Home Blog Page 5852

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை கௌரவித்த தமிழக காவல்துறை !

 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் போக்குவரத்து காவல் துறை சார்பில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிவந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்காமல் மாறுப்பட்ட முறையில் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கௌரவித்து போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு அறிவுறை கூறிய சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
 
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு கடந்த 11 ந்தேதி முதல் தலைகவசம் அணிதல், ஒருஇருசக்கரவாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்கவேண்டும்,சாலைவிதிகளை கடைபிடித்தல் என போக்குவரத்து விதிகளின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறான விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் இன்று வாணியம்பாடி போக்குவரத்து மற்றும் நகர காவல்துறையினர்இணைந்து பேருந்துநிலையம்,ரயில்வே கேட்,நியுடவுன் போன்ற பகுதிகளில் தலைகவசம் அணியாமலும் ,ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கும் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஒட்டி செல்லும் வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு மாலை அணிவித்தும்,இனிப்புகள் வழங்கியும்,கௌரவித்து பின்னர் சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி அறிவுறை வழங்கினர்.
 
நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அண்ணாதுரை ,உதவி ஆய்வாளர்கள் செல்வமணி,வில்சன்,கேங்கர் பாண்டியன்,நகர காவல் உதவி ஆய்வாளர் லூர்துஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு போக்குவரத்து காவலர்கள்,காவல் துறையினர் ஆகியோர் சாலை விதிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

1,686 காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு

சென்னை:

இந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி 1686 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட தமிழக அரசின் செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் காவல் துறை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத்துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல்துறையில் காவலர் மற்றும் தலைமைக் காவலர் நிலைகளில் 1500 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், ஓட்டுநர் கம்மியர், ஓட்டுநர் தீயணைப்போர், மற்றும் தீயணைப்போர்ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில் முதல்நிலை வார்டர்கள் 60 பேர்களுக்கும் ”தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்” வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி பதக்கங்கள் பெறுபவர்களுக்கு ரூ.200/- மாதாந்திர பதக்கப்படியாக வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் காவல் துறை தலைவர், இயக்குநர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மற்றும் சிறைத்துறை தலைவர் அவர்களால் மாவட்டத் தலைநகரங்களில் பின்னர் நடைபெறவுள்ள அரசு விழாக்களில் பதக்கங்கள் வழங்கப்படும்.

மேலும், காவல் வானொலி பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், நாய் படைப் பரிவில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் காவல் புகைப்படக் கலைஞர் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் ஆக மொத்தம் 6 அதிகாரிகளுக்கு அவர்களது தொழிற்சிறப்பு மற்றும் மாசற்ற பணியை அங்கீகரிக்கும் வகையில் “தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்”வழங்கப்படுகிறது. இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகளுக்கு, ரொக்கத் தொகையாக காவலர் மற்றும் தலைமைக்காவலர் நிலையில் ரூபாய் 3 ஆயிரமும், சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளர் நிலையில் ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும்.

இதற்கென நடைபெறவுள்ள சிறப்பு விழாவில் மேற்படி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போல் சேவல் சண்டை: தடையை மீறிய ஆந்திரா

கோதாவரி:

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் தடையை மீறி சேவல் சண்டை நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதுபோல் ஆந்திர மாநிலத்தில் சங்காராந்தி பண்டிகையின் போது சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம்.

சேவல் சண்டைகளின் போது, சண்டையிடும் சேவல்களின் கால்களில் கத்தியைக் கட்டி ஒன்றோடு ஒன்று மோதவிடுவர். இந்தச் சண்டையில் ஏதாவது ஒரு சேவல் இறந்தாலோ அல்லது எழுந்து நிற்க முடியாத அளவுக்கு ரத்தக் காயம் அடைந்தாலோ மட்டுமே சேவல் சண்டைப் போட்டி முடிவுக்கு வரும். இதனால் சேவல் சண்டைக்கு ஆந்திர உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது.

ஆனால் தடையை பொருட்படுத்தாமல் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரில் நடைபெற்ற சங்கராந்தி விழாவில் சேவல் சண்டை நடத்தப்பட்டது.

