Home Blog Page 5715

தமிழர் கலாசார விருப்பங்களை நிறைவேற்றுவேன்: மோடி உறுதி

புது தில்லி:

தமிழர்களின் கலாசார அடையாளங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றுவதில் தாம் உறுதியுடன் நடவடிக்கள் எடுப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் தமது டிவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதற்காக, சென்ற 2016ல் காட்சிப் படுத்தப் பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை எடுத்தார் பிரதமர் மோடி. ஆனால், அந்தத் திருத்தத்துக்கு நீதிமன்றத்தில் தடையாணை பெற்றது பீட்டா அமைப்பு. இதனால், இது குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது குறித்த தீர்ப்பை விரைந்து வழங்கக் கோரி மத்திய அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டும், பொங்கல் நடைபெறும் ஜன. 14க்குப் பிறகே தீர்ப்பு வழங்க முடியும் என்று நீதிமன்றம் கூறியது. இதனால், இந்த வருடமும் பொங்கல் நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த இயலாமல் போனது. ஜல்லிக்கட்டுக்காக தில்லியில் இருந்துகொண்டு முழுமூச்சாக செயல்பட்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தாம் உறுதியளித்தபடி, இந்த முறை தம்மால் இயலவில்லை என்பதற்காக தாம் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகக் கூறினார்.

இந்நிலையில் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பைத் தடை செய்யும்படியும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்தில், திரை உலகைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு, தடியடி நடத்தப்படும் அளவுக்குக் கொண்டு சென்றனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால், அவர்கள் கைதைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றுக் கோரி, இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நிலைமை மோசமாகவே, கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும், தமிழகமெங்கும் தாங்களாகவே சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் சில நூறு பேர் கலந்து கொண்ட கூட்டம், பின்னர் ஆயிரக்கணக்கில் பெருகியது. அது பின்னர் தொடர் போராட்டமாக மாறியது.

தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த இந்தப் போராட்டங்களில் பிரதமர் மோடியை வசை பாடியும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை ஏசியும் பதாகைகளும் முழக்கங்களும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், மத்திய அரசினால் சென்ற வருடம் மேற்கொள்ளப்பட்ட சட்டத்திருத்தம் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தம்மால் உடனடியாக ஏதும் செய்ய முடியாது என்றும், மாநில அரசு இதே போன்ற வகையில் அவசரச் சட்டம் கொண்டு வந்தால், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் மோடி கூறினார். இதனை ஆமோதித்த முதல்வர் பன்னீர்செல்வம், அவ்வாறே தில்லியில் தங்கியிருந்து பணிகளை மேற்கொண்டார். இதை அடுத்து, மத்திய அமைச்சகங்கள் தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு உடனடியாக ஒப்புதல் வழங்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தன.

இந்நிலையில், தாம் தமிழர்கள் மீதும், தமிழர் கலாசாரத்தின் மீதும் பெருமிதம் கொள்வதாகவும், தமிழரின் கலாசார விருப்பங்களை நிறைவேற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் பிரதமர் மோடி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு தம்மால் ஆன அனைத்தையும் மேற்கொள்ளும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் டிவீட்கள்:

 

 

தமிழ்நாடு கெட்டது என்னாலே: காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பரபரப்பு

சென்னை ராணி சீதை மன்றத்தில் ஆர்.எம்.வீரப்பனின் எம்.ஜி.ஆர். கழகம் நடத்திய எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தமிழக காங்கிரசின் தற்போதைய தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பேசினார். அப்போது அவர், தமிழ்நாடு கெட்டது என்னாலேதான் என்று கூறி, ஆர்.எம்.வீ.,யிடம் தாம் பகிரங்க மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்.ஜி.ஆர்., குறித்து தனது நினைவலைகளை இந்த விழாவில் பேசும்போது பகிர்ந்து கொண்ட அவர், ‘’அண்ணன் ஆர்.எம்.வீ. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்தபோது ஆர்.எம்.வீ. கிட்டத்தட்ட சிஎம் மாதிரி செயல்பட்டார். ஆனால் அவரே சிஎம் ஆக வேண்டியதை கெடுத்தது நான் தான். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர் அப்போதே சிஎம் ஆகி இருந்தால் இந்த நாட்டில் இவ்வளவு கேவலம் நடந்திருக்காது.

அதற்கு பின் ஒரு சந்தர்ப்பம். அப்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ராகவானந்தம், ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்குவதற்கான ஆதாரங்களுடன் எம்.ஜி.ஆரிடம் வந்தார். புரட்சித் தலைவரும் ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்க முடிவு செய்து விட்டார். அப்போது தலைவர் அங்கிருந்த என்னிடம் என்ன செய்யலாம் என்று கேட்டார். நான் தனியாக பேச வேண்டும் என்று சொன்னேன். மாடிக்கு அழைத்துச் சென்றார்.

ஒரு மணி நேரம் அவருடன் பேசினேன். கீழே இறங்கி வரும்போது அண்ணன் ராகவானந்தம் என்னிடம், ’’கட்சியையும் நாட்டையும் கெடுத்த பாவத்திற்கு நீ ஆளாகிவிட்டாய்’’ என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டே இருந்தார்.

இப்போது எவன் எவனோ நான்தான் அதிமுக என்கிறான். நான் தான் அதிமுகவை காப்பாற்றினேன் என்கிறான். இதையெல்லாம் பார்த்தால் வயிறு எரிகிறது. எல்லாவற்றுக்கும் சேர்த்து அண்ணன் ஆர்.எம்.வீயிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டு வேண்டாம்

2009-ல் தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக கொண்டுவந்த சட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்று- 5 ஆண்டுகள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றிராத ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடையாது என்பதும். இந்த நிபந்தனை முன்னெப்போதையும்விட இப்போது தீவிரமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

தன்னெழுச்சிப் போராட்டத்தினால் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள மனவெழுச்சி, அவரவர் பகுதிகளில் ஜல்லிக்கட்டுகளை நடத்தும் ஆர்வத்தைத் தூண்டும். தூண்டியும் இருக்கிறது. அது வேண்டாம். ஏனெனில், சாலையில் மாடு நின்றால், அது எந்தப் பக்கம் திரும்புமோ என்ற அச்சத்தில் சற்று ஒதுங்கிப் போகிறவர்களே அதிகம்.
இந்தப் போராட்டக் களத்தில் குதித்த 99 விழுக்காட்டினருக்கும் இது பொருந்தும்.

