Home Blog Page 5716

வண்ண ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியர்

சென்னை:
வண்ணமயமான ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் போராட்டம் இன்று விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் கடந்த நான்கு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சினிமா பிரபலங்களும் மக்களுடன் இணைந்து தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் அவர்கள், தன்னுடைய ஓவியங்கள் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழர்களின் அடையாளம், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு புகழ் பாடும் வகையிலும், தமிழர்களின் உணர்வுகளை பறைசாற்றும் வகையிலும், தான் வரைந்த 18 வண்ணமயமான ஓவியங்களை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமர்பித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகம் கூடாது: ராம.கோபாலன்

சென்னை:

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது மாநில அரசு பலப்பிரயோகம் செய்வதை கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மத்தியில் ஆண்ட காங்கிரஸ் திமுக கூட்டாட்சியில் காளையை உள்நோக்கத்துடன் காட்சிப் பொருள் பட்டியலில் சேர்ந்ததன் விளைவாக பீட்டா அமைப்பு உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தொடர்ந்து தடை வாங்கியது. சென்ற ஆண்டு காட்சிப் பட்டியலில் இருந்து மத்திய அரசு காளையை விலக்கிவிட்ட நிலையில், அரசாணையை உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் நடந்த வழக்கில் நீதியரசர்களின் கேள்விகள் சாதாரண மக்களை எரிச்சலூட்டின. இதனை அடுத்து திரு. சுப்ரமணிய சுவாமி அவர்கள் ஒரு மனுவை தாக்கள் செய்தார்.அதனை ஏற்ற விசாரணையை அத்துடன் முடித்துக்கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தள்ளி வைத்தனர். மத்திய அரசு சார்பில் மகரசங்கராந்திக்கு முன் தீர்ப்பை வழங்கக் கேட்டுக்கொண்டதை நீதிமன்றம் ஏற்கவில்லை.

எந்த வழக்கும் எதற்காக நடைபெறுகிறது என்பதை பற்றி கவலையில்லை என எந்த நீதிமன்றமாவது கூறினால், நீதிமன்றம் மாண்பை இழக்கும் அபாயம் இருக்கிறது. காலதாமத்தப்படுத்தும் தீர்ப்பு மறுக்கப்பட்ட தீர்ப்பாககக் கருதப்படும் என்பதை மறக்க வேண்டாம். அதுபோலத்தான் பொங்கலுக்கு முன் தீர்ப்பை எதிர்ப்பார்த்த மக்களுக்கு அளித்த பதிலும் நீதிமன்றத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திவிட்டது என இந்து முன்னணியின் கருத்துகிறது.

மாநில அரசு ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கான ஆதரவை ஜனநாயக வழியில் போராட்டங்கள் வாயிலாக தெரிவிக்கும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க இந்து முன்னணி வேண்டுகோள் விடுகிறது. பலப்பிரயோகம் செய்வது, கைது நடவடிக்கை, வழக்குப் பதிவு செய்வது போன்றவற்றை தமிழக தவிர்க்க கேட்டுக்கொள்கிறோம்.

இந்தப் போராட்டத்தில் இந்து முன்னணியும் இணைந்து நிற்கிறது. தமிழகத்தின் பல இடங்களிலும் இந்து முன்னணி சார்பிலும் போராட்டங்களை நடத்தியிருக்கிறோம்.

தமிழக மக்களின் உணர்வுகளை இந்த நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறோம். நீதிமன்றத்திலும் நமது தரப்பு வாதங்களை முன்னிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் உச்சநீதி மன்றம் ஜல்லிக்கட்டிற்கு சாதகமான தீர்ப்பை வழங்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறோம்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என்ற பெயரில் மக்களை திசைத்திருப்ப, தேச விரோத சக்திகள் முனைகின்றன. திராவிட இயக்கங்களும், பிரிவினைவாத தீய சக்திகளும், இடதுசாரி பயங்கரவாத அமைப்புகளும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போராட தூண்டுகின்றன. பிரிவினை கருத்துக்களை வெளிப்படுத்தியும் வருகின்றன. தேச விரோதிகளை அடையாளம் கண்டு மக்கள் ஒதுக்க வேண்டும். தேசிய கொடியை அவமானப்படுத்துவதை ஏற்க முடியாது. சில சினிமா பிரபலங்கள் இந்தப் பிரச்னையில் தேவையற்ற கருத்துகளை கூறி வன்முறையைத் தூண்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படவும், பதட்டத்தை தணிக்கவும் முன் வர வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என்று கூறியுள்ளார்.

