சென்னை:
அதிமுக., விவகாரத்தில் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்படி என்றால் எங்களுக்கு ஒன்றும் அதில் பிரச்னை இல்லை என்று சசிகலா விவகாரத்தில் கருத்து தெரிவித்த எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா, எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றும், அவரால் உருவாக்கப்பட்ட கட்சி உடையக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை ராமாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்துக் கூறிய சுதா,
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பாகவே செயல்படுகிறார். சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மக்கள் அவரை ஆதரித்தால் அதில் எந்தப் பிரச்னையும் எங்களுக்கும் இல்லை. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு அவரை அழைத்திருக்கிறோம். அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் கிடையாது. அவ்வளவு எளிதாக எந்த உண்மையையும் மறைத்துவிட முடியாது.
ஊடகங்களும் அப்படி எளிதாக விட்டு விடாது. எனவே, எங்களுக்கு ஜெயலலிதா மரணத்தில் எந்த சந்தேகமும் கிடையாது.
இந்தியா ஜனநாயக நாடு. இங்கு யாரும் அரசியலுக்கு வரலாம். தீபாவும் அரசியலுக்கு வரலாம். நான் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி உடையக் கூடாது. அதேபோன்று அவரது இரட்டை இலை சின்னமும் நீடிக்க வேண்டும். எம்ஜிஆரின் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்று கூறினார் சுதா.