மிகச் சிலரே காளையை எதிர்கொள்ளும் மனஉறுதி கொண்டவர்கள், மிகச் சிலரே அதற்கான பயிற்சி உடையவர்கள். ஜல்லிக்கட்டில் வேடிக்கைப் பார்ப்பதற்குக்கூட ஒரு பயிற்சி தேவை. காளை எப்படி எந்தப் பக்கம் திரும்பும் என்கிற போக்கு அறிந்தவர்கள் மட்டும்தான் காளை ஓடும் பாதையில் நிற்கத் தகுந்தவர்கள்.

ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு தடை நீக்கிய வெற்றிக்களிப்பு இந்த எச்சரிக்கை உணர்வுகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிடும். எல்லா ஊர்களிலும் ஒரு மாட்டை நிறுத்தி ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் முற்படுவாரகள். இளைஞர் தன்எழச்சியைக் கண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை, இந்த நிபந்தனைகள் தெரிந்தாலும், மவுனமாக கெடுபிடி இல்லாமல் ஒதுங்கி நிற்கும். இதனால் நிச்சயமாக விபத்துகள் நடக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.

இத்தனை லட்சம் இளைஞர்களும் அலங்காநல்லூர் பாலமேடு சென்று பாதுகாப்பான இடத்தில் இருந்து வேடிக்கைப் பார்க்கலாம். ரசிக்கலாம். ஆனால் 5 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெற்றிராத ஊர்களில் இப்போது ஜல்லிக்கட்டு வேண்டாம்.

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் சில இனங்களில் மட்டுமே தொடரும் பண்பாட்டுக்கூறு. எல்லாரும் அதை கொண்டாடுவது விபத்தை கூவி அழைப்பதாக முடியும். ஆர்வக் கோளாறினால் இளைஞர்கள் ஊருக்கு ஊர் ஜல்லிக்கட்டு என்று பரபரக்க வேண்டாம். பயிற்சி இல்லாத பலரும் ஜல்லிக்கட்டில் களம் காண முற்படுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களிலும்கூட இதுவரை எத்தனை காளைகள் இடம்பெற்றனவோ அந்த எண்ணிக்கைக்கு கூடுதலாக காளைகளை அனுமதிப்பதில்லை என்று உறுதியுடன் அதிகாரிகள் இருக்க வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள்- குறிப்பாக காளைகள் திமிறித் திரும்பி வேடிக்கைப் பார்ப்போர் மீது பாயாதபடிக்கு- பலமானதாக இருக்க வேண்டும்.

வெற்றியோடு இளைஞர்கள் வீடு செல்லட்டும்.
விளையாடுவோர் மட்டும் விளையாடட்டும்

கட்டுரை: ஆர்.சோமசுந்தரம்

ஜல்லிக்கட்டு ஒன்றால் பாரம்பரியம் காக்கப்படுமா?

ஜல்லிக்கட்டின் மீதான தடை வெளிநாட்டு நிறுவனங்களின் சதி — நமது நாட்டுக் காளையினங்களை அழிக்கத் திட்டம் — இது நமது பாரம்பரியத்துக்கு எதிரான போர்

சரிதான். வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டுப் பாரம்பரியத்தை அழிக்க முயற்சிக்கின்றன என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் அது பீட்டா மட்டுமா?

கூட்டுக்குடும்பம், பெற்றோரைப் பேணுதல், சகோதர பாசம், ஆடை, பண்டிகைகள், உணவு இதெல்லாம் கூட நமது பாரம்பரியம்தானே… இதனை எதிர்த்த தாக்குதல்களைக் கண்டித்த போதெல்லாம் இதற்கு வேறு சாயம் பூசின ஈயங்கள் இப்போது மட்டும் பாரம்பரியம் என்று கோஷமிடுவது ஏன்?

தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்காதே என்று தடை செய்தபோது பாரம்பரியம் தெரியவில்லை.

பொங்கல் வாழ்த்து அனுப்பிய தமிழன் இப்போது காதலர் தினம் என்ற பெயரில் பொது இடங்களில் கட்டிப் பிடித்துக் கொள்ளும்போதும் முத்தம் கொடுக்கும்போதும் பாரம்பரியம் தெரியவில்லை.

கூட்டுக்குடும்பத்தை ஒழித்தபோது பாரம்பரியம் தெரியவில்லை.

மேல்நாட்டைக் காப்பியடித்து அரைகுறை ஆடைகளை பழக்கப்படுத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற பாரம்பரியத்தைத் துறந்து பலர் என்பது சர்வ சாதாரணமானபோது பாரம்பரியம் தெரியவில்லை.

திருமண வாழ்வை விடுத்து லிவிங் டுகெதர் என்ற கண்றாவியைக் கைக்கொண்டபோது பாரம்பரியம் தெரியவில்லை.

ஒருவனுக்கு ஒருத்தியை விட்டுத் தள்ளுங்கள் – இப்போது ஒருவனுக்கு ஒருவன், ஒருத்திக்கு ஒருத்தி என்ற பாதையில் போய்க்கொண்டிருக்கிறதே அதற்கென்ன செய்வது?

நமது உணவு வகைகளைக் கைகழுவிவிட்டு பிஸா, பர்கர், கே எஃப் ஸி என்று கடை பரப்பியபோது நமது உணவு வகைகளைக் கேலி செய்து விட்டு வெளிநாட்டு குப்பை உணவுகளை இருகரம் நீட்டி வரவேற்ற போது பாரம்பரியம் தெரியவில்லை.

