புது தில்லி: நாட்டின் விவசாய சமுதாயத்தை பிரதமர் நரேந்திர மோடி பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி விட்டார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தில்லி ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மத்தியில் இன்று உரையாற்றிய ராகுல் காந்தி, விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் இன்று பெரும் கவலையில் உள்ளனர். இந்த அரசு தங்களை மறந்து விட்டதாக அவர்கள் அச்சப்படுகின்றனர். நிலம் கையகப்படுத்தும் மசோதா தொடர்பாக விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிம்மதியாக இன்று விவசாயிகளால் தூங்க முடியவில்லை. அடுத்த நாள் தம் நிலம் இருக்குமா, இருக்காதா என்ற அச்சத்தில்தான் ஒவ்வொரு விவசாயியும் இரவு படுக்கைக்குப் போகிறார். பயத்திலேயே வாழ்கிறார். தொழிலதிபர்களுக்கு முன்பாகவே நமது நாட்டை பலமாக்கியது, வலுப்படுத்தியது விவசாயிகள்தான். அவர்கள்தான் இந்த நாட்டுக்கு உணவூட்டினர். காங்கிஸ் அரசால் எப்போதெல்லாம் முடிந்ததோ, அப்போதெல்லாம் அவர்களுக்கு உதவியது. நாங்கள் எங்களது ஆட்சிக்காலத்தின்போது, ரூ. 70,000 கோடிக்கு மேலான விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தோம். கூலித் தொழிலாளர்களுக்காக நாங்கள் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தைக் கொண்டு வந்தோம். நாங்கள் செய்த அனைத்துமே ஏழைகளுக்காக செய்ததுதான். ஏழைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். உங்களது போராட்டங்களில் நானும் பங்கேற்பேன். விவசாயிகளின் சக்தி குறித்து பிரதமருக்குத் தெரியவில்லை. நாட்டில் குவிந்து விட்ட 50 ஆண்டு கால குப்பையை நீக்குவோம் என்று வெளிநாட்டில் பிரதமர் பேசிய பேச்சால் அவருக்கும், அவரது பதவிக்கும் பலன் தரப் போவதில்லை. தேர்தலின்போது தொழிலதிபