Home Blog Page 5717

அமரர் ச.வே.சுப்ரமணியம்: நினைவலைகள்

முனைவர் ச.வே.சுப்ரமணியம். நெல்லைக்காரர். ஊத்துமலை ஜமீனைச் சேர்ந்த வீரகேரளம்புதூரைச் சேர்ந்தவர். எனக்கு சிறுவயதில் பழக்கமான முகம்! தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் பள்ளிப்பருவத்தில் சந்தித்தேன். தமிழ் இலக்கியங்கள், பிரபந்தம், கம்பராமாயணம் குறித்தான எனது இளம் பருவத்தின் துளிர்ப் பேச்சுகளைக் கேட்டு மகிழ்ந்தவர், அதே திருவள்ளுவர் கழகத்தில் இருந்த அவர் எழுதிய இரு புத்தகங்களை கையெழுத்திட்டு அன்பளிப்பாகக் கொடுத்தார். ‘கம்பனும் இளங்கோவும்’ என்ற ஒப்பீட்டு நூல். சிறுவயதில் ரசித்துப் படித்தேன். அதன் பின்னர் அவரை சுமார் 15 வருடங்கள் கழித்தே சந்திக்க முடிந்தது.

2005ம் வருடம் மே மாதம். என் தந்தையார் வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அது அவர் பிறந்து வளர்ந்து பள்ளிப் படிப்பும் முடித்த ஊர்தான். ஊத்துமலை ஜமீன் வீடும் தாலுகா அலுவலகமும் அருகருகே இருக்கும்! அருகிலேயே நவநீதகிருஷ்ணன் ஸ்வாமி கோயில்!

என் தந்தையார் பணி ஓய்வு பெறும் நாளில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் மீண்டும் ச.வே.சுப்ரமணியத்தைச் சந்தித்தேன். அப்போது அவர் பணி ஓய்வு பெற்று, ஆலங்குளத்தை அடுத்த பகுதியில் தனக்கென, தன் நூலாராய்ச்சிகளுக்கென ஒரு ஊரையே தமிழூர் என உருவாக்கியிருந்தார். ஆலங்குளத்தில் இருந்து நெல்லை செல்லும் வழியில் வலப்புறம் தமிழூர் எனும் பெயர்ப்பலகையைக் காணலாம்!
அந்த நிகழ்ச்சியில் அவர் வந்திருந்த காரணம்… அதே நாளில் அதே அலுவலகத்தில் பணியாற்றிய ச.வே.சு.,வின் மருமகனும் பணி ஓய்வு பெற்றிருந்தார். அதற்காகவே அவர் வந்திருந்தார். அப்போதே உடல் சற்று தளர்ந்திருந்தது. காது கேட்புத் திறனில் மந்தம்! அருகே சென்று சப்தமாகப் பேச வேண்டும்!

அந்த நேரத்தில் நான் மஞ்சரி இதழாசிரியராக இருந்தேன். அதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் வீ.கே.புதூர் சென்று அங்கே இருந்த விநாயகம்பிள்ளை என்பவரைச் சந்தித்து, ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்… ஊத்துமலை ஜமீன் குறித்தும், ஜமீனில் ஆஸ்தானகவியாக இருந்த அண்ணாமலை ரெட்டியாரைக் குறித்தும், அவரின் சிலேடைப் பாக்கள் குறித்தும்! அப்போது, வீ.கே.புதூரில் கோயில் கொண்ட நவநீதகிருஷ்ண ஸ்வாமியைக் குறித்தும் எழுதியிருந்தேன்.

இந்த விவரத்தைச் சொன்னதும் மகிழ்ந்தவர், வேறு ஒருவர் எழுதியிருந்த ‘நவநீதகிருட்டிணன் கலம்பகம்’ என்ற நூலை யாரிடமிருந்தோ கேட்டு வரவழைத்து எனக்கு அளித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஒருமுறை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருவாளர் கிருட்டிணமூர்த்தி இயக்குனராக இருந்தபோது, நானும், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூராரும் தரமணியில் உள்ள அந்நிறுவனத்துக்குச் சென்றிருந்தோம். அன்று கிருட்டிணமூர்த்தியுடன் ச.வே.சு.,வும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது பழைய தென்காசி திருவள்ளுவர் கழக நினைவுகள், சொந்த ஊர் குறித்த பேச்சு என்று ஏதோ சில நிமிடங்கள் அவருடன் கரைந்தது. அவருக்கு ஆன்மிகம், வழிபாடு இவை குறித்தெல்லாம் அதிகம் ஈடுபாடு இருந்ததில்லை. தமிழ் தமிழ் தமிழ்! இதுவே அவரை தெய்வத் தமிழ் பால் ஈர்த்திருந்தது! அதோடு சரி!

அண்மையில் ஏதோ விபத்தில் பாதிக்கப்பட்டு, மீள இயலாமல் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்தவாறு இன்று உயிரிழந்தார் என கூறினார்கள். வருத்தம்தான்! தமிழாய்வாளர், தமிழார்வலர், தமிழ்த்தொண்டர் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்… கிட்டத்தட்ட 200 நூல்கள் அவர் பெயரை வெகுநாட்கள் வாழவைத்துக் கொண்டிருக்கும்! என் மண்ணின் மைந்தர் நெல்லைச் சீமைக்காரரான அவருக்கு அந்த நவநீதகிருஷ்ணன் நற்கதி அருள்வாராக!

***

sa ve subramanian - 2026ச.வே.சுப்பிரமணியன்: வாழ்க்கைக் குறிப்பு!

l நெல்லை மாவட்டம் வீரகேரளம் புதூரில் பிறந்தவர் (1929). விக்ரம சிங்கபுரம் புனித இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

l தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 1953 முதல் மூன்றாண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக வழிநடத்தினார்.

l சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டார். சிலப்பதி காரத்தில் விசேஷ ஈடுபாடு கொண்ட இவர், சிலப்பதிகாரத்தை இசையுடன் பாடியே பாடம் நடத்துவார்.

l இவரது மாணவர்களில் பலர் இன்று புகழ்பெற்ற தமிழறிஞர்களாக உள்ளனர். படைப்பாற்றல் மிக்க இவர், தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதும் திறன் பெற்றவர்.

l இலக்கிய நினைவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, கம்பன் கற்பனை, இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம் மூலம், சிலம்பும் சிந்தாமணியும், பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள், தமிழ் நிகண்டுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

l நாட்டுப்புறக் கலை, தத்துவம், தாவரவியல், மண் அமைப்பு ஆகியவை குறித்தும் எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட தமிழின் தொன்மையான பல படைப்புகளை ஆங்கிலத்தில் பல தொகுதிகளாக மொழிபெயர்த்து வெளியிட்டார். சாகித்திய அகாடமி கமிட்டியின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பேச்சாற்றல் மிக்கவர்.

l 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். வானொலியில் 100-க்கும் மேற்பட்ட உரைகளை நிகழ்த்தியுள்ளார். இலங்கை, மொரீசியஸ், ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லவேகியா, ஜப்பான், பாரீஸ், லண்டன், கெய்ரோ உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணம் சென்று கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார்.

l 1969-ல் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை தொடங்கினார். இவரது மேற்பார்வையில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 1985-ல் நெல்லை மாவட்டத் தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டின் பெயரே ‘தமிழகம்’.

l ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை வென்றுள்ளார். இந்திய சாகித்திய அகாடமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர், ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது, நல் அறிஞர் விருது, அவ்வைத் தமிழ் அருளாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

l ‘Tholkappiyam is the first Universal grammar in the Universe’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை 2015 ஜுன் மாதம் வெளியிட்டுள்ளார். ‘தமிழ் ஞாயிறு’, ‘சாதனைச் செம்மல் ச.வே.சு.’ ஆகிய தலைப்புகளில் இவருடைய வாழ்க்கை வரலாறு நூல்கள் வெளிவந்துள்ளன.

அரசு இ – சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை !!