நமது பாரம்பரிய விவசாய மக்களின் உற்பத்திப்பொருளான பதநீர், இளநீர், நன்னாரி இவற்றை ஏளனம் செய்து விட்டு கோக்கையும் பெப்சியையும் குடிக்கும்போது பாரம்பரியம் தெரியவில்லை.

கோமாதா எங்கள் குலமாதா என்றால் கொக்கரித்து விட்டு மாட்டிறைச்சி சாப்பிடும் விழா நடத்தியபோது பாரம்பரியம் தெரியவில்லை. மாடுகள் துன்புறுத்தப்பட்டு, கண்களில் மிளகாய்ப்பொடியைத் தேய்த்து, லாரிகளில் அடைத்து வைக்கப்பட்டு, கொம்புகள் குத்திக் கண்களில் ரத்தம்வழிய அடிமாடுகளாக ஏற்றிச் செல்வதைப் பார்க்கும்போது நமக்கு மாடுகள் மேல் பாசம் பரிதாபம் வரவில்லை. பாரம்பரியம் தெரியவில்லை.

பசுவைக் கொல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற போது மாடுகளின் மேல் பாசமோ பரிதாபமோ எழவில்லை. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நானே முடிவு செய்ய வேண்டும் என்று வெட்டி நியாயம் பேசினோம்.

இன்றைக்கு நமது பாரம்பரியத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் தடை போட்டிருக்கிறது என்று பொங்கும் நாம், பாரம்பரிய உடைகளையே அணிந்து கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று பாரம்பரியத்துக்கு ஆதரவாக ஒரு நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியபோது அதனை எதிர்த்து அப்பீல் செய்து பாரம்பரியத்தைக் காக்கத் தேவையில்லை என்று தடை வாங்கியது நம்ம போராளிகள்தானே.

அப்புறம் இப்போ எந்த முகத்தோடு பாரம்பரியம் என்று நீதிமன்றத்தில் போய் நிற்க முடியும்?

இப்படி படிப்படியாக நமது பாரம்பரியம் என்பது பன்முகத்தாக்குதலுக்கு உள்ளானபோது இது அந்த சாதிக்கு ஆப்பு, அது இந்த மதத்துக்கு ஆப்பு, இது எனது சுதந்திரத்துக்கு ஆப்பு, அது அவனது விருப்பத்துக்கு ஆப்பு என்று பல சுயநலக் காரணங்களால் பாரம்பரியத்தை நாமும் கைவிட்டோம். அப்புறம் இப்போ பாரம்பரியம் என்று கத்தி என்ன பிரயோஜனம்?

இன்றைக்கு ஜல்லிக்கட்டையே தடை செய்யும் தைரியமும் ஆதரவும் பீட்டாவிற்கு எங்கிருந்து வந்தது என்று தெரிகிறதா?

எல்லாம் நமது இரட்டை வேஷம்தான்.

சரி… ஜல்லிக்கட்டு தடையால் நாட்டுக்காளையினங்கள் அழிந்து விட்டன. அப்படியா? ஏற்கெனவே தமிழ்நாட்டுக் காளையினங்கள் நாயினங்கள் ஆகியவை ஏகமாக அழிந்து விட்டன. இதெல்லாம் ஜல்லிக்கட்டு நடந்த காலத்திலேயே அழிந்து விட்டன. ஆனால் ஏதோ இந்த நாங்கைந்து வருடத்தில்தான் அழிந்து விட்டது போலப் பேசுவது காளைகளைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை என்பதைக் காட்டுகிறது.

சமீபத்தில் நாட்டு நாயினங்களை வளர்த்து வரும் கடைசி இடமான சைதாப்பேட்டை அரசு நிறுவனத்தை மூடச்சொல்லி உத்தரவு வந்து விட்டது. பார்த்துக் கொண்டு சும்மாதானே இருந்தோம்? வெளிநாட்டு நாயினங்களை வளர்த்து அதிக காசுக்கு விற்கும் நிறுவனங்கள் லாபம் கொழிக்க நமது நாட்டு நாயினங்களை பலி கொடுத்து விட்டோம். வெளிநாட்டுப் பசு இனங்கள் – நமது சீதோஷ்ணத்துக்கு ஒவ்வாத, தரங்குறைந்த பாலைத் தருகின்ற, எளிதில் நோய்வாய்ப்படக்கூடிய இனங்களை இறக்குமதி செய்து நம்மிடம் கொழுத்த லாபம் பார்க்க இது ஒரு வழி,

தமிழ்நாட்டில்தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை. ஆந்திரா, குஜராத், மஹாராஷ்ட்ரா, உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் முதலிய மாநிலங்களில் ஜல்லிக்கட்டே இல்லையே? அப்போது அந்த மாநிலங்களுக்குச் சொந்தமான காளையினங்கள் அழிந்து போயிருக்க வேண்டுமே? அங்கே மட்டும் எப்படித் தழைத்திருக்கிறது?

அடுத்தது – இப்போது நடப்பது ஜல்லிக்கட்டா? இதுதான் வீரமா? அடப்பாவிகளா.. ஏறு தழுவுதல் என்ன என்பதை அந்தக் காலத்து எம் ஜி ஆர் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். தனி ஒரு மனிதனாக கூண்டுக்குள் விடப்பட்டு அங்கே இருக்கும் காளையைத் தனியாக அடக்குவதுதான் ஏறுதழுவுதல், அதுதான் வீரம். மொத்தமாகப் பத்திருபது பேர் வாசலைத் தாண்டி வெளியே வரும் காளையின் மீது விழுவதும் அது ஓடும்போது கொம்பில் இருப்பதை அவிழ்த்து எடுப்பதுமா வீரம்?

