் 9-1-2017 வரை மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும். அதன் விவரம் வருமாறு:-
சென்னை – திருவள்ளூர்
4-1-2017 (புதன்கிழமை) காலை – வடசென்னை வடக்கு, வட சென்னை தெற்கு, தென் சென்னை வடக்கு, தென் சென்னை தெற்கு, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மத்தியம், காஞ்சீபுரம் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு. மாலை – திருவள்ளூர் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு.
6-1-2017 (வெள்ளிக்கிழமை) காலை – தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம். மாலை – சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர்.
7-1-2017 (சனிக்கிழமை) காலை – நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை மாநகர், மதுரை புறநகர். மாலை – கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கிருஷ்ணகிரி, தர்மபுரி.
திருநெல்வேலி – தூத்துக்குடி
8-1-2017 (ஞாயிறுக்கிழமை) காலை – திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி.
9-1-2017 (திங்கட்கிழமை) காலை – திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர், கோவை மாநகர், கோவை புறநகர், நீலகிரி. மாலை – திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
எனவே, கட்சி நிர்வாகிகளின் கருத்தை அறிந்த பிறகே, முதல்-அமைச்சராக வி.கே.சசிகலா பொறுப்பேற்பார் என்று தெரிகிறது. அவர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்கும் பட்சத்தில், அடுத்த 6 மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாக வேண்டும்.
தற்போதைய நிலையில், ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் மட்டுமே காலியாக உள்ளது. எனவே, அதில் சசிகலா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், அவர் போட்டியிட விரும்பாத பட்சத்தில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தனது தொகுதியை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், அந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்ல வல்ல ‘அக்னி-4’ சோதனை வெற்றி
பாலாசோர்:
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக் கூடிய அக்னி 4 ஏவுகணைச் சோதனை இன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) அக்னி வரிசை ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்ற இந்த ஏவுகணைகளில் அக்னி-1, 2, 3 ஏவுகணைகள் ஏற்கனவே படைகளில் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் அக்னி-4 ‘பல்லிஸ்டிக்’ ஏவுகணை தயாரிக்கப்பட்டு ஏற்கனவே 5 முறை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
இதில் 6-வது முறையாக பயனாளர் சோதனை இன்று காலையில் ஒடிசாவின் பாலாசோர் அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் நடந்தது. அங்குள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து நடமாடும் செலுத்து வாகனம் மூலம் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அப்போது நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக சென்று தாக்கி அழித்தது. 2 அடுக்குகளுடன் 20 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை 17 டன் எடை கொண்டது. அணு ஆயுதம் உள்பட 1.5 டன் எடை கொண்ட வெடிபொருளை சுமந்து செல்லும் திறன் வாய்ந்த இது 4 ஆயிரம் கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கவல்லது.
முன்னதாக 5 ஆயிரம் கி.மீ.க்கு அப்பால் சென்று தாக்கும் திறன் பெற்ற அக்னி-5 ஏவுகணை கடந்த மாதம் 26-ந்தேதி இதே இடத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
முதல்வர் பதவியை சிறுமைப்படுத்துவதா? தம்பிதுரை மீது ஸ்டாலின் பாய்ச்சல்
சென்னை:
முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டுள்ளதற்கு திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சி விசுவாசத்தை தம்பிதுரை வெளிப்படுத்தப்பட்டும் எனவும் சாடியுள்ளார் ஸ்டாலின். அத்துடன் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் தம்முடைய பலத்தை நிரூபிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்” என்று பாராளுமன்ற துணை சபாநாயகராக இருக்கும் மு.தம்பித்துரை வெளியிட்டுள்ள அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைகிறேன். முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மரணமடைந்தவுடன் இரவோடு இரவாக அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனியாக பேருந்துகளில் அழைத்துச் சென்று திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தமிழக முதலமைச்சராக தேர்வு செய்தார்கள்.
அதில் கூட நடைமுறை சிக்கல்கள் பல இருந்தாலும், மாநிலத்தின் நலன் கருதி, மாநில நிர்வாகம் சீர்கெட்டு விடக்கூடாது என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் பொறுப்புள்ள எதிர்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல் அமைதி காத்தது. தமிழக ஆளுநர் அவர்களும் அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலையை கருதி, உடனடியாக அதிமுகவின் ஏற்பாட்டிற்கு சம்மதம் தெரிவித்து, நள்ளிரவில் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு தமிழக முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த சூழ்நிலையில், பதவியேற்று பத்து நாட்களுக்குள்ளாகவே, “ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பார்” என்றும், “சசிகலா முதலமைச்சராக வேண்டும்” என்றும் அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை சற்றும் உணராத அதிமுக அமைச்சர்கள் வெளியிட்ட செய்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இன்னும் சொல்வதென்றால், முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதல்முறையாக பிரதமர் நரேந்திரமோடி அவர்களை சந்திக்கச் சென்ற நாளில், இதுபோன்ற பேட்டிகளை அளித்து தமிழக முதலமைச்சர் என்ற பதவியை சிறுமைப்படுத்திய சம்பவங்களை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஆகவே தான், “தி இந்து” ஆங்கிலப் பத்திரிக்கைக்கு நான் கொடுத்தப் பேட்டியொன்றில், “முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மெஜாரிட்டி இருக்கிறதா என்று ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டிய அரசியல் சட்ட கடமை இருக்கிறது” என்று கூறியிருந்தேன்.
இப்போது, தமிழக முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எல்லாம் ஆங்கில புத்தாண்டு தெரிவித்துள்ள நிலையில், திடீரென்று பாராளுமன்றத்தின் துணை சபாநாயகராக இருக்கும் மு. தம்பித்துரை “தமிழக முதலமைச்சர் பதவியை” சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி அவருக்கு ஆளுநர் அவர்கள் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, “சசிகலா முதல்வராக வேண்டும்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது முழுக்க முழுக்க துதி பாடும் செயலாகவும், அத்தகைய செயலுக்கு அரசியல் சட்ட நெறிமுறைகளை காவு கொடுப்பதாகவும் அமைந்திருக்கிறது.
குறிப்பாக “துணை சபாநாயகர்” லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை விட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும். ஆகவே, ஆளுநர் அவர்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேநேரத்தில், துணை சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தி இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை மக்களவை துணை சபாநாயகர் திரு. மு. தம்பித்துரை அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
ஒருவேளை கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தால் தன்னுடைய துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். அது அவரது கட்சிப் பணி. ஆனால் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
சென்னை:
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். அப்போது குளச்சல் துறைமுக பணிகள் மற்றும் பல்வேறு சாலைப்பணிகள் பற்றி பேசினார்.
முன்னதாக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நாளை தி.மு.க. போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் போராடு கிறார்கள். போராட்டம் நடத்தித்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமென்றால் நானும், பா.ஜனதாவும் முதலாவதாக இருப்போம். ஆனால் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காளையை காட்சி பொருள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அப்போதைய காங்கிரஸ் ஆட்சிதான் அதை செய்தது.
தமிழகத்துக்கு காங்கிரஸ் செய்த துரோகத்தின் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த முடியவில்லை. தற்போதைய பா.ஜனதா அரசு ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்து வருகிறது.
செய்த தவறுக்காக காங் கிரஸ் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட வேண்டும். மோடி அரசு விவசாயிகளுக்கான நல்ல திட்டங்களை வகுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஷூ வீசப்பட்டதற்கு மோடியே காரணம்: கோழை மோடி என வீரர் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
ரோதக்:
அரியானாவில் ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தில் தன் மீது ‘ஷூ’ வீசப்பட்ட சம்பவத்திற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
அரியானா மாநிலம் ரோதக்கில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அக்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றதை கண்டித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது ரூ. 65 கோடி லஞ்சம் பெற்றார் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் வைத்த குற்றச்சாட்டை மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் முன்வைத்தார். ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கைக்கு முன்னரே பாரதீய ஜனதாவினர் தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை ரியஸ் எஸ்டேட் போன்ற தொழில்களில் முதலீடு செய்துவிட்டனர் என்றார் கெஜ்ரிவால்.
அப்போது திடீரென கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர், கெஜ்ரிவாலை நோக்கி ஷூ வீசினார். ஆனால் அந்த ஷூ அவர் மீது விழவில்லை. உடனே ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த விகாஷ் (வயது 26) என்பதும், பட்டதாரியான அவர், வேலை எதுவும் இன்றி இருந்தார் என்றும் தெரியவந்தது. அவர் மனநிலை தெளிவாக இருந்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து பேசியதால் அவர் ஷூ வீசியதாகவும், போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இச்சம்பவத்திற்கு அரசியல் சாயம் பூசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் என் மீது ‘ஷூ’ வீசப்பட்டதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று கூறிஉள்ளார். “பிரதமர் மோடி ஒரு கோழை என்று நான் ஒருமுறை கூறினேன். என்னுடைய வார்த்தையானது இப்போது நிரூபனம் ஆகிஉள்ளது. என்னை எதிர்க்கொள்ள பிரதமர் மோடியிடம் தைரியம் கிடையாது. எனவே தான் என் மீது ஷூ க்களை வீச அவருடைய ஷூக்களை அனுப்பியுள்ளார்,” என்று குற்றம் சாட்டினார்.
விவசாயிகளின் மரணத்தை தடுத்த நிறுத்துங்கள்; 5ஆம் தேதி சாலைமறியல்: பி.ஆர்.பாண்டியன்
சென்னை:
தண்ணீர் இன்றி கருகும் பயிர்களைப் பார்த்து உயிரிழக்கும் விவசாயிகளின் மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கோரியுள்ளார்.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை பி.ஆர். பாண்டியன் சந்தித்துப் பேசினார்.
சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள சாலைமறியல் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளிடம் விவசாய சங்கங்கள் ஆதரவு கோரி வருகின்றன.
தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 33 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்தால் வறட்சி மாநிலமாகத்தான் அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
மேலும், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாமல் இருக்கிறது. அதுகுறித்த சிக்கல்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து நீரின்றி கருகும் பயிர்களால் விவசாயிகளின் மரணம் தொடர்கதையாகிவிட்டது.
எனவே, தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க அரசு குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும். தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அதற்கான நெருக்கடியை மாநில அரசு வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவைக் கேட்டோம். போராட்டத்திற்கு திமுக ஆதரவு தருவது பற்றி ஆலோசித்து கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
என்னதாங்க உங்க பிரச்னை? : ஓ.பி.எஸ். எதிர்ப்பில் தம்பிதுரை செய்யும் அரசியல் பின்னணி
சென்னை:
ஓ.பன்னீர் செல்வம் மீது தம்பிதுரை ஏன் அதிருப்தியில் கலகக் குரல் எழுப்புகிறார் என்ற பின்னணியை அதிமுகவினர் விவாதித்து வருகின்றனர். சசிகலா முதல்வராக வேண்டும் என வலியுறுத்தி இன்று அறிக்கை வெளியிட்டார் தம்பிதுரை. அதன்மூலம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
பன்னீர்செல்வத்துடனான பனிப்போரின் உச்சமாகவே இக்கோரிக்கையை தம்பிதுரை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவின் போது முதல்வர் பதவிக்கு தம்பிதுரை பெயரும் அடிபட்டது. ஆனால் மத்திய அரசு பன்னீர்செல்வத்தையே முன்னிறுத்தியது. இதனால் பன்னீர்செல்வம் முதல்வரானார். பன்னீர்செல்வம் முதல்வரானாலும் அவரைப் பின் தொடர்ந்தவராக தம்பிதுரை வலம் வந்தார்.
தில்லிக்கு முதல்வர் பன்னீர்செல்வம் சென்றபோது கூடவே இருந்தார் தம்பிதுரை. பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போதும் தம்பிதுரை உடனிருந்தார். ஆனால், ஓபிஎஸ் இச்சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது திடீரென தம்பிதுரையை வெளியே அனுப்பிவிட்டு மோடியும் பன்னீர்செல்வமும் தனியே 20 நிமிடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது சசிகலா தரப்பு தமக்கு தரும் நெருக்கடிகளை மோடியிடம் பன்னீர்செல்வம் விவரித்திருக்கிறார்.
மக்களவையில் துணை சபாநாயகராக இருக்கும் தம்மை வெளியே அனுப்பியதை தம்பிதுரையால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் ஓ பன்னீர்செல்வத்தின் மீது கடும் அதிருப்தியில் இருந்தார். தற்போது அமைச்சர்கள் சிலர் சசிகலாவே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தம்மை அவமதித்த பன்னீர்செல்வத்தை பழிவாங்கும் வகையில், தானும் சசிகலாதான் முதல்வராக வேண்டும் என பகிரங்க அறிக்கை வெளியிட்டுள்ளார் தம்பிதுரை. ஆளும் கட்சியும் ஆட்சியும் இருவேறு நபர்களிடம் இருக்கக் கூடாது என தம்பிதுரை கூறியுள்ளதன் மூலம் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதை மறைமுகமாக வலியுறுத்தியுள்ளதாகவே பேசப்படுகிறது.

