புதிய வகுப்பறை எம்.எல்.ஏ சரத்குமார் திறந்து வைத்தார்
தொலைக்காட்சி ஊழியர்காயம்
KEELAPAVOOR கீழப்பாவூரில் உள்ளுர் தொலைக்காட்சி ஊழியர் வீடுகளுக்கு இணைப்பு பணியில் ஈடுபட்டு இருந்தபோது வயர் அருகே உள்ள மின் கம்பத்தில் பட்டு ஷாக் அடித்து ஒருவருக்கு காயம் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதி
விடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்பில்லை: சுமந்திரன்
விடுதலைப் புலிகளுடன் எங்களுக்குத் தொடர்பில்லை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சுமந்திரன் கூறியுள்ளார். இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் இது குறித்துக் கூறிய போது, ”விடுதலைப் புலிகளுடனோ, அவர்களது கொள்கைகளுடனோ எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. தமிழர்களின் உரிமைகளுக்காகவே நாங்கள் போராடி வருகிறோம். ஆனால், நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதில்லை, ஊக்குவிப்பதும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என்ற வருத்தம் யாருக்கும் தேவையில்லை. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதற்காக சில கட்சிகள் செய்யும் முயற்சி இது. ஆனாலும் அப்படி ஒரு நடவடிக்கை இருந்தாலும் அதனை மக்கள் ஆதரிக்கவோ அனுமதிக்கவோ மாட்டார்கள்” என்று கூறினார்.
துவங்கியது பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
சென்னை: 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இன்றும் நாளையும், பிஎஸ் என் எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று அவர்களின் வேலை நிறுத்தம் துவங்கியது. தொலைத் தொடர்புத் துறையின் மேம்பாட்டுக்குத் தேவையான சாதனங்கள் வழங்க வேண்டும், கிராமப்புறங்களுக்கு தொலைத்தொடர்பு சேவை விரிவுபடுத்தப்பட வேண்டும், கூடுதல் கட்டணமின்றி 4ஜி அலைக்கற்றையை தாராளமயமாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் நடைபெறும் என்று பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை பாரிமுனை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் அவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர். அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கத்தினர் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர். இந்த வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தில்லியில் இன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் கொல்லப்பட்டதில் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை
சென்னை: ஆந்திர காவல் துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆந்திராவில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் தமிழக அரசு அமைதி காத்து வருகிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். . காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டு வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது. கர்நாடக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரியின் குறுக்கே அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்கிறது. இதே போல் தமிழக அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். – என்றார்.
இது டீச்சர்களுடன் ஓடும் சீஸன்: சினிமா தலைப்பல்ல; திண்டுக்கல் சம்பவம்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆசிரியை ஒருவருடன் அவரை விட வயது குறைந்த மாணவன் ஒருவன் காதலில் விழுந்து கை கோத்து காணாமல் போயுள்ளான். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தில் ஒரு சம்பவம் இதேபோல் நடந்துள்ளதால் இது திண்டுக்கல் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது டீச்சர்கள் ஓடிப் போகும் சீஸனோ என்று மலைக்க வைக்கும் வகையில் இருப்பதால், இதே போன்ற கதை அம்சங்களுடன் சினிமாக்களோ, சீரியல்களோ இனி வரலாம் என்ற அளவுக்கு இந்தச் சம்பவங்கள் இப்போது பேசப் படுகின்றன. நெல்லை மாவட்ட சம்பவத்தில் பள்ளியில் படித்த பத்தாம் வகுப்பு மாணவனுடன் இள வயது ஆசிரியை கைகோத்துக் காணாமல் போனார். திண்டுக்கல் சம்பவத்தில், டுட்டோரியல் கல்லூரியில் படித்த மாணவர் ஒருவர் ஆசிரியையுடன் மாயமாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திண்டுக்கல், முத்தழகுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 21 வயதாகும் இளம் பெண் செபஸ்டின் சாரதி. இவர் ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு டுடோரியல் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வந்தார். அதே டுடோரியல் பள்ளியில் 18 வயதாகும் சதீஷ் குமார் என்ற மாணவர் படித்து வந்தார். சதீஷ் குமார் கடந்த வருடம் நடந்த பிளஸ் 2 தேர்வில் தமிழைத் தவிர அனைத்துப் பாடங்களிலும் தோல்வி அடைந்தாராம். இதனால் எப்படியாவது பாஸ் ஆகி விட வேண்டும் என்ற உந்துதலில், டுடோரியல் பள்ளியில் சேர்ந்து படித்துள்ளார். அந்த வகுப்பில் ஆசிரியை செபஸ்டின் சாரதி பாடம் நடத்தும்போது சதீஷ் குமாருக்கு அடிக்கடி பாடத்தில் சந்தேகம் வருமாம். அதனால் அவ்வப்போது எழுந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பாராம். இருவருக்கும் இடையே இதனால் தனிப்பட்ட வகையில் பேச்சு