அமேதி: உத்தரப் பிரதேச மாநிலம் ம் அமேதி அருகே பீப்பர்புர் பகுதியில், சாலைப் போக்குவரத்துக் கழக பஸ்சில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 6க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான அந்த பஸ், பைசாபாத்தில் இருந்து சுல்தான்புர் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் 42 பயணிகள் இருந்தனர். அப்போது, ராம்கான் என்ற கிராமத்தில் அருகே பஸ்ஸில் தீ பிடித்தது. சில பயணிகள், பஸ் ஜன்னலை உடைத்து வெளியே குதித்து தப்பித்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் சுல்தான்புர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
10ஆம் வகுப்பு தகுதி: ராணுவ பாராசூட் தொழிற்சாலையில் வேலை
ராணுவ பாராசூட் உற்பத்தி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான தளவாடப் பொருட்கள் உற்பத்தித் தொழிற்சாலை பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றது. ராணுவத்துக்குத் தேவையான உடை, துப்பாக்கி, டாங்கிகள் மற்றும் துணைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பாராசூட் தயாரிக்கும் ராணுவத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு டெய்லர், மெஷினிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 198 இடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதில் டெய்லர் பணிக்கு மட்டும் 154 இடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…. 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சியுடன், பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். டெய்லர், மெஷினிஸ்ட், பிட்டர் ஜெனரல் மெக்கானிக், கார்பெண்டர், பிட்டர் எலக்ட்ரானிக்ஸ், எக்சாமினர் குளோத்திங் போன்ற பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு மற்றும் திறமைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 28 நாட்களுக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஏப்ரல் 11-17 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செம்மரக் கடத்தலில் தமிழக ஆந்திர முன்னாள் அமைச்சர்களுக்குத் தொடர்பு?
ஆந்திராவில் திருப்பதி வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்களை ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என்கவுன்டர் என்று கூறி சுட்டுக் கொன்றனர். அவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரும் அப்பாவிகள் என்றும், ஆந்திர போலீஸார் திட்டமிட்டே இந்த என்கவுன்டரை அறங்கேற்றியுள்ளனர் என்றும் பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட 20 பேரின் செல்போன் எண்கள் சோதனை செய்யப்பட்டன. அதில், ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் எண்கள் அவற்றில் இருப்பது தெரிய வந்தது. மேலும் செம்மரம் வெட்ட தொழிலாளர்களை அழைத்துச் செல்லும் 16 ஏஜெண்டுகளும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ஆந்திர போலீசார் நான்கு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் செம்மரங்களைப் பதுக்கி வைத்த சவுந்தரராஜன் என்பவரை ஆந்திரா போலீஸார் கைது செய்தனர். வெட்டிக் கொண்டு வரப்படும் செம்மரங்களை சவுந்தரராஜன் சென்னையில் உள்ள கடத்தல்காரர்கள் மூலம் பெற்று சீனா, பர்மா மற்றும் தென் கிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவைப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுந்தரராஜனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் 2 பேருக்கு செம்மரங்கள் கடத்தலில் நேரடித் தொடர்பு இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து அந்த இரு முன்னாள் அமைச்சர்கள் பற்றி ஆந்திர மாநில சிறப்பு அதிரடிப்படை போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த முன்னாள் அமைச்சர் வட மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அது உறுதிப் படும் பட்சத்தில், ஆந்திர போலீசார் அவரைக் கைது செய்யக்க்கூடும் என்று கூறப் படுகிறது.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சம்மன் – புத்தாண்டுப் பரிசு: மகிந்த ராஜபட்ச
மகிந்த ராஜபட்ச இலங்கை அதிபராக இருந்த போது ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், அமைச்சர் பதவியை ஒருவருக்கு வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் கொடுக்கப்பட்ட புகாரை அடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக் குழு சம்மன் அனுப்பியது. இது குறித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபட்ச, லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவினால் அனுப்பப்பட்டுள்ள சம்மன் – புத்தாண்டு பரிசு என்று கூறியுள்ளார். திஸ்ஸ அத்தநாயகவுக்கு நான் அமைச்சர் பதவியை வழங்கியதில் ஊழல் என்று கூறப்படுகிறது. ஒரு நாட்டின் அதிபராக இருப்பவர் அந்நாட்டு அமைச்சரவையில் ஒருவரை அமைச்சராக நியமிக்க முடியாவிட்டால் அந்தப் பதவியே தேவையற்றது என்றார் ராஜபட்ச. இலங்கை அதிபர் தேர்தலின்போது எதிர்க்கட்சி வேட்பாளருக்கு அமைச்சர் பதவி அளிக்க ராஜபட்ச முன் வந்ததாகவும், இதன் மூலம் எதிர்க்கட்சியை விட்டு வெளியேற அந்த வேட்பாளருக்கு ராஜபட்ச லஞ்சம் அளிக்க முயன்றதாகவும் ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகி பதிலளிக்குமாறு மகிந்த ராஜபட்சவுக்கு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன் அனுப்பியது. புதிய அதிபர் மைத்ரிபால சிறீசேன பதவியேற்றதிலிருந்து ராஜபட்ச மீதும், அவரது சகாக்கள் மீதும் பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டு வருகின்றன.