அதிமுகவை கைப்பற்ற சதி; பொதுச்செயலரே முதல்வராக வேண்டும்: கே.பி.முனுசாமி – ஓ.எஸ்.மணியன் மோதல்!

சென்னை:
கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட இல்லாதவர் தாம்தாம் கட்சியைக் காப்பாற்றுவதாகப் பேசுகிறார்; அதிமுக.,வைக் கைப்பற்ற சதி நடக்கிறது என்று அதிமுக.,வின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியிருந்தார். அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, அதிமுக.,வைக் காப்பாற்ற நினைப்பவர் எவர் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம், பொதுச்செயலாளரே முதலமைச்சரகாவும் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார் அமைச்சர் ஓ.எஸ். மணியன்.

முன்னதாக சனிக்கிழமை தஞ்சையில் நடைபெற்ற தமிழர் கலை இலக்கிய பொங்கல் விழாவின்போது பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், “இப்போதும் எங்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளன. ஆனாலும் உயிரையும் துச்சமென மதித்து அதிமுகவை கட்டிக்காக்கப் பாடுபட்டு வருகிறோம். இப்போது சிலர் கட்சியினரை குழப்ப முயற்சி செய்கின்றனர். நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து அதிமுகவைக் காப்பாற்றி, தமிழகத்தில் நல்லாட்சி தொடர பாடுபடுவோம். ஜெ., ஜா. என அதிமுகவில் இருந்த இரண்டு அணிகளையும் இணைத்து, முடங்கிப் போன இரட்டை இலைச் சின்னத்தை மீட்டு எடுத்ததும் நடராஜன் தான்.” எனப் பேசியிருந்தார்.

இதற்கு பதில் விளக்கம் அளிக்கும் விதமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டணத்தில் செய்தியாளர்களை திங்கள்கிழமை இன்று சந்தித்த அதிமுக., முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, “பொங்கல் விழாவின்போது, அதிமுக-வுக்கு சின்னம் வாங்கியதே நடராஜன் தான் என்பது போல் திவாகரன் பேசியிருக்கிறார். இது கண்டனத்துக்குரியது. திவாகரன், நடராஜன் ஆகியோர் கட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இது அதிமுக தொண்டர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கட்சி பொதுச் செயலாளர் கண்டித்து கட்சியை வழிநடத்த வேண்டும்.

திவாகரன் தற்போது கட்சியில் இல்லை. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். தலைமைக்கு விசுவாசம் இல்லாதவர். கட்சியில் இல்லாத ஒருவர் இயக்கத்தை காப்பாற்றுவேன் என்றெல்லாம் பேசி அதிகார மையத்தை உருவாக்க முயற்சிக்கிறார். இது எனது கருத்து மட்டுமல்ல. ஒட்டுமொத்த அதிமுகவினரின் கருத்து. திவாகரன் தன்னை கட்சியில் நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின் சிறப்பாக செயல்பட்டு வரும் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு சிலர் தொந்தரவு கொடுக்கிறார்கள். எனவே இதுபோன்ற பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறினார்.