 

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு, அரசு இ – சேவை மையங்களில், இலவச அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

இதுகுறித்து, அவர் கூறியதாவது: அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக, 15.04 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ஜன.,
25க்கு பின் வழங்கப்படும். தற்போதே அடையாள அட்டை பெற விரும்புவோர், அரசு இ – சேவை மையங்களுக்கு சென்று, 25 ரூபாய் கட்டணம் செலுத்தி, பெற்றுக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதற்காக, புதிய மென்பொருள் தயார் செய்துள்ளோம். இதன்மூலம், புதிய வாக்காளர்களுக்கு, ஜன., 25க்கு பின், அவர்களின் மொபைல் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் ரகசிய குறியீட்டு எண் அனுப்பப்படும். அந்த எண்ணை, அரசு இ – சேவை மையங்களில் காண்பித்து, இலவசமாக அடையாள அட்டையை பெறலாம். புதிய அடையாள அட்டை வந்து சேரவில்லை என்ற புகாரை தவிர்க்க, இந்த ஏற்பாட்டை செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை முதலிடம்! : வாக்காளர் எண்ணிக்கையில், சென்னை முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில், 20.07 லட்சம் ஆண்கள்; 20.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், 40.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்த இடங்களை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெற்றுள்ளன.
அரியலுார் மாவட்டத்தில், மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். இம்மாவட்டத்தில், 2.49 லட்சம் ஆண்கள்; 2.51 லட்சம் பெண்கள் என, மொத்தம், ஐந்து லட்சம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்திய நிதிஷ்குமாருக்கு மோடி பாராட்டு

பாட்னா:

மதுவிலக்கை அமல்படுத்திய பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் நரேந்திரமோடி பாராட்டினார். பதிலுக்கு நிதிஷும் மோடியைப் பாராட்டிப் பேசினார். இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் சீக்கிய மத குருவான குருகோவிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள பிரதமர் நரேந்திரமோடியும், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாரும் ஒரே மேடையில் அமர்ந்து இருந்தனர்.

இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி பேசியபோது…

பீகார் மாநிலத்தில் முன்னோ டியான முழு மதுவிலக்கை அமல்படுத்திய முதல்-மந்திரி நிதிஷ்குமாரை மனம் திறந்து பாராட்டுகிறேன். அவரது துணிச்சலான முடிவு இது. மதுவில் இருந்து எதிர்கால சமுதாயத்தை பாதுகாக்க நிதிஷ்குமார் எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. சமூக மாற்றத்துக்காக ஒரு திட்டத்தை முன்னெடுத்து செல்வது கடினமானது. இதனை நிதிஷ்குமார் செய்துள்ளார். இது நிதிஷ்குமார் அல்லது அரசியல் கட்சியினரின் பணியாக மட்டும் இருக்கக்கூடாது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக இதனை அனைவரும் வெற்றி பெற செய்ய வேண்டும். பீகாரில் மதுவிலக்கு வெற்றி பெற்றால், நாடு முழுவதற்கும் முன்மாதிரியாக இருக்கும் என்றார். பதிலுக்கு குஜராத்தின் மதுவிலக்கு குறித்துப் பேசிய நிதிஷ், மோடியைப் பாராட்டிப் பேசினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டணியை முறித்துக்கொண்டு நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது. அதில் இருந்து அரசியலில் நரேந்திரமோடியும், நிதிஷ்குமாரும் எதிரெதிர் துருவங்களாகவே இருந்து வருகிறார்கள். இதனிடையே கடந்த நவம்பர் 8-ந் தேதி கருப்பு பணம், கள்ளநோட்டை ஒழிப்பதற்காக உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை நரேந்திரமோடி செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இதற்கு முக்கிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே நிதிஷ்குமாரின் மதுவிலக்கு திட்டத்துக்கு மோடி பாராட்டியதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால் பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஈ.டி.ஏ. நிறுவனத்தில் 2 -ஆவது நாளாக சோதனை; பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு?

 

ஈ.டி.ஏ. நிறுவனத்தில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் வருமானவரித் துறையின் சோதனை தொடர்ந்தது. இந்தச் சோதனையில் அந்த நிறுவனம் பல கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்த விவரம்:

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈ.டி.ஏ. குழும நிறுவனங்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மீதான வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமானவரித் துறையினர், அந்த நிறுவனத்தின் அலுவலங்கள், தொழிற்சாலைகள், வணிக கட்டடங்கள், கல்வி நிறுவனங்கள், நிர்வாகிகளின் வீடுகள் என 74 இடங்களில் புதன்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனையைத் தொடங்கினர்.