இப்போது உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறியதாக மார்தட்டிக் கொள்கிறோம். மகிழ்ச்சி. அடுத்தது மாணவர்களின் போராட்டம் வலுத்து மத்திய அரசைப் பயமுறுத்திப் பணியவைத்து அவசர சட்டம் பிறப்பிக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதன் பின் என்ன ஆகும்? ஒன்றும் ஆகாது, தமிழகம் சுடுகாடு ஆகும். பணம் படைத்தவர்களும் அதிகாரம் படைத்தவர்களும் மட்டுமே வாழ முடியும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் செத்து சுண்ணாம்பாக வேண்டியதுதான். அதற்கு முன்னாடி விவசாயி என்ற இனமே தமிழகத்தில் இருக்காது.

என்ன பயமுறுத்துகிறேன் என்று பார்க்கிறீர்களா?

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறி அவசர சட்டம் பிறப்பிக்கலாம் என்று நாம் செய்து காட்டினால்….

1. அடுத்த வாரம் கர்நாடகாவில் மாணவர்களின் மாபெரும் போராட்டம் நடக்கும். அதனையடுத்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் தரத் தேவையில்லை என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்
2. அதற்கடுத்த வாரம் கேரளாவில் மாபெரும் மாணவர் போராட்டம் நடைபெறும். அதனையடுத்து முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.
3. அதற்கும் அடுத்த வாரம் ஆந்திராவில் மாணவர் போராட்டம் வலுக்கும். அதனையடுத்து கிருஷ்ணா நதியில் தண்ணீர் விட வேண்டாம் என்று அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.
4. இப்படியே சிறுவாணியில் தடுப்பணை, பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை என்று தமிழ்நாட்டுக்கு நீர் ஆதாரங்களாக இருக்கக்கூடிய அனைத்து ஆறுகளையும் அடைத்து விட அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்படும்

சந்தோஷமா? அப்புறம் எல்லாம் அடுத்தது என்ன படம் ரிலீஸ் என்று ஆவலுடன் திரையரங்கில் வாசலில் ஆயிரம் ரூபாய் குடுத்து டிக்கெட் வாங்கக் காத்திருக்கலாம்.

இந்த சட்ட சிக்கலைத் தீர்க்க அறிவுப்பூர்வமாக யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறதா? இருக்கிறது. உச்ச நீதிமன்றம் 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்று கூறியதை மதித்தோமா? மதித்தோம். இதுதான் அறிவுப்பூர்வமான அணுகுமுறை.

போராட்டத்தின் நோக்கம் பெரியது. ஆனால் போராடத் தேர்ந்தெடுத்திருக்கும் களமும் வழிமுறைகளும் இமாலயத் தவறு. போராட வேண்டிய இடம் இங்கல்ல… உச்ச நீதிமன்றம்.

இனிமேல் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை – நீதிமன்ற அவமதிப்பு என்று பேச முடியுமா? நீதிமன்றத்தில்தான் வாதாட முடியுமா?

மொத்தத்தில் காவிரிப் பாசன விவசாயிகளின் வயிற்றில் அடித்து அவர்களைப் படுகுழியில் தள்ளியாயிற்று. மாடுகளை வளர்க்கும் விவசாயிகளை அழித்து விட்டு இவர்கள் மாடுகளைக் காக்கப் போகிறார்களாம்.

விவசாயம் லாபகரமானது இல்லை என்பதோடு வயிற்றுப்பாட்டுக்கே போதவில்லை என்பதுதான் நிலைமை. இந்த நிலையில் விவசாயிகள் மாடுகளை எங்கே பராமரிப்பது? இதனால் மாடுகள் அடிமாடுகளாக கேரளாவிற்குப் போய்க்கொண்டிருக்கின்றன. மாடுகளையெல்லாம் வெட்டித் தின்று விட்டு காளைகளைக் காப்போம் என்று ஒரு போராட்டம்.

நம்மாழ்வார் என்று ஒரு கிழவர். விஷத்தை விதைக்காதீர்கள். நமது பாரம்பரிய மாடு இனங்களைக் காப்பாற்றுங்கள். பசுவின் மூத்திரம், சாணம், பால், நெய், தயிர் இதை வைத்து தயாரிக்கப்படும் பஞ்ச கவ்யா மற்றும் பசுஞ்சாண உரங்களே போதும். இதனை விட்டு விட்டு விஷத்தைத் தூவி உண்ணும் உண்வை விஷமாக்காதீர்கள் என்று கத்திக் கத்தியே மாண்டு போனார். ஆனால் இன்னும் வெளிநாட்டுக் குப்பை உணவு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

உசுப்பேற்றி விடுவதற்கு ஒரு கும்பல். இதில் அரசியல் ஆதாயம் தேட ஒரு கும்பல். பிரிவினைவாதிகளின் ஊடுருவல். கலகம் விளைவிக்க ஒரு கும்பல். இவர்கள் கையில் மாணவர்கள்.

காவிரியில் தண்ணீர் விடாததை எதிர்த்து பாவப்பட்ட விவசாயிகள் போராடியபோது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்? விவசாயிகள் இல்லாவிட்டால் மாடுகளை ஐ டி கம்பெனிகளில் வளர்ப்பார்களா? அல்லது மைக்ரோஸாஃப்ட் வளர்க்குமா? கொஞ்சமாது யோசிக்க வேண்டாம்?

முதலில் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புக்களை ஒதுக்குங்கள். சுதேசி என்று சொன்னால் கெட்ட வார்த்தை மாதிரிப் பார்ப்பவர்கள் இன்று கோக் பெப்சியை எதிர்த்து கோஷம். ஆனால் பிஸாவையும் பர்கரையும் கே எஃப் ஸி யையும் ஏன் எதிர்க்கவில்லை?