இதனிடையே அவரது கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக, அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் கூறியபோது,

எம்.ஜிஆர் மறைவுக்கு பிறகு அ.தி.மு.கவில் முக்கிய பங்கு வகித்தவர் திவாகரன். அவர் கருத்து சொல்ல உரிமை இல்லை என கே.பி முனுசாமி கூறியது கண்டிக்கதக்கது.அதிமுக வளர வேண்டும் நினைப்பவ்ர்கள் யாராக இருந்தாலும் கருத்து சொல்லலாம்.ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்தது திவாகரனும அவரை சார்ந்தவர்கள் தான். மருத்துவமனையில் ஜெயலலிதாவை காப்பாற்ற சசிகலா குடும்பத்தினர் உதவி உள்ளனர். திவாகரன் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

கே.பி.முனுசாமி விலை போய்விட்டார். அவர் பின்னால் இருந்து யாரோ செய்ல்படுகிறார்கள். அவர் மனதில் வேறு எண்ணம் கொண்டு இருப்பது அவரது பேச்சில் தெரிகிறது.அவரை யாரோ இயக்குகிறார்கள். அ.தி.மு.கவில் அவர் இருந்து இருந்தால் இவ்வாறு அவர் கூறி இருக்கமாட்டார். சசிகலா பொதுக்குழுவில் ஒரு மனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். யார் பொதுச்செயலாளரோ அவரே முதல் அமைச்சர் என எம்ஜிஆர் கூறி இருக்கிறார் என்று கூறினார்.

அதிமுக.,வில் ஒரு குடும்பத்தினரின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது என்று கூறப்படும் குற்றச்சாட்டை மெய்ப்பிப்பது போல், இந்நாள் அமைச்சர்கள் பேசிவருவது குறிப்பிடத்தக்கது.

அலங்காநல்லூரில் தடையை மீறி போராட்டம்: போலீஸார் தடியடி

மதுரை:
மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லுாரில், பீட்டா அமைப்பை கண்டித்து 15,000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திங்கள்கிழமை திரண்டு ஊர்வலம், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று ஜல்லிக்கட்டு மைதானத்தில் தடையை மீறி காளைகளை இளைஞர்கள் அவிழ்த்துவிட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

உச்ச நீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்காமல் இருக்க அலங்காநல்லுாரில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் முதலே அலங்காநல்லுாரில் இருந்து நான்கு திசைகளிலும் 15 கி.மீ., தொலைவில் இருந்து வாடிவாசல் வரை 6 அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு வெளியாட்கள் ஊருக்குள் நுழைவதை தடுக்க தற்காலிக சோதனைச்சாவடிகளுடன் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டது. அலங்காநல்லுாரில் காளை வளர்ப்போர் வீடுகளுக்கு 4 போலீஸார் வீதம் பாதுகாப்பு போடப்பட்டு அவர்கள் காளைகள் அவிழ்த்துவிடாமல் இருக்க பாதுகாப்பு போடப்பட்டது.