ஆளும் தெலுங்கு சேதம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகந்திவெங்கடேஸ்வரா ராவ் சேவல் சண்டையை தொடங்கி வைத்தார்.

காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் அண்டை மாநிலமான ஆந்திராவில் தடையை கண்டுகொள்ளாமல் சேவல் சண்டை நடத்தப்பட்டிருப்பதுடன் அதனை ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரே தொடங்கி வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டும் உச்சநீதிமன்ற தடையை மீறி ஆந்திராவில் பல நூறு கோடி ரூபாய் பந்தயம் கட்டப்பட்டு சேவல் சண்டை நடைபெற்றது.

தைப் பொங்கல் திருநாள்: கருணாநிதி வாழ்த்து

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி:

தைத் திங்கள் முதல் நாள். தமிழ்ப் புத்தாண்டு– பொங்கல் நன்னாள். தமிழர் இதயமும் இல்லமும் மகிழும் இன்பத் திருநாள்.

தி.மு.க. ஆட்சியிலே இருந்த போது, உழுது பயன்கண்டு அனைவரும் வயிறார உண்ண–உடுத்த வகை செய்திடும் உழவர் பெருமக்களின் துயர் தீர 7000 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாய கடன்களைத் தீர்த்து; வட்டியிலாப் பயிர்க்கடன் தந்து; விவசாயப் பம்பு செட்டுகளுக்கு மும்முனை மின்சாரம் இலவசமாக வழங்கி; நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும் இலவச நிலம் வழங்கி; நெல்லுக்கும் கரும்புக்கும் விலைகளை உயர்த்தித் தந்து; தனியார் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு நிலுவையின்றி கரும்புக்கான விலைகளை வழங்கச் செய்து ஆண்டுதோறும் தமிழகம் முழுவதிலும் நியாய விலைக் கடைகள் மூலம் அனைவருக்கும் இலவச வேட்டிசேலைகள் வழங்கி; சர்க்கரைப் பொங்கல் தயாரித்திடத் தேவையான பொருள்கள் கொண்ட பைகளை நல்கி எல்லோரையும் பொங்கல் கொண்டாடி மகிழ்ந்திடச் செய்தோம்.

கடந்த 5 ஆண்டுகளாக, காவிரியில் ஜூன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்படாமல் விவசாயம் பாழ்பட்டு–வேதனையில் வாடிய விவசாயிகளின் விழிநீர் துடைத்திட வக்கில்லாமல்; பெருமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி நீரை உரிய காலத்தில் திறக்காமல், ஒரே நேரத்தில்–அதிலும், நள்ளிரவு நேரத்தில் முன்னெச்சரிக்கை எதுவுமின்றி 30 ஆயிரம் கனஅடிகளுக்கு மேலாகத் திறந்து விட்டு; ஏராளமான உயிர்ப் பலிகள் நிகழ்ந்திட–வீடுகள், தொழிற்கூடங்கள், கார் முதலிய வாகனங்கள் எல்லாம் மூழ்கி வீணாகிட– காரணமான ஓர் அரசு– இன்றைய அரசு.

சட்டமன்றத் தேர்தலின் போது, கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, தேர்தலில் வென்ற பின் நடைபெற்ற பதவி ஏற்பு விழா மேடையிலேயே கையெழுத்திட்டு ஆணைகள் பிறப்பித்து வரலாறு படைத்தவர்கள் நாம்.

ஆனால், வாக்குறுதிகள் பலவற்றைத் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தாலும், அவற்றை நிறைவேற்றிட அக்கறை காட்டாத ஓர் அரசு– சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் 110.

ஒவ்வொரு 110–லும் பல கோடி ரூபாய் மதிப்புடைய ஆரவார அறிவிப்புகள். அறிவித்த எதனையும் நிறைவேற்றாத ஓர் அரசு, இன்றைய அரசு.