வளர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில், கேள்வி கேட்கும் சதீஷ் குமாரை ஆசிரியைக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. வகுப்பில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கேள்வி பதில் விளையாட்டைத் தொடர, நாளடைவில் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். இதை அடுத்து, ஆசிரியை மாணவராக இருக்கும் இருவரும், வகுப்பு முடிந்ததும் காதலர்களாக உரு மாறி பல்வேறு இடங்களுக்கும் சுற்றியுள்ளனர். விடுமுறை நாட்களிலும் கூட விடாமல் வெளியே சென்று வரவே இருவரது வீட்டினருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இருவரின் நடவடிக்கைகளையும் உளவு பார்த்துள்ளனர். அப்போது, இருவரும் காதலிப்பது தெரியவந்துள்ளது. எனவே இரு வீட்டாரும் இருவரையும் தனியே அழைத்து, இது தவறு, இவ்வாறு பழகுவதை நிறுத்திக் கொண்டு, ஒருவரை ஒருவர் மறந்து விடுங்கள் என்று கூறியுள்ளனர். ஆனாலும் பெற்றோர், வீட்டாரின் கண்டிப்பை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு, செபஸ்டின் சாரதியும், சதீஷ் குமாரும் தொடர்ந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர், செபஸ்டின் சாரதியும் சதீஷ் குமாரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இருவரைக் குறித்தும் ஏற்கெனவே தெரியும் என்பதால், இருவரும் சேர்ந்தே மாயமாகிவிட்டதாகத் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இருவரின் பெற்றோரும் இவர்களைக் காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் செங்கோட்டை, கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கோதையும், மாணவன் சிவாவும் காணாமல் போய் பீதியைக் கிளப்பிய சம்பவம் இன்னும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இந்தச் சம்பவம் தமிழகத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேறு மாநிலத்தில் கைது செய்யும்போது போலீஸாருக்கான விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மனு
சென்னை: போலீஸார், ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்குச் சென்று கைது செய்யும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரி நகரைச் சேர்ந்த எஸ்.தங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ஆந்திர மாநிலம், ரேணிகுண்டா போலீஸார் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி எனது சகோதரர் ரவியை கைது செய்தனர். மூன்று நாள்கள் சட்ட விரோதக் காவலில் வைத்து பிறகு, 27-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதேபோன்று முகமது ரபி என்பவரை தமிழகத்திலிருந்து கைது செய்து சென்ற ஆந்திர போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது, ஏராளமான பொய் வழக்குகளைப் பதிவு செய்து ஆந்திர போலீஸார் கைது செய்கின்றனர். மேலும், எந்தத் தகவலும் தெரிவிக்காமல், நினைத்தவர்களைக் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்து, எத்தனை நபர்களை ஆந்திர போலீஸார் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர் என விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். தமிழக போலீஸாரிடம் தகவல் தெரிவிக்காமல் தமிழகத்தைச் சேர்ந்தவர்களைக் கைது செய்ய ஆந்திர போலீஸாருக்கு தடை விதிக்க வேண்டும். வேறு மாநிலத்துக்குச் சென்று யாரையாவது கைது செய்யும்போது போலீஸார் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கோரப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு திங்கள்கிழமை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இதேபோன்ற ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால், இந்த வழக்கை இங்கு நடத்துவதா அல்லது உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றுவதா என்பது குறித்து தெரிவிக்க அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து ஜூன் 3-ஆம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மக்களவையில் ராகுல் பேச்சு : சோனியா மகிழ்ச்சி
புது தில்லி: மக்களவையில் ராகுல் காந்தி விவசாயிகளின் பிரச்னை குரித்துப் பேசினார். ராகுலின் அந்தப் பேச்சு தமக்கு மகிழ்ச்சி அளித்ததாக சோனியா காந்தி கூறியுள்ளார். இனி தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விவாயிகளின் பிரச்னையை காங்கிரஸ் எழுப்பும் என்றும் சோனியா கூறினார். 55 நாள் விடுப்புக்குப் பின்னர் ராகுல் காந்தியின் தொடக்கம் சிறப்பாக இருந்ததாகவும் சோனியா கூறியுள்ளார்.
அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல்
திருநெல்வேலி: நெல்லையில் வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை.சிறையில் அடைக்கபப்ட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு புதன்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, வேளாண் தலைமைப் பொறியாளர் செந்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், அவர் தற்போது மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் என தெரிகிறது. முன்னதாக, இவர்கள் இருவரையும் வரும் 30 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு, அவர்களின் காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