போலீஸார் இந்த கண்காணிப்பு, பாதுகாப்பு வளையத்தை மீறி மதுரை மட்டுமில்லாது சென்னை, திருச்சி, திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாணவர் அமைப்பினர், தமிழ் அமைப்பினர், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே காட்டுப்பகுதிகள் வழியாகவும், வயல் வெளிகள் வழியாகவும் அலங்காநல்லுார் குவிந்தனர். நேற்று காலை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அலங்காநல்லுாரில் ஒரே நேரத்தில் திரண்டதால் அவர்களை போலீஸாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் வாடிவாசல் அருகே நேற்று காலை 8 மணி முதல் திரண்டு மதியம் வரை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊர் முக்கிய பிரமுகர்கள் கேட்டுக் கொண்டதிற்கினங்க கோயில் காளைகளை மட்டும் வாடிவாசல் அருகே உள்ள காளியம்மன் கோயிலில் பூஜை செய்து மரியாதை செலுத்த போலீஸார் அனுமதித்தனர். அப்போது கோயில் மாடுகளை அவிழ்த்து அந்த கோயிலுக்கு கொண்டு வந்தபோது, தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் ஆர்வமிகுதியில் காளைகளை அழைத்து வந்தவர்கள் பிடியில் இருந்து அவற்றை அவிழ்த்துவிட்டனர். அந்த காளைகள் கூட்டத்தை நோக்கி சீறி பாய்ந்தது. தொடர்ந்து 5 நிமிடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கோயில்மாடுகளை, இளைஞர்கள் அவிழ்த்துவிட்டனர். இளைஞர்கள் அந்த காளைகளின் திமில்களை பிடித்து அடக்க முயல்வதும், அவைகள் கூட்டத்தில் புகுந்து சீறி பாய்வதுமாக இருந்ததால் வடிவாசல் அருகே பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து போலீஸாரும், ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒரு வழியாக அந்த காளைகளை பிடித்து மீண்டும் அவற்றின் கிடைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் தொடர்ந்து இளைஞர்கள் வாடிவாசல் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் இருந்தனர். அப்போது வெளியூர்களில் இருந்து அணி அணியாக தமிழ் அமைப்பினர், மாணவர் அமைப்பினர், இளைஞர் அமைப்பினர், பேரணியாக ஊர் மையப்பகுதியில் இருந்து கறுப்பு சட்டை அணிந்து, கறுப்பு கொடிகள், பீட்டாவுக்கு எதிரான பதாகைகளை எந்தியபடி முழக்கமிட்டபடி வாடிவாசலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதனால், வாடிவாசல் அருகே கட்டுக்கடங்காத இளைஞர்கள் திரண்டனர்.

இளைஞர்கள், உற்சாக மிகுதியில் வாடிவாசலில் நுழைய முயன்றனர். அதனால், போலீஸார் அவர்களை தடுத்தனர். இவ்வாறு தொடர்ந்து காலை முதல் மதியம் 12 மணி வரை போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் நடந்த வண்ணம் இருந்தது. வழக்கமாக ஜல்லிக்கட்டு நடக்கும் கூட்டத்தை விட 2 மடங்கு கூட்டம் திரண்டதால் போலீஸாரால் அவர்களை கட்டுப்படுத்தவே முடியவில்லை. மதியம் ஒரு கட்டத்தில் மீண்டும் இளைஞர்கள், திடீரென்று எங்கிருந்தோ காளைகளை ஊர்வலமாக அழைத்து வந்து கட்டவிழ்த்துவிட்டனர். அந்தக் காளைகள் சாலைகளிலும், ஊருக்குள்ளும் தாறுமாறாக துள்ளிக் குதித்து ஓடத் தொடங்கின. மற்றொரு புறம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், ‛நோ ஜல்லிக்கட்டு, நோ இந்தியா’ என்ற கோஷத்துடன் வாடிவாசலை நெருங்கினர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் போலீஸார் தடியடி நடத்தினர். பேரணி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாலாபுறம் சிதறி ஒடினர். பெண்கள், சிறிய குழந்தைகள் பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதால் அவர்கள் போலீஸாரின் தடியடியில் சிக்கினர். பலர், கீழே விழுந்து எழுந்து ஒடியதில் படுகாயமடைந்தனர். அதனால், சில நிமிடங்களில் அலங்காநல்லுார் ஊரே போர்க்களம் போல் காணப்பட்டது.

ரஜினி கருத்து: சரத் பதில்: சர்ச்சைக்கு டிவிட்டரில் பதில்!

ரஜினியைப் பற்றி சரத்குமார் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சை உண்டானது. இதனைத் தொடர்ந்து, சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

துக்ளக் விழாவில் ரஜினி கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் அசாதாரண சூழல் நிலவுவதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சரத்குமார். அவரிடம் “ரஜினியின் கருத்துக்கு உங்களுடைய பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சரத்குமார், “ரஜினி ஒரு சிறந்த மனிதர். மிகப்பெரிய சூப்பர் ஸ்டார். அதனை நான் ஒத்துக் கொள்கிறேன். கருத்துகள் சொல்லும் போது எப்போது தேவைப்படுகிறதோ அப்போது மட்டும் சொல்லிவிட்டு, மற்ற நேரங்களில் அமைதியாக இருப்பதை கருத்துக்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. ரஜினி கூறியிருப்பது போன்று தமிழகத்தில் அசாதாரண சூழல் இல்லை.

