எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டு வேண்டாம்

2009-ல் தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக கொண்டுவந்த சட்டத்தின் நிபந்தனைகளில் ஒன்று- 5 ஆண்டுகள் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்றிராத ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடையாது என்பதும். இந்த நிபந்தனை முன்னெப்போதையும்விட இப்போது தீவிரமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

தன்னெழுச்சிப் போராட்டத்தினால் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள மனவெழுச்சி, அவரவர் பகுதிகளில் ஜல்லிக்கட்டுகளை நடத்தும் ஆர்வத்தைத் தூண்டும். தூண்டியும் இருக்கிறது. அது வேண்டாம். ஏனெனில், சாலையில் மாடு நின்றால், அது எந்தப் பக்கம் திரும்புமோ என்ற அச்சத்தில் சற்று ஒதுங்கிப் போகிறவர்களே அதிகம்.
இந்தப் போராட்டக் களத்தில் குதித்த 99 விழுக்காட்டினருக்கும் இது பொருந்தும்.

மிகச் சிலரே காளையை எதிர்கொள்ளும் மனஉறுதி கொண்டவர்கள், மிகச் சிலரே அதற்கான பயிற்சி உடையவர்கள். ஜல்லிக்கட்டில் வேடிக்கைப் பார்ப்பதற்குக்கூட ஒரு பயிற்சி தேவை. காளை எப்படி எந்தப் பக்கம் திரும்பும் என்கிற போக்கு அறிந்தவர்கள் மட்டும்தான் காளை ஓடும் பாதையில் நிற்கத் தகுந்தவர்கள்.

ஆனால் தற்போது ஜல்லிக்கட்டு தடை நீக்கிய வெற்றிக்களிப்பு இந்த எச்சரிக்கை உணர்வுகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளிவிடும். எல்லா ஊர்களிலும் ஒரு மாட்டை நிறுத்தி ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் முற்படுவாரகள். இளைஞர் தன்எழச்சியைக் கண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை, இந்த நிபந்தனைகள் தெரிந்தாலும், மவுனமாக கெடுபிடி இல்லாமல் ஒதுங்கி நிற்கும். இதனால் நிச்சயமாக விபத்துகள் நடக்க வாய்ப்பு மிக மிக அதிகம்.

இத்தனை லட்சம் இளைஞர்களும் அலங்காநல்லூர் பாலமேடு சென்று பாதுகாப்பான இடத்தில் இருந்து வேடிக்கைப் பார்க்கலாம். ரசிக்கலாம். ஆனால் 5 ஆண்டுகள் ஜல்லிக்கட்டு நடைபெற்றிராத ஊர்களில் இப்போது ஜல்லிக்கட்டு வேண்டாம்.

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் சில இனங்களில் மட்டுமே தொடரும் பண்பாட்டுக்கூறு. எல்லாரும் அதை கொண்டாடுவது விபத்தை கூவி அழைப்பதாக முடியும். ஆர்வக் கோளாறினால் இளைஞர்கள் ஊருக்கு ஊர் ஜல்லிக்கட்டு என்று பரபரக்க வேண்டாம். பயிற்சி இல்லாத பலரும் ஜல்லிக்கட்டில் களம் காண முற்படுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

அலங்காநல்லூர், பாலமேடு ஆகிய இடங்களிலும்கூட இதுவரை எத்தனை காளைகள் இடம்பெற்றனவோ அந்த எண்ணிக்கைக்கு கூடுதலாக காளைகளை அனுமதிப்பதில்லை என்று உறுதியுடன் அதிகாரிகள் இருக்க வேண்டும். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள்- குறிப்பாக காளைகள் திமிறித் திரும்பி வேடிக்கைப் பார்ப்போர் மீது பாயாதபடிக்கு- பலமானதாக இருக்க வேண்டும்.

வெற்றியோடு இளைஞர்கள் வீடு செல்லட்டும்.
விளையாடுவோர் மட்டும் விளையாடட்டும்

கட்டுரை: ஆர்.சோமசுந்தரம்