“சொன்னதைச் செய்வோம். செய்வதைச் சொல்வோம்” என்ற கழக ஆட்சியில், தொழில் வளர்ந்தால் வேலை வாய்ப்புகள் பெருகும். பொருளாதாரம் உயரும். தமிழனின் வாழ்க்கைத் தரம் சிறக்கும் என திட்டமிட்டு– ஆட்சி அமையும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழகம் முழுவதிலும் தொழில்களை வளர்த்ததால் தொழில் வளர்ச்சியில் 1967–76 கழக ஆட்சியில் இந்தியாவில் தமிழகம் மூன்றாம் இடம். 1977–88 அ.தி.மு.க. ஆட்சியில் 10ஆம் இடம். 1989–91இல் கழக ஆட்சியில் முதல் இடம். 199196 அ.தி.மு.க. ஆட்சியில் 6ஆம் இடம். 1996–2001 கழக ஆட்சியில் முதல் இடம். 2001–2006 அ.தி.மு.க ஆட்சியில் 5ஆம் இடம். 2006–2011 கழக ஆட்சியில் முதல் இடம். 2011–2016 அ.தி.மு.க. ஆட்சியில், இன்று– தொழில் வளர்ச்சியில் தமிழகம் படுபாதாளத்தில். அதாவது இந்தியாவிலேயே கடைசி இடத்தில்.

மீண்டும் தமிழினம் எழுச்சி பெற 2016 சட்டமன்றத் தேர்தல் களத்தில், “பதர்களைத் தூற்றி நெல்மணிகளைக் குவித்து” வெற்றிகள் ஈட்டிட; இந்தத் தமிழ்ப் புத்தாண்டு– பொங்கல் திருநாளில் வாழ்த்துகள் கூறி, கழகக் கண்மணிகளே! கணநேரமும் வீணாக்காமல் களத்தில் உழைத்திடுவீர் என உங்கள் அண்ணன் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

 

 

பொங்கல் வாழ்த்து: தமிழில் ட்விட்டிய மோடி

சென்னை:

தமிழக மக்களுக்கு “இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்” என பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பிரதமர் தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், தமிழ் நாட்டு மக்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் ட்வீட் செய்துள்ளார். இதேபோல் மகரசங்கராந்தி, அஸ்ஸாமின் மகா பிகு கொண்டாடுவோருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

 

ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைவரிசை: இந்தோனேசிய குண்டுவெடிப்பில் 17 பேர் பலி

ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் அதிபர் மாளிகை, ஐ.நா. அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில் போலீசார் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது.

இந்தோனேசியாவில், முக்கிய இடங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தலைநகர் ஜகார்த்தாவில் அதிபர் மாளிகை மற்றும் ஐ.நா. அலுவலகம் அருகே குண்டுகள் வெடித்தன. உணவகம், வணிக வளாகம் உள்ளிட்ட 7 இடங்களில் பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் மக்கள் அதிர்ச்சியில் உரைந்தனர்.

உணவகத்திற்கு வெளியே குண்டு வெடித்ததில் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. சாலைகள் சேதமடைந்தன. 6 பேரின் உடல்கள் சாலைகளில் தூக்கி வீசப்பட்டு கிடந்தன. கட்டடங்களுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர். அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் அவர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். 10 முதல் 14 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

 

 

 

ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு: ஜன.18ல் ஆஜராகிறார் கருணாநிதி

சென்னை:

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில், திமுக தலைவர் கருணாநிதி வரும் ஜன.18 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

ஆனந்த விகடன் வார இதழில் வந்த ஒரு கட்டுரையை அறிக்கையாக வெளிட்டதற்காக ஆளும் அதிமுக அரசு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கில் தடை ஆணை பெறலாம் என கட்சியின் வழக்கறிஞர்கள் ஆலோனை கூறிய நிலையில், அது தேவையில்லை என்றும், நானே நேரில் நீதிமன்றத்தில் ஆஜராகுவேன் என்றும் கூறிவிட்டேன்.

அதன்படி வருகிற 18 ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்காக நான் நேரில் ஆஜராகிறேன் என அறிவித்துள்ளார் கருணாநிதி.