என்னைப் பொறுத்தவரை மாநில விதிகளுக்கு உட்பட்டு, அங்கிருக்கும் தமிழ் கலாச்சாரம் மற்றும் உணர்வுகளுக்கு உட்பட்டு இருப்பவர்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். அந்த உணர்வை மதிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் தான் கருத்து சொல்ல வேண்டும். தேவைப்படும் போது கர்நாடகாவில் வேறொரு கருத்து சொல்வது, இங்கு வேறொரு கருத்து சொல்வது என இருக்கக் கூடாது. நாளை ரஜினிகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்து, முதலமைச்சராகப் போகிறேன் என்று கூறினால் அதை எதிர்க்கும் முதல் ஆளாக நான் இருப்பேன். அதில் சந்தேகம் வேண்டாம்” என்று தெரிவித்தார்.

சரத்குமாரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஜினி ரசிகர்கள் பலரும் அவருடைய புகைப்படங்களை எரித்தார்கள். சமூக வலைத்தளத்திலும் சரத்குமாரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு வசைபாடத் தொடங்கினார்கள்.

இதைத் தொடர்ந்து சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “பத்திரிகையாளர் சந்திப்பில் விவசாய சகோதரர்களின் வேதனை, மாநில அரசு நிவாரணம், மத்திய அரசு ஆய்வு, நிவாரணம், எதிர் கொள்ளவுள்ள தண்ணீர் தட்டுப்பாடு அதற்கு திட்டம், இறுதியாக கேட்கப்பட்ட கேள்வி மறைந்த சோ அவர்களின் நினைவு விழாவில் ரஜினியின் கருத்தான அசாதாரண நிலைமை என்ற கருத்தை பற்றி என் கருத்து என்ன என்று வினவினர்.

அதற்கு ஏன் அப்படி குறிப்பிட்டார் என்று அவரைத்தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தேன். பிறகு தமிழகத்தை தமிழன் தான் என்றும் ஆள வேண்டும் என்ற என் கருத்திற்கு பத்திரிகை சகோதரர்கள் “ரஜினி கட்சி ஆரம்பித்தால் என்ன செய்வீர்கள்” என்று கேட்டனர்.

அதற்கு நான் ரஜினி இனியவர் என் நண்பர். ஆனால் கட்சி துவங்கினார் எதிர்ப்பேன் என்று என் கருத்தை தெரிவித்தேன். பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வராத இணையதளத்தில் மிகைப்படுத்தி ரஜினி கட்சி துவங்க தகுதியற்றவர் என்று நான் சொன்னதாக செய்தி வெளியிட்டிருப்பது உண்மைக்கு புறம்பானது.

எதையும் சந்திக்க தயாரானவன் நான் என்பதை வலியுறுத்துகின்ற அதே நேரத்தில் தகாத செயல்களில் ஈடுபடுவர்களை என் சமத்துவ தமிழ் நெஞ்சங்கள் பொறுமையுடன் காவல்துறை உதவியுடனும் எதிர்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.

சரத்குமாரின் டிவிட்டர் பதிவு:

வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி : பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

புதுதில்லி :
வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் . தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இந்த தொகையை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை நேரில் பார்வையிட மத்தியக் குழுவை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை மதிப்பிடவும் இக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள குடிநீர் ஏரிகளில் 1.966 டிஎம்சி தண்ணீரே உள்ளது. நீர்நிலைகளில் தண்ணீரின் அளவும் மிகவும் குறைந்துள்ளது. முக்கியமான 15 அணைகளில் 25.74 டிஎம்சி தண்ணீரே உள்ளது. இதனால் தமிழகத்தின் வறட்சி பாதிப்புக்களை சரி செய்ய ரூ.39,565 கோடியை நிவாரண நிதியாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலன், பிரதமர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்துள்ளார்.