தமிழகத்தில் மட்டும் இந்த சோதனை 52 இடங்களில் நடைபெறுகிறது. இந்த சோதனையில் வருமானவரித் துறையைச் சேர்ந்த சுமார் 500 அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளாக இந்த சோதனை வியாழக்கிழமையும் நீடித்தது. இச்சோதனையில் ஈ.டி.ஏ. குழும நிறுவனங்கள் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கானஆவணங்களும், ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக அந்த குழும உரிமையாளர்களிடமும், நிர்வாகிகளிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சோதனையின் முடிவிலேயே வரி ஏய்ப்பு தொடர்பான முழுத் தகவல்களை வெளியிட முடியும் என வருமானவரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தை விழுங்கிய ‘ஹேர்பின்’ அகற்றம்: அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டு

 

பத்து மாத குழந்தை விழுங்கிய ஹேர்பின்னை திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வியாழக்கிழமை அகற்றி, குழந்தையின் உயிரை காப்பாற்றினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மருங்காபுரி கோனார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும், ஹரிஷ் (10 மாதம்) என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
வியாழக்கிழமை காலை வீட்டில் மற்ற குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில், விளையாடிக் கொண்டிருந்த ஹரிஷ், தலைக்கு வைக்கும் ஹேர்பின்னை எடுத்து விழுங்கிவிட்டான். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், ஸ்கேன், எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்து பார்த்தபோது, குழந்தையின் மூச்சுக்குழாயில் ஹேர்பின் சிக்கியிருந்ததும், அதை அகற்றாவிட்டால் குழந்தை இறந்துவிடும் அபாயம் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காது, மூக்கு, தொண்டை மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர் பழனியப்பன் தலைமையில், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பவதாரிணி, மயக்கவியல் நிபுணர் சிவக்குமார் உள்ளிட்ட டாக்டர்கள் குழு, உடனடியாக அதிநவீன (விடியோ லெரிகோகோபிக்) எண்டோஸ்கோபிக் கருவி உதவியுடன் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த 4 செ.மீ. நீளமும், 2.5 செ.மீ. அகலமும் கொண்ட ஹேர்பின்னை லாவகமாக எடுத்தனர். இதனால் குழந்தை இறப்பிலிருந்து தப்பி, தற்போது நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு, மருத்துவமனையின் முதல்வர் எஸ். மேரி லில்லி பாராட்டு தெரிவித்தார். குழந்தையின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள குழந்தை ஹரிஷ்.

அன்னிய செலாவணி மோசடியில் ரூ.25 கோடி அபராதம்: டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

அன்னிய செலாவணி மோசடியில், அமலாக்கத்துறை ரூ.25 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்படுகிறது.
அதிமுக. பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி. தினகரன். இவரது வங்கி கணக்குக்கு கடந்த 1995, 1996-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து பெரும் தொகை “டெபாசிட்’ ஆனது.
இதையடுத்து, இவர் மீது 1996-ஆம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு குறித்து, அவரிடம் மத்திய அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அதிகாரிகள் விசாரணை நடத்தினாó. பின்னர், அவருக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அமலாக்கத்துறை மேல்முறையீட்டு அதிகாரிகளிடம் டிடிவி. தினகரன் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள், ரூ.25 கோடி அபராதத் தொகை நிர்ணயித்தது சரிதான் என்று முடிவு செய்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிவி. தினகரன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி எஸ்.கே.கௌல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளனர்.

டிஜிட்டல் மயம் சிக்கலில் ரேஷன் கடை ஊழியர்கள்

 

குடிமைப் பொருள்கள் விநியோகத்தில், டிஜிட்டல் முறை பின்பற்றப்படுவதால் ரேஷன் கடை ஊழியர்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசு ஏழை மக்களின் வறுமையை போக்கும் வகையில் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, மலிவு விலையில் பாமாயில், சர்க்கரை, உளுந்து, துவரம்பருப்பு, உப்பு, கோதுமை போன்றவற்றை வழங்கி வருகிறது.
இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததால் அதைத் தடுக்கும் வகையில் தற்போது கணினி முறை விற்பனை செயலி இயந்திரம் (பாயிண்ட் ஆஃப் சேல்) கருவியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ரேஷன் கடையில் பொருள்கள் வாங்கும்போது, இந்த கருவியில் பதிவு செய்யப்படுகிறது.