நமது பாரம்பரிய உணவான கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்களுக்கு மாறுங்கள். இதனால் மழை பொய்த்தாலும் கர்நாடகம் மறுத்தாலும் விவசாயிக்கு நல்ல தானிய உற்பத்தியும் வாழ்வாதாரமும் உறுதிப்படும். இதனால் பன்னாட்டு நிறுவனங்களின் கொட்டமும் அடங்கும். விவசாயி நல்ல நிலைமைக்குத் திரும்பினால் மாடுகளின் வாழ்வும் பெருகும். தினமும் ஒரு வேளையாவது கம்பு கேழ்வரகு என்று பழகுங்கள். எல்லோரும் இப்படி மாறினால் எந்த நாதாரியிடமும் தண்ணீர் வேண்டிக் கை ஏந்த வேண்டியதில்லை.

கதராடையை உடுத்துங்கள் என்று பிரதமர் கூறியபோது கேலி செய்தவர்கள்தான் அதிகம். ஆனால் கிராமத்தில் கதர் உற்பத்தி செய்யும் நெசவாளிக்கு நீங்கள் வாங்கும் கதராடையினால் ஒரு நாள் உணவு கிடைக்கிறதென்றால் அதை விட வேறென்ன வேண்டும்? ஆனால் பன்னாட்டு நிறுவனங்களையும் பெருமுதலாளிகளையும் திட்டிக் கொண்டே இன்னொரு புறம் அவர்களிடமே போய் விழுகிறோம்.

இனியாவது நமது பாரம்பரியம் என்ன என்பதை உண்மையாக உணர்ந்து தொன்மையான நமது பாரம்பரியத்தை நோக்கித் திரும்புங்கள். சிந்தித்து ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள்.

ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம்: முதல்வர் பன்னீர்செல்வம் திட்டவட்டம்

சென்னை:

ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நிச்சயம் என்று முதல்வர் பன்னீர் செல்வம் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து வரும் என்று தில்லியில் இருந்து சென்னை திரும்பிய பின்னர், சென்னை விமான நிலையத்தில் உறுதிபடத் தெரிவித்தார்.

பிரதமர் மோடியை சந்திக்க தில்லி சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை இன்று மதியம் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தும் வகையில் முன்னேற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள வரைவு அவசரச் சட்டத்துக்கு உள்துறை, சட்டத்துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் ஒப்புதல் பெறப்பட்டு அவை குடியரசுத் தலைவர் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்படும். குடியரசுத் தலைவர் அலுவல் நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொண்டிருப்பதால் நாளை அல்லது நாளை மறுநாள் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறப்படும். குடியரசுத் தலைவர் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தவுடன் அது ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும். தமிழகத்தில் இன்னும் ஓரிரு தினங்களில் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும். ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து வரும்” என்றார்.

பீட்டா அளித்த விருது அவமானம்: நடிகர் தனுஷ்

சென்னை:

பீட்டா அளித்த விருதை அவமானமாகக் கருதுகிறேன். அதற்காக வருந்துகிறேன் என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் போராட்டங்களில் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தனுஷ் விடுத்துள்ள அறிக்கையில்,

“மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தில் காளையும் மனிதனும் இணைந்தே உழைத்ததை அறிய முடிகிறது. இதை உணர்ந்துதான் இந்திய அரசு, அரசு முத்திரையில் காளையை இடம் பெற செய்திருக்கிறது. உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் ஆடு, மாடுகளை கால்நடை என்றழைத்த போது தமிழன் கால்நடைச் செல்வம் என்றழைத்து பெருமிதப்படுத்தினான். மாடு போல் உழைப்பான் தமிழன், மாட்டுக்காகவும் உழைப்பான் தமிழன். காளைகள் தமிழக மக்களின் குடும்பத்தில் ஒரு உறுப்பினர். ஜல்லிகட்டுக்கு தடை என்பது ஒரு இனத்தின் அடையாளத்தை பண்பாட்டை அழிக்கும் செயல். ஜல்லிகட்டு இல்லாமல் பொங்கல் விழா நிறைவுறாது. உலகம் முழுக்க வாழ்கிற 12 கோடி தமிழர்களின் உணர்வை மதித்து பிரதமர் அவர்கள் ஜல்லிகட்டை நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்தைப் பற்றி படித்திருக்கிறேன். இப்போதுதான் தமிழ்நாட்டு இளைஞர்களின் வீரம்மிக்க போராட்டத்தைப் பார்க்க வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

எந்த அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல், கொடி இல்லாமல், சாதி , மத வேறுபாடு இல்லாமல் தமிழ்நாட்டு மக்கள் என்ற ஒற்றை உணர்வோடு மிகவும் கண்ணியமாகவும் கட்டுக்கோப்போடும் நடத்தும் அறவழிப் போராட்டத்தை பார்த்து, வியந்து தலை வணங்குகிறேன். தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறேன். என்னை போன்ற நடிகர்களின் ரசிகனாக இருந்த இளைஞர்கள் இன்று தமிழ் இளைஞர்களின் ரசிகனாக என்னை மாற்றி இருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு பீட்டா அமைப்பு சைவ உணவு சாப்பிடுகிறவன் என்ற முறையில் என்னை சிறப்பித்தது. இப்போது அதை பெரும் அவமானமாகக் கருதுகிறேன். அதற்காக மிகவும் வருந்துகிறேன்.

நானோ, எனது குடும்பத்தாரோ யாரும் பீட்டா அமைப்பில் உறுப்பினராக இல்லை. இருக்கிறார்கள் என்று யாராவது கூறினால் வீண் வதந்தி. ஆகவே மத்திய அரசு காளையை வன விலங்கு பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். காளையை காட்சிப் படுத்தப்பட்ட விலங்கு என்ற பட்டியலிலிருந்து நீக்க வேண்டும். வாடிவாசல் மூலமாக ஜல்லிகட்டு நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார் .