திரிஷா பீடாவில் இல்லை; இனி அருகேகூட நெருங்க மாட்டோம்: அம்மா உமா உறுதி

சென்னை:
நடிகை திரிஷா பீட்டாவில் இல்லை என்று அவரின் அம்மா உமா உறுதியாகக் கூறினார். மேலும் திரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறை ஆணையரிடம் புகாரும் அளித்தார். பீட்டாவில் திரிஷா உறுப்பினராக இல்லை என்று மறுத்தார் உமா.

நடிகை திரிஷாவின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவரது தாயார் உமா காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் புகார் அளித்துள்ளார். மேலும், படிப்பிடிப்பில் திரிஷாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

முன்னதாக, பீட்டா அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுபவர் திரிஷா என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறினர். ஜல்லிக்கட்டு எதிராக பீட்டா செயல்பட்டு வருவதால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், காரைக்குடியில் நடைபெற்ற திரிஷாவின் படப்பிடப்பு தளத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அவரது படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
மேலும், திரிஷா வெளியிட்ட டிவிட்டர் தகவல் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பதிலுக்கு அவரை ஆபாசமாகவும் கொச்சையாகவும் சித்திரித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன. இதனால் தனது டிவிட்டர் கணக்கை திரிஷா மூடிவிட்டார்.

இதனிடையே, நடிகை திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்து தவறான செய்திகளை வெளியிட்டு இருப்பதாகக் கூறி அவரது தாய் உமா கிருஷ்ணன், இன்று சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திரிஷா பீட்டாவில் பெரிய அளவில் இல்லை. அவர் வெளிநாட்டு நாய்களை வாங்கி வளர்க்காமல் தெரு நாய்களை எடுத்து வளர்க்க வேண்டும் என்று பீட்டா ஏற்பாடு செய்திருந்த விளம்பர படத்தில்தான் நடித்தார். அவ்வளவுதான். அதுகூட நீண்ட காலத்திற்கு முன்பு! இவ்வளவு பிரச்னை இருக்கும் என்று அப்போது தெரிந்திருந்தால் திரிஷா அதனை செய்திருக்க மாட்டார்.

நாங்களும் தமிழர்கள்தான். நாங்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் இல்லை. மேலும், திரிஷாவின் டுவிட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்திருக்கிறார்கள். அவருக்கு நிறைய போட்டியாளர்களும், எதிரிகளும் இருக்கிறார்கள். அவர்கள்தான் இதனை செய்திருக்கவேண்டும். ஆனால் யாரென்று என்னால் உறுதியாக கூற முடியவில்லை.

திரிஷாவின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்கான உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்தப் பிரச்சனை குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரிடமும் பேசி இருக்கிறேன். அவரும் சென்னை வந்த உடன் பேசுவதாக உறுதி அளித்துள்ளார். இனி பீட்டா தொடர்பான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம் என்று உமா கிருஷ்ணன் கூறினார்.

தமிழர்களுக்கு கனடா பிரதமர் தெரிவித்த பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ தனது மூகநூல் பக்கதத்தில் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ‘வணக்கம்’ என தமிழில் தொடங்கி பின்னர் ஆங்கிலத்தில் பேசுகிறார். இறுதியில் ‘இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்’ என முடித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

வணக்கம். அடுத்த சில தினங்களுக்கு கனடா மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் தங்களுடைய அன்புக்குரியவர்களுடன் இணைந்து தை பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளனர். இந்த பண்டிகையின் ஒவ்வொரு நாளுக்கும் அமைதி, மகிழ்ச்சியுடன் இணைந்த சிறப்பு பொருளும் பாரம்பரியமும் உண்டு.

இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியை தமிழ் பாரம்பரிய மாதமாக கொண்டாட நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. கனடாவில் வசிக்கும் தமிழர்களின் பாரம்பரியத்தை பிரதிபலிக்க ஒவ்வொருவரையும் நான் ஊக்குவிக்கிறேன். கனடாவாழ் தமிழர்களால் இந்த நாடு வலிமையானதாகவும் வளமானதாகவும் உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நம் நாடு உருவாகி 150-வது ஆண்டு நிறைவடைந்துள்ள இந்த நேரத்தில், பல்வேறு கலாச்சாரம், மொழி மற்றும் நம்பிக்கைகளையும் கொண்டாடுவதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனது குடும்பத்தினர் சார்பில் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Canada Prime Minister’s Pongal Message:

மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்: சசிகலா குறித்து எம்.ஜி.ஆர். வளர்ப்பு மகள் சுதா பேட்டி

சென்னை:

அதிமுக., விவகாரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்படி என்றால் எங்களுக்கு ஒன்றும் அதில் பிரச்னை இல்லை என்று சசிகலா விவகாரத்தில் கருத்து தெரிவித்த எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றும், அவரால் உருவாக்கப்பட்ட கட்சி உடையக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை ராமாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துக் கூறிய சுதா,

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாகவே செயல்படுகிறார். சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மக்கள் அவரை ஆதரித்தால் அதில் எந்தப் பிரச்னையும் எங்களுக்கும் இல்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அவரை அழைத்திருக்கிறோம். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அவ்வளவு எளிதாக எந்த உண்மையையும் மறைத்துவிட முடியாது.
ஊடகங்களும் அப்படி எளிதாக விட்டு விடாது. எனவே, எங்களுக்கு ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் கிடையாது.

இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யாரும் அரசியலுக்கு வரலாம். தீபாவும் அரசியலுக்கு வரலாம். நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி உடையக் கூடாது. அதேபோன்று அவரது இரட்டை இலை சின்னமும் நீடிக்க வேண்டும். எம்ஜிஆரின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று கூறினார் சுதா.

எம்.ஜி.ஆரின் சாதனைகளை பாடலாக வெளியிடுகிறார் இயக்குனர் பேரரசு

சென்னை:
எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டு ஆகியுள்ள நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்று திரையுலம் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் பேரரசு எம்.ஜி.ஆர் சாதனைகள், மக்களிடத்தில் அவர் எப்படி இருந்தார். திரையுலகிற்கு அவர் ஆற்றிய பணி உள்ளிட்ட பல அம்சங்களை ஒரு பாடலாக தொகுத்து அதை வீடியோ வடிவில் உருவாக்கி வெளியிட இருக்கிறார்.

இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறும்போது, ‘எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். இவர் மக்களுக்கும் கலைக்கும் செய்த சாதனைகள் பல. இவரைப் பற்றி ஏதாவது ஒன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போதுள்ள இளம் தலைமுறைகள் எம்.ஜி.ஆர். பற்றி பல விஷயங்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால், எம்.ஜி.ஆர். பற்றி பலரும் அறிந்திராத செய்திகள், புகைப்படங்கள், சாதனைகள் ஆகியவற்றை சேகரித்து, ஒரு பாடல் எழுதி அதை வீடியோவாக தயார் செய்திருக்கிறேன். இந்த வீடியோவை எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களிடம் கூறினேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷப்பட்டு, எங்கள் இல்லத்திலேயே வெளியிடலாம் என்று கூறினார்.

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான நாளை, எம்.ஜி.ஆரின் உறவினர் சுதா அவர்களின் இல்லமான ராமாபுரத்தில் வெளியிட இருக்கிறேன். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில் எம்.ஜி.ஆர். அவர்களின் சாதனைகளை பற்றிய வீடியோவை வெளியிடுவது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் பெருமையாகவும் கருதுகிறேன்’ என்றார்.

இயக்குனர் பேரரசு உருவாக்கியுள்ள வீடியோவிற்கு இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களில், சங்கரின் பேரன், ரசாந்த் இசையமைத்துள்ளார். லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார்.