புதுதில்லி :
வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.1000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் . தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இந்த தொகையை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலையை நேரில் பார்வையிட மத்தியக் குழுவை உடனடியாக தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும். தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை மதிப்பிடவும் இக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கடந்த மாதம் 31ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் உள்ள குடிநீர் ஏரிகளில் 1.966 டிஎம்சி தண்ணீரே உள்ளது. நீர்நிலைகளில் தண்ணீரின் அளவும் மிகவும் குறைந்துள்ளது. முக்கியமான 15 அணைகளில் 25.74 டிஎம்சி தண்ணீரே உள்ளது. இதனால் தமிழகத்தின் வறட்சி பாதிப்புக்களை சரி செய்ய ரூ.39,565 கோடியை நிவாரண நிதியாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலன், பிரதமர் அலுவலகத்தில் இந்த மனுவை அளித்துள்ளார்.