வாங்கப்படும் பொருள்கள் குறித்த விவரம் சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக செல்லும்.
மேலும், ரேஷன் கடைகளுக்கு வரும் சரக்குகளை பதிவு செய்தல், தினசரி விற்பனை விவரம், இருப்பு விவரம் ஆகியவற்றை உடனடியாக இந்த கருவியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் உடனடியாக கண்டுபிடித்து விற்பனையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு கிடங்குகளில் இருந்து கொண்டுவரப்படும் அரிசி மூட்டைகள், பருப்பு வகைகள், சர்க்கரை மூட்டைகளில், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டைக்கு 3 கிலோ முதல் 5 கிலோ வரை எடை குறைகிறது.
தொழிலாளிகள் கொக்கிகளைப்போட்டு மூட்டையை ஏற்றி, இறக்குவதால் அதில் ஓட்டைகள் விழுகின்றன.
இதன் வழியாக அரிசி, பருப்புகள் விரயமாகின்றன. மேலும், கிடங்கில் உள்ள தொழிலாளிகள் தங்களின் தேவைகளுக்காக முறைகேடாக திருடுவதாலும் எடைக் குறைவு ஏற்படுகிறது என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதற்கான பணத்தை தங்களது கை இருப்பைக் கொண்டு தான் சரிசெய்ய வேண்டும் எனவும், ஒரு கடைக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை இதுபோன்று செலவாகி வருவதாகவும் ரேஷன் ஊழியர்கள் கூறுகின்றனர்.
மேலும், பெண் ஊழியர்கள் பணிபுரியும் கடைகளில் மூட்டைகளை தூக்கி இறக்குவது போன்ற சில கடினமான பணிகளுக்கு தனி நபரை வேலைக்கு அமர்த்தி, அவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 2 ஆயிரம் வரை வழங்கி வருகின்றனர்.
தற்போது ரேஷன் ஊழியர்கள் ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை ஊதியம் பெறுகின்றனர். இதில் மேற்கண்ட செலவுகளை ஈடுகட்டினால் வெறும் கையுடன் தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என ரேஷன் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, குடிமைப்பொருள் விநியோகத்தை டிஜிட்டல் மயமாக்கிய அதிகாரிகள், இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை உரிய முறையில் ஆய்வு செய்து, அதனை களைய வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* தொழிலாளிகள் கொக்கிகளைப்போட்டு மூட்டையை ஏற்றி, இறக்குவதால் அதில் ஓட்டைகள் விழுகின்றன. இதன் வழியாக அரிசி, பருப்புகள் விரயமாகின்றன. மேலும், கிடங்கில் உள்ள தொழிலாளிகள் தங்களின் தேவைகளுக்காக முறைகேடாக திருடுவதாலும் எடைக் குறைவு ஏற்படுகிறது என ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.

திமுக பொதுக்குழு கூட்டத்தில் செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு

சென்னை:
கருணாநிதி பங்குபெறாமல் முதல் முறையாக திமுக பொதுக்குழு கூடியது. கடந்த 48 ஆண்டுகளில் கருணாநிதி கலந்து கொள்ளாத முதல் பொதுக்குழு இது. இதில் திமுகவின் செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

1949ஆம் ஆண்டு திகவில் இருந்து திமுக பிரிந்து தனியாக துவங்கப்பட்ட போது கருணாநிதிக்கு வயது 25. அன்று முதல் இன்று வரை கடந்த 68 ஆண்டுகள் திமுகவின் முதுகெலும்பாக இருந்து வழிநடத்திவருகிறார்.

1969ஆம் ஆண்டு திமுக தலைவராக பொறுப்பேற்று கொண்ட கருணாநிதி கடந்த 48 ஆண்டுகளாக பொதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று நடக்கும் பொதுக்குழுவில் கருணாநிதியால் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

திமுக பொதுக்குழு இன்று காலை, அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் அன்பழகன் தலைமையில் கூடியது. பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 4 ஆயிரம் அழைப்புகள் வழங்கப்பட்டுள்ளது, அரங்கில் இடம் போதாததால் வெளியில் திரை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8 மணிக்கு காலை உணவு முடித்து விட்டு அனைவரும் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தனர். மேடையில் யாரும் ஸ்டாலினுக்கு சால்வை போடக்கூடாது என உத்தரவிடப்பட்டது.