ஃப்ரீ செக்ஸ்னு ஒரு டாபிக் வெச்சா அதுக்கு 50ஆயிரம் பேர் வருவாங்க: ராதாராஜன்

சென்னை:

“ஃப்ரீ செக்ஸுன்னு ஒரு டாபிக் வெச்சா அதுக்கு ஒரு 50,000 பேர் கண்டிப்பா வருவாங்க” என்று விலங்குகள் நல ஆர்வலர் ராதாராஜன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிபிசி தமிழோசை வானொலிக்கு ராதாராஜன் அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் கூறியிருந்தார். அதன் விவரம்:

இப்ப வந்து தனித் தமிழ்நாடு வேணும் கேட்டா கண்டிப்பா வந்து 25,000 பேர் வருவாங்களா? வருவாங்க

ப்ரீ செக்ஸுன்னு ஒரு டாபிக் வெச்சா அதுக்கு வருவாங்களா ஒரு 50,000 பேர் கண்டிப்பா வருவாங்க

ஒரு இஸ்யூக்கு தெருவில் வந்து வருவதுதான் பீப்பிள் சென்டிமென்ட்டை பிரதிபலிகிறது சொல்றதை நான் ஏத்துக்க முடியாது.

இந்த நாட்டுல ரூல் ஆப் லா… அதுதான் எல்லாத்தைவிடவும் முக்கியம். சுப்ரீம்கோர்ட்ல ஒரு ஜட்ஜ்மெண்ட் ஆர்டர் வந்திருக்குன்னா அதுக்கு நம்ம கட்டுப்படுத்தான் ஆகனும்

இந்த விஷயத்தில மத்திய அரசோட செயல்பாடு எப்படி இருக்குன்னு எனக்கு தெரியலை. ஜனவரி 2016-ல் இந்த நோட்டிபிகேசன் விட்டது தப்புங்கிறதுதான் என்னோட கருத்து. அதுக்கு அப்புறம் அவங்க ஒன்னும் பண்ணலை.. அதனால வெயிட் அண்ட் வாட்ச்

இன்னிக்கு ஆந்திராவில சேவல் சண்டைக்கு பெட்டிங் நடக்கிறதுன்னு வந்திருக்கு.. 800 மாடு, 900 மாடுகளை லைன்ல நிக்க வெச்சு ஓடவிடுறது எப்படி காட்சிப்படுத்தவில்லைன்னு சொல்றாங்க.. ஜல்லிக்கட்டை வைத்து பணம் சம்பாதிக்கலைன்னு அவங்க சொல்றாங்க.. நான் பணம் சம்பாதிக்கிறாங்கன்னு நான் சொல்றேன் சார்

அவங்க பணம் சம்பாதிக்கவில்லை என்பதற்கும் ப்ரூப் இல்லை.. அவங்க பணம் சம்பாதிக்கிறாங்க என்பதற்கும் என்கிட்ட ப்ரூப் இல்லை… ஆனால் பெட்டிங் நடக்கிறதுங்கிறது மட்டும் இன்னிக்கு வெட்ட வெளிச்சமா வந்திருக்கல்ல

கிரிக்கெட்டுல பெட்டிங் நடக்கிறது… ஆனால் அங்க விளையாடுறது ரெண்டு தரப்பு மனிதர்கள். ஆனால் காளைகள் என்னை வெச்சிண்டு வெளையாடுன்னு கேட்கலையே… காளையோட பெர்மிஷன் இருக்கா.. மனுசங்க ஒருத்தரோ ஒருத்தர் அடிச்சுண்டு விளையாடறது அவங்களோட விருப்பம்.. இதுல காளை விருப்பப்பட்டு வரலை.

மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்தால் அதற்கு பிறகு நாங்க என்ன செய்யனுமோ அதை செய்வோம்.. ஆனால் மத்திய அரசு அதை செய்யாதுன்னு நம்பிக்கை இருக்கு.

செய்தி ஆதாரம்: https://www.bbc.com/tamil/38670535

இந்நிலையில், அவரது கருத்து திரித்து கூறப்பட்டுள்ளதாகக் கூறி அவர் ஓர் அறிக்கையும் வெளியிட்டார். அதில், தான் பீட்டா அமைப்புடன் எந்த விதத்திலும் தொடர்பு கொண்டவர் இல்லை என்றும், தான் விலங்குகள் நல அமைப்பின் ஆர்வலர் மட்டுமே என்றும் கூறியுள்ளார்.

மேலும், பிபிசி எடுத்த பேட்டி, பொங்கலுக்கு முன்னரே, அதுவும் இந்தப் போராட்டங்கள் எல்லாம் துவங்குவதற்கு முன்பேயே எடுக்கப்பட்ட பழைய பேட்டி என்றும், அதற்கும், தற்போதைய போராட்ட களத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இதனை வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பரப்பிவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்ப சதி; மாணவர்களுக்கு விழிப்பு தேவை: ராமதாஸ்

சென்னை:
ஜல்லிக்கட்டு போராட்டத்தை திசை திருப்ப சதி நடக்கிறது என்றும், இது குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும், தமிழர்களின் கலாச்சார எதிரியான பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கட்டுப்பாட்டிற்கு உதாரணமாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தை திசை திருப்புவதற்கு சில சீரழிவு சக்திகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முதலிலும், அதன்பின்னர் சென்னை மெரினாவிலும் தொடங்கிய மாணவர் போராட்டங்கள் இன்று மக்கள் போராட்டமாக மாறி தமிழகம் முழுவதும் விரிவடைந்துள்ளன. தமிழகத்தின் குக்கிராமங்களில் கூட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டாவுக்கு எதிராகவும் அறவழிப் போராட்டங்கள் நடப்பதையும், அதில் மகளிர், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்பதையும் பார்க்க முடிகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் பெரும் வெற்றி பெற்றதற்கு காரணம், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அமைதியாக நடத்தப்படுவது தான்.