அருந்தொண்டாற்றிய அறிஞர்களுக்கு தமிழக அரசு விருதுகள்: தினமணி ஆசிரியருக்கு திரு.வி.க. விருது

தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதனுக்கு தமிழக அரசின் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் மேலும் எட்டு அறிஞர்களுக்கு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

ரூ.1 லட்சம், தங்கப் பதக்கம்: விருது பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியவை வழங்கி சிறப்பிக்கப்படும். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வரும் சனிக்கிழமை (ஜனவரி 16) நடைபெறும் திருவள்ளுவர் திருநாள், தமிழக அரசின் விழாவில் இந்த விருதுகளை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 46 பேருக்கு நிதியுதவி அரசாணைகளும் இந்த விழாவில் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழுக்கும், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2015-ஆம் ஆண்டுக்கான விருதுகளைப் பெறுவோர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

விருது பெறுவோர் விவரம்:
திருவள்ளுவர் விருது-முனைவர் வி.ஜி.சந்தோசம்,
தந்தை பெரியார் விருது-தருமபுரி வி.ஆர்.வேங்கன்,
அண்ணல் அம்பேத்கர் விருது-எ.பொன்னுசாமி,
பேரறிஞர் அண்ணா விருது-பேராசிரியர் முனைவர் பர்வத ரெஜினா பாப்பா-காரைக்குடி,
பெருந்தலைவர் காமராசர் விருது-பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் இரா.வேங்கடசாமி, காந்தி நிகேதன், தே.கல்லுப்பட்டி,
மகாகவி பாரதியார் விருது-கவிஞர் பொன்னடியான்,
பாவேந்தர் பாரதிதாசன் விருது-முனைவர் வீ.ரேணுகாதேவி, மதுரை,
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது-கி.வைத்தியநாதன், தினமணி ஆசிரியர்,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது-இரா.கோ.ராசாராம், மதுரை.
விருது வழங்கும் விழா: தமிழறிஞர்களுக்கு விருதுகளை வழங்கும் விழா,

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வரும் 16-ஆம் தேதியன்று நடைபெறும். விருது பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும், ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரைச் சான்றிதழ் ஆகியன வழங்கப்படும். மேலும், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 46 பேருக்கு நிதியுதவிக்கான அரசாணைகள் விழாவில் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பான தமிழ்ப் பணிக்காக, “தினமணி’யின் முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவனுக்கு, கடந்த 2010-ஆம் ஆண்டு திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இப்போது “தினமணி’யின் ஆசிரியராக உள்ள கி.வைத்தியநாதனுக்கு திரு.வி.க. விருது அறிவிக்கப்பட்டுள்ளது. “தினமணி’ பத்திரிகையில் ஆசிரியர் பணியில் இருக்கும் போதே அரசு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை கி.வைத்தியநாதன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிஞர்களின் பணியைப் பாராட்டி தமிழக அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் விருது விழாவுக்கு அனைவரும் வரலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விருது வழங்கும் விழாவுக்கென தனியாக அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டாலும், அழைப்பிதழ்கள் இல்லாதவர்களும் வரலாம். எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபு, ஊர்வசியால படத்தின் பலம் கூடும்: ஆரி உற்சாகம்!

2016 ஆம் ஆண்டின் துவக்கமே நடிகர் ஆரிக்கு மிக பிரகாசமாய் இருக்கிறது. ஒரு பாரம்பரியம் உள்ள தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் பெருமை பேச்சில் தெரிகிறது. ‘என் மகிழ்ச்சியை சொல்லில் சொல்லி அளவிட முடியாது. அபிராமி திரை அரங்குகளின் உரிமையாளர் ராமநாதன் சாரிடம் இருந்து அழைப்பு வந்தவுடன் சற்று பதற்றமாய் தான் இருந்தது. ஆனால் அது அவர் படத்தில் நடிக்க சொல்லி என்பதை தெரிந்துக் கொண்டவுடன் என் உற்சாகத்துக்கு அளவே இல்லை. வளரும் நடிகனான எனக்கு அவரது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து நடிக்க அழைப்பு வந்து இருப்பதில் மிக மிக பெருமை. ‘உன்னோடு கா’ என்று தலைப்பிட்டு உள்ள இந்தப் படத்தில் நான் பிரபு சாருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. நகைச்சுவை கலந்த காதல் கதையான ‘உன்னோடு கா’ படத்தில் எனக்கு இணையாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. திறமையான புதிய இயக்குனர் ஆர் கே, சென்னை 28, மங்காத்தா ஆகிய படங்களின் ஒளிப்பதிவை ஆற்றிய சக்தி சரவணன், ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் இசை அமைப்பாளர் சத்யா, என்று ஒரு திறமையான தொழில் நுட்பக் கலைஞர்களோடு இந்தப் படத்தில் இணைந்து இருப்பது ‘உன்னோடு கா’ படத்தின் மேல் ஏறும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும். பிரபு சாருடன் ஊர்வசி மேடமும் இணைந்து நடிப்பது ‘உன்னோடு கா’ படத்தின் பலத்தை கூட்டும். மனோ பாலா சார், மன்சூர் அலி கான், என்று ரசிகர்களை மகிழ்விக்கும் ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் ‘உன்னோடு கா’ படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. முழுக்கு முழுக்க ஜனரஞ்சகமாக, குடும்பத்தோடு வந்து ரசிக்க கூடியப் படமாக இருக்கும் ‘உன்னோடு கா’ என்கிறார் உற்சாகத்துடன் ஆரி.