பொதுக்குழுவில் பேராசிரியர் தீர்மானம் வாசித்ததும், எதிர்பார்த்தது போல செயல் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த தீர்மானத்தை க.அன்பழகன் முன்மொழிய, துரைமுருகன் அதனை வழி மொழிந்தார். அன்பழகன் அந்த தீர்மானத்தை வாசித்த போது திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் உற்சாகமாக கை தட்டி வரவேற்பு அளித்தனர்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்தபிறகும் கருணாநிதிக்கு தொண்டையில் செயற்கை சுவாசத்துக்காக போடப்பட்ட டியூப் இன்னும் அப்படியே இருக்கிறதாம். எனவே திமுகவின் தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டு 48 ஆண்டுகளில் முதன் முறையாக அவர் இல்லாமல் பொதுக்குழு கூடியது.

கருணாநிதியை வீல்சேரில் உட்காரவைத்து பொதுக்குழு கூட்டத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்றுதான் முதலில் ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் வெளி இடங்களுக்கு அழைத்துச் சென்றால் நோய்த்தொற்று ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் பொதுக்குழுவுக்கு கருணாநிதி வரவில்லை என்று அறிவாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

dmk-gb-meets-the-first-time-without-karunanidhi

சிலிண்டருக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தினால் ரூ.5 தள்ளுபடி

சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைனில் முன்பதிவு செய்து, கட்டணமும் செலுத்தினால் ரூ. 5 தள்ளுபடி செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் இந்த சலுகையை அறிவித்துள்ளன.

மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்காக, டெபிட், கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல், ரயில் டிக்கெட் வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கிரெடிட், டெபிட் கார்டுகள் மற்றும் இ-வாலட் முறையைப் பயன்படுத்தி பெட்ரோல், டீசல் வாங்குவோருக்கு 0.75 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது சமையல் எரிவாயுவுக்கும் மின்னணு பணப் பரிவர்த்தனையில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சமையல் எரிவாயு சிலிண்டரை ஆன்லைனில் முன்பதிவு செய்து, கட்டணமும் செலுத்தினால் ரூ. 5 தள்ளுபடி செய்யப்படும்.

வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஆன்லைனில் பணத்தைச் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ளலாம்.

இதன்மூலம் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை திரையில் தெரியும். அந்த 5 ரூபாயைக் கழித்த பின்னர் மீதத்தொகையைச் செலுத்த வேண்டும்.

தள்ளுபடி செய்யப்பட்ட தொகை வீட்டில் சிலிண்டர் விநியோகிக்கப்படும்போது அளிக்கப்படும் ரசீதிலும் இருக்கும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் ரொக்க பணப் பரிமாற்றத்தைக் குறைத்துக் கொண்டு மின்னணு முறைக்கு மாற வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய சலுகைகள் அறிவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

5 மாநில சட்டசபை தேர்தல்: தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர்

புது தில்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தில்லியில் இன்று அறிவித்தார்.

செய்தியாளர்களிடம் இன்று பேசிய நஜீம் ஜைதி, 5 மாநிலங்களில் மொத்தம் 690 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 5 மாநிலங்களிலும் மொத்தம் 16 கோடி வாக்காளர்கள் உள்ளனர். உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளும், பஞ்சாபில் 117 தொகுதிகளும், உத்தரகாண்டில் 70 தொகுதிகளும், கோவாவில் 40 தொகுதிகளும், மணிப்பூரில் 60 தொகுதிகளும் உள்ளன. 1,85,000 வாக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

•கோவா, பஞ்சாப் மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று நஜீம் ஜைதி தெரிவித்தார்.

•உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 15ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவித்தார்

•மணிப்பூரில் மார்ச் 4ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் மார்ச் 8ல் 2ம் கட்ட தேர்தல் நடைபெறும் என்றும் நஜீம் ஜைதி அறிவித்தார்

•மிக அதிக அளவில் சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 11,15,19, 23, 27, மார்ச் 4, 8 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

•5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மார்ச் 11ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். முன்னதாக பேசிய அவர், மின்னணு முறையில் தபால் வாக்குகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினர் இணையதளம் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் வேட்பாளர்கள் ரூ.28 லட்சம் வரை தேர்தலுக்கு செலவழிக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்கள் ரூ.20 லட்சம் மட்டும் செலவழிக்கலாம் எனவும் அறிவித்தார்.

மேலும் தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், கட்சிகளின் தேர்தல் செலவு இணையதளம் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் நஜீம் ஜைதி கூறினார்.