வழக்கமாக சில நூறு பேர் கூடினாலே உற்சாக மிகுதியில் சில வன்முறைகள் நடப்பது வாடிக்கையாகி விட்ட சூழலில், சென்னையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியும் சிறு சலசலப்புக் கூட இல்லாமல் போராட்டம் தொடர்கிறது. மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் எந்த இடையூறுமின்றி போக்குவரத்து நடைபெறுகிறது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த காவல்துறையினருக்கு மாணவர்கள் உதவுகின்றனர். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நடக்கும் போராட்டங்களும் அமைதி மற்றும் எழுச்சியின் வடிவமாக அமைந்திருக்கின்றன. அரிதிலும் அரிதாக காவல்துறையினரும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர். மாணவர்களின் போராட்ட அணுகுமுறையை தமிழக காவல்துறை வெளிப்படையாக பாராட்டியிருக்கிறது. இவையெல்லாம் கடந்த காலங்களில் நிகழ்ந்த போராட்டக் களங்களில் பார்க்க முடியாத ஒன்றாகும். இந்த பெருமைகள் அனைத்தும் மாணவர்களையே சேரும்.

ஆனால், அழகிய ஓவியத்தின் நடுவே கருப்பு மையை சிதற விட்டது போல சில இடங்களில் சில நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. மதுரை வைகை பாலத்தில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு கோவை & நாகர்கோவில் பயணிகள் தொடர்வண்டியை சிலர் தடுத்து நிறுத்தினர். தொடர்வண்டி முற்றுகைப் போராட்டம் இரவைத் தாண்டி இன்றும் நீடிப்பதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதேபோல், திண்டுக்கல்லிலும் தொடர்வண்டிகள் மறித்து நிறுத்தப்பட்டதால் தென் மாவட்டங்களுக்கு தொடர்வண்டி சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது. சேலத்திலும் தொடர்வண்டிகளை மறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. சேலத்தில் நடந்த போராட்டத்தின் போது லோகேஷ் என்ற மாணவர் மின்சாரம் தாக்கி காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார். ஒரு சில இடங்களில் பேரூந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தின் வெற்றிக்கு காரணமே யாருக்கும் பாதிப்பில்லாதவாறு நடத்தப்படுவது தான். மாணவர்களின் இந்த போராட்டத்தால் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டு வருவோருக்கும், இந்தப் போராட்டத்தை பயன்படுத்தி அரசியல் லாபம் ஈட்ட முயன்று தோல்வியடைந்த சக்திகளுக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெறுவதை சகித்துக் கொள்ள முடியவில்லை. ‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் உள்ள அந்த சக்திகளும், ஜல்லிக்கட்டுக்கு எதிரான சில சக்திகளும் எப்படியாவது இந்த போராட்டத்தை தடம் புரளச் செய்துவிட வேண்டும் எனத் துடிக்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு உள்ள நற்பெயரை கெடுத்து விட்டால் போராட்டத்தை வீழ்த்தி விடலாம் என்ற தீய நோக்குடன், தங்கள் ஆதரவாளர்களை மாணவர்கள் மத்தியில் ஊடுருவச் செய்து போராட்டத்தை திசை திருப்புவதற்கு முயல்கிறார்களோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

‘‘ஆயிரம் கைகூடி அமைந்ததாம் மண்டபம்… ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம்’’ என்பதைப் போல மாணவச் செல்வங்களில் அமைதி, ஒழுக்கம், கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றால் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ள ஜல்லிக்கட்டு போராட்டம் சிலரது சதியால் சீர்குலைய அனுமதிக்கக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை காவல்துறையினர் கடத்திச் சென்று தாக்கினர், மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை தாக்கி கலைக்க திட்டம், காவல்துறை தாக்குதலில் மாணவர்கள் சாவு என்றெல்லாம் பரப்பப்படும் வதந்திகளை மாணவர்கள் நம்பக் கூடாது.

ஜனவரி 16&ஆம் தேதி தொடங்கி இன்று வரை 5 நாட்களாக யாருக்கும் பாதிப்பில்லாமல் எவ்வாறு போராட்டம் நடைபெறுகிறதோ, அதே அணுகுமுறை நீடிக்க வேண்டும். தொடர்வண்டி மறியல், பேரூந்து மறியல் உள்ளிட்ட செயல்களில் மாணவர்கள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. மாணவர்கள் தொடங்கிய எந்த போராட்டமும் வெற்றி பெறாமல் இருந்ததில்லை. அதைப்போலவே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டமும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். – என்று கூறியுள்ளார்.

மதுரமான அனுபவம்!