9​,​ 10 தேதிகளில் துவங்கிய நடிகர் சங்கத்தின் குருதட்சணை முகாம் வெற்றிகரமாக நிறைவடைந்தது!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாண்டவர் அணியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான குருதட்சணை திட்டம் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி நடிகர் சிவகுமார் துவக்கி வைத்தார்.

தமிழகமெங்கும் உள்ள அனைத்து உறுப்பினர்களின் கலைத்திறன், குடும்பம் பற்றிய முழுவிவரங்களையும் சேகரித்து பதிவு செய்து அவர்களுக்கு தேவையான மருத்துவ, கல்வி மற்றும் இதர உதவிகளை மேற்கொள்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதன் விவரங்களை சேகரித்து பதிவு செய்ய இரண்டு நாள் முகாம் ஜனவரி 9, 1௦ தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துவங்கியது. பதினோறு மையங்களில் சங்க அலுவலக நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் முகாம் பற்றிய விபரங்கள் வருமாறு.

கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட உறுப்பினர்களுக்கான முகாம் சங்க மேலாளர் பாலமுருகன், நடிகர் அயூப் கான் மேற்பார்வையில் கோவையில் நடைபெற்றது. சேலம், தர்மபுரி மாவட்ட முகாம் நடிகை கோவை சரளா மேற்பார்வையில் சேலத்திலும், நாமக்கல் மாவட்ட முகாம் நடிகர் நந்தா மேற்பார்வையில் நாமக்கலிலும், கரூர், திண்டுக்கல் மாவட்ட முகாம் நடிகர் விக்னேஷ் மேற்பார்வையில் கரூரிலும், காரைக்குடி, சிவகங்கை மாவட்ட முகாம் நடிகை ராதா மேற்பார்வையிலும்,

புதுக்கோட்டை மாவட்ட முகாம் நடிகர் ஆரி மேற்பார்வையில் புதுக்கோட்டையிலும், திருச்சி, பெரம்பலூர் மாவட்ட முகாம் நடிகர் ஹேமசந்திரன் மேற்பார்வையில் அரியலூரிலும், நாகை மாவட்ட முகாம் நடிகர் பசுபதி மேற்பார்வையில் தஞ்சாவூரிலும், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்ட முகாம் நடிகர் மனோபாலா மேற்பார்வையில் புதுச்சேரியிலும், மதுரை, விருதுநகர், தேனி, ராமநாதபுரம் மாவட்ட முகாம் நடிகர் உதயா மேற்பார்வையில் மதுரையிலும்,

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முகாம் நடிகர் பிரேம் மேற்பார்வையில் ஆரணியிலும், திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட முகாம் நடிகை சோனியா மேற்பார்வையில் ஸ்ரீபெரம்பத்தூரிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. நடிகர் சங்க மாவட்ட நிர்வாகிகளும் நியமன உறுப்பினர்களும் முகாம் ஒருங்கினைப்பாளர்களாக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகரமாக பணியாற்றி முகாமை நிறைவு செய்து திரும்பியுள்ளனர்.

சென்னையில் மட்டும் இம்முகாமின் மீதமுள்ள பணி அதுவும் கூடிய விரைவில் நிறைவடைந்துவிடும் என்று தென்னிந்திய நடிகர் சங்க செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.