அட்சய திருதியை நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.136 குறைவு
சென்னை: அட்சய திருதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு, ரூ. 136 குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 17 குறைந்து ரூ. 2,526க்கும், சவரன் ஒன்றுக்கு ரூ. 136 குறைந்து ரூ. 20,208க்கும் விற்கப்படுகிறது. சில்லரை வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் குறைந்து ரூ. 39.00 என்ற அளவிலும், பார் வெள்ளி கிலோ ஒன்றிற்கு ரூ. 550 குறைந்து ரூ. 36,420 என்ற அளவிலும் விற்பனை ஆனது.
அம்பேத்கர் இல்லாவிடில் நான் எங்கே இருந்திருப்பேனோ? : மோடி கலக்கம்
புது தில்லி: அம்பேத்கரால்தான் நான் பிரதமர் ஆனேன். அம்பேத்கர் மட்டும் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேனோ என்று பிரதமர் மோடி கலக்கத்துடன் பேசினார். தில்லியில் நடைபெற்ற டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், அம்பேத்கர், சமூகத்தை இணைப்பதில் நம்பிக்கை கொண்டவர். பிரிப்பதில் இல்லை. அவர் எனக்கு ஓர் உந்து சக்தியாகத் திகழ்ந்தார். நான் பிரதமர் ஆவதற்கு காரணமாக இருந்தவர். அவரால்தான் அரசியலில் இந்த உயர்ந்த நிலையை நா அடைந்துள்ளேன். அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேனோ? இதை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். இத்தகைய உந்துசக்தி மனிதரைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவரை ‘தலித் தலைவர்’ என்று சொல்வதைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கும். அவர் தலித் தலைவர் இல்லை, மனித இனத்தின் தலைவர். அவர் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருந்தார். அதனால்தான், தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. தேர்தல் ஆணையம், நிதி ஆணையம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை உருவாக்கினார். இன்றும் இவற்றின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி -, எல்லோருக்கும் கல்வி அளிப்பதுதான். அவர் தனது வாழ்நாள் முழுவதும் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தினார்.அம்பேத்கர், உயிருடன் இருந்தபோது, சமூக தீண்டாமையையும், மறைந்த பிறகு அரசியல் தீண்டாமையையும் சந்தித்தார். ஆனால், அவர் படைத்த அரசியல் சட்டத்தில் தனது பாதிப்புகளை அவர் இடம்பெறச் செய்யவில்லை. அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைக் கீற்றாகத் திகழ்ந்தார் என்று பேசினார்.
கோவையில் கஞ்சா விற்ற கேரளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் கைது
கோவை: கோவையில், சி.எம்.எஸ் கல்லூரியில் கஞ்சா விற்பனை செய்த கேரளத்தைச் சேர்ந்த மாணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சேர்ந்த விஜய் (20) என்ற மாணவர் கோவை அருகே சின்ன வேடம்பட்டியில் உள்ள ஒரு சி.எம்.எஸ் கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாமாண்டு படித்து வருகிறார். விடுதியில் தனியாக அறை எடுத்துத் தங்கி வரும் இவர் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பயன்பாடு பரவலாக உள்ளது என்று சரவணம்பட்டி போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து திங்கள்கிழமை காலை கல்லூரி வளாகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சா பயன்படுத்திய மாணவர்கள் சிலர் பிடிபட்டனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த மாணவர்களுக்கு விஜய் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதை அடுத்து, விஜயை கைது செய்த போலீஸார், அவர் தங்கியிருந்த அறையில் பதுக்கி வைத்திருந்த 1.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் விஜய் கோவில்பாளையம், துடியலூர் பகுதிகளில் வியாபாரிகளிடம் கஞ்சா வாங்கி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் கோவை பகுதியில் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் காலமானார்
ஒடிசா முன்னாள் முதல்வர் ஜே.பி. பட்நாயக் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 89. 3.1.1927இல் பிறந்தவர் பட்நாயக். அவர், திருப்பதியில் நடைபெற்ற ராஷ்டிரீய சம்ஸ்கிருத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது, நேற்று இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டார். இருப்பினும், மருத்துவ சிகிச்சையை அவரது உடல் ஏற்றுகொள்ளாத நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார். பட்நாயக், 1947 ஆம் ஆண்டு உத்கல் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றவர். காங்கிரஸ்காரரான பட்நயக், முதன் முதலாக 1980 ஆம் ஆண்டு ஒடிசா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். 1989 ஆம் ஆண்டு வரை முதல்வர் பதவியில் இருந்தவர், 1995 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்து 4 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தார். பின் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டு 5 ஆண்டு காலம் அப்பதவியில் இருந்தார். பட்நாயக் மறைவுக்கு ஒடிசா ஆளுநர் ஜமீர் மற்றும் முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒடிசா அரசு இன்று விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் ஒடிசாவில் ஒரு வார துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஜே.பி.பட்நாயக்கின் இறுதிச்சடங்குகள் புரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலைவீழ்ச்சியை சமாளிக்க வாழையை வெளிமாநிலங்களில் சந்தைப்படுத்த வசதி தேவை: பொங்கலூர் மணிகண்டன்
வாழை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைவதை தடுக்கும் வகையில் வெளி மாநிலங்களில் வாழையை சந்தைப்படுத்த தேவையான வசதிகளை விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் வாழை விலை சரிவால் ஏற்படும் ஈழப்பீட்டை ஒரளவு தடுக்கலாம் என உழவர் உழைப்பாளர் சங்க நிறுவனத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி முழுவதும் வாழை விலை தடாலடியாக குறைந்ததால் வாழை விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வாழை விவசாயிகள் அவர்களது துயரத்தை துடைக்கும் வகையில் மத்திய அரசு, மாநில அரசும் வெளிமாநிலங்களில் வாழையை சந்தைப் படுத்தும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும், மேலும் இதற்கென குளிரூட்டும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு விலையில்லா நாட்களிலும் வாழையை மொத்தமாக அந்த குளிரூட்டப்பட்ட கிட்டங்கியில் பாதுகாத்து விலை இருக்கும் நேரத்தில் வாழையை விற்பனை செய்தால் இந்த விலை வீழ்ச்சியை வாழை விவசாயிகளுக்கு ஏற்படும் ஈழப்பீட்டை ஈடு செய்யலாம் என்றும் உழவர் உழைப்பாளர் சங்க நிறுவனத்தலைவர் பொங்கலூர் மணிகண்டன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஓ காதல் கண்மணி படத்தை பாராட்டிய சூர்யா
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள ஓ காதல் கண்மணி படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
ஏற்கனவே கௌதம் மேனன் இப்படத்தை பார்த்து விட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார். தற்போது சூர்யாவும் இவருடன் இணைந்துள்ளார். படம் வெளியான அன்றே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அறிந்த சூர்யா கூடிய சீக்கிரம் ‘ஓ காதல் கண்மணி’ படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’ படத்தை பார்த்துவிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில், ‘Just watched #OKKanmani! Mani sir,P.C sir,ARR.. WOW!! Couldn’t take my eyes off the actors! Superb @dulQuer, nithya menon….! #Happy’ என்று கூறியிருக்கிறார்.