திடீரெனத் தோன்றியது. ஜல்லிக்கட்டு என்றாலே நம் தென்னகம்தான்! அதுவும் மதுரை! நாம் ஏன் சென்னையில் இருந்து கொண்டு பார்த்த மக்களையே பார்த்து பேசி, பார்த்த காட்சிகளையே பார்த்துக் கொண்டு என்று தோன்றியது.
ஒரு நாள் பயணமாகவாவது இருக்கட்டுமே என்று…. சொந்தக் கருத்தில் விடுப்பு எடுத்து மதுரைக்குக் கிளம்பினேன்.
அருகருகே இருக்கும் அலங்காநல்லூர், பாலமேடு இரு பகுதிகளையும் பார்த்துவிட்டு, அங்குள்ள மக்களிடம் பேசிவிட்டு வருவது;
அடுத்தது, வழக்கம்போல் அங்குள்ள குலதெய்வம் பெருமாளையும் சேவித்து விட்டு வருவது… – இந்த இரண்டு குறிக்கோளுடன் மதுரைக்குச் சென்றேன்.
மதுரையில் சுற்றியதில்…
கல்லூரி மாணவர்கள், கல்லூரியை விட்டு வெளியேறியிருந்தார்கள்! சாலைகளில் அங்கங்கே கூடியிருந்தார்கள்.
தமுக்கம் மைதானம் நிரம்பியிருந்தது.
அலங்காநல்லூர் நகரப் பேருந்துகள் மறிக்கப்பட்டன. பேருந்து வழித்தடம் மாற்றப்பட்டு, பேருந்துகள் சுற்றி விடப் பட்டன.
தேனி- உசிலம்பட்டி சாலையில் மதுரை காமராஜர் பல்கலை மாணவர்கள் காலையிலேயே சாலை ஓரத்தில் வளைவை ஒட்டி அமர்ந்துவிட்டார்கள். கைகளில் பதாகைகள். வழக்கமான முழக்கங்கள்!
கடந்து செக்கானூரணி சென்றபோது, பஸ் ஸ்டாண்ட் ஒட்டி நாற்சாலை சந்திப்பில் தேவர் சிலை அடியில் நான்கு சாலைகளையும் மறித்துக் கொண்டு அருளாணந்தர் கல்லூரி மாணவர்கள் அமர்ந்துவிட்டார்கள்.
சிலர் கறுப்புச் சட்டைகளுடன்! மாணவர்களுடன் வேறு சிலரும் தொடர்பேயில்லாமல் ஊடுருவியிருந்தனர்.
கொளுத்தும் வெயில்! தண்ணீர் பாக்கெட்டுகள் மேலே தூக்கி வீசப்பட்டு, மாணவர்கள் கேட்ச் பிடித்து, பாக்கெட்டை வாயில் கடித்து பிய்த்து, பிதுக்கி தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, ஹோ வென்ற இரைச்சலிட்டு…
பகுதி எஸ்.ஐ., வந்தார். பார்த்துவிட்டு ஓரத்தில் நின்றார். போய்க் கேட்டேன். சார் எப்ப சார் அவங்களோட பேசி, ரோட்டை க்ளியர் பண்ணுவீங்க? என்று!
சார்.. எல்லாம் ஸ்டூடண்ட்ஸ். ஒன்னும் செய்ய முடியாது. எப்படியும் 2 மணி நேரம் ஆகும். பேசாம அப்படியே இருக்க வேண்டியதுதான் என்றார்.
ஓரிரண்டு ஆம்புலன்ஸுகளுக்கு வழிவிட்டார்கள். நேரம் கடந்தது. சாலை மறியல் நின்றபாடில்லை. மதியம் 1ஐத் தொட்டது.
திடீரென மாணவர்கள் பக்கத்தில் இருந்து ஏதோ சலசலப்பு. ஓரிருவர் கைகலக்க… கூட்டத்துக்குள் போலீஸார் சமாதானத்துக்கு வர…
பக்கத்தில் நின்றிருந்த தேனி, குமுளி அரசு பஸ் 4, இரு கார்களின் கண்ணாடிகள் கண்ணிமைக்கும் நொடியில் தூள் தூளாக…
போலீஸார் விரட்டியடிக்க… கும்பல் கலைந்தது!
ஒன்று மட்டும் உறுதி! மாணவர்கள் வன்முறையைக் கையிலெடுக்கவில்லை! ஆனால், அரசியல், சாதீய நோக்கில் பிரச்னையைக் கொண்டு செல்லும் சிலர் மாணவர்களிடம் ஊடுருவியிருப்பது உண்மை!
இதன் மூலம் மாணவர்களுக்கு அனுசரணையாக இருப்பது போல் விஷக் கருத்துகளை பரப்புவதும் உண்மை.
தமிழ் தேசியம், தமிழுணர்வு என்ற போதனைகளைப் புகுத்தி, அரசுக்கும் தேசியத்துக்கும் தேசத்துக்கும் எதிரான மனோ பாவத்தை அவர்களிடம் புகுத்துவதும் கண்கூடு!
மாணவர்கள் போராட்டம் என்று அரசு வாளாவிருப்பதை விட, நச்சுக் கருத்து, அந்தக் குருத்துகளிடம் பரப்பிவிடப்படுகிறது என்ற மிக மிக சீரியஸான விஷயத்தை மாநில, மத்திய அரசுகள் கவனத்தில் கொண்டு, இந்தப் போராட்டத்துக்கு உடனே முடிவு கட்ட வேண்டும்.

பீட்டாவைத் தடை செய்யவேண்டும்: தமிழிசை சௌந்தர்ராஜன்

திருச்சி:

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பாஜக மாநில நிர்வாகிகள் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியபோது,

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களின் உணர்வுக்கு தலை வணங்குகிறோம். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தும்வரை பாஜக ஓயாது. இதுகுறித்து கட்சியின் பாஜக தலைவர் அமித்ஷாவிடம் ஆலோசித்து வருகிறோம். வரும் 20-ம் தேதி (நாளை) பாஜக தமிழக நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் டெல்லிக்குச் சென்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சரையும், கட்சியின் முக்கிய தலைவர்களையும் சந்தித்து ஜல்லிக்கட்டு தொடர்பாக பேச உள்ளோம்.

மாணவர்களின் போராட்டம் குறித்து பிரதமர் மோடியும், மத்திய அரசும் மவுனம் காப்பதாகவும், தமிழர் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை என்றும் குற்றம் சாட்டுவது தவறு. இப்போராட்டம் தொடர்பாக டெல்லியில் இருந்து அடிக்கடி தொடர்புகொண்டு விசாரித்துக்கொண்டு உள்ளனர். விரைவில் அவர்களிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்பதை தமிழக பாஜகவும் வலியுறுத்துகிறது.

ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டு வந்தால், அதில் கையெழுத்து போடக்கூடாது என குடியரசுத் தலைவரிடம் பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தினால் அரசைக் கலைக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பினர் கூறுகின்றனர். எனவே, பீட்டா அமைப்பின் உள்நோக்கம், நடவடிக்கைகள், பின்னணி போன்றவற்றை ஆராய வேண்டும் என மத்திய அரசுக்கு, நான் கடிதம் எழுதியுள்ளேன் என்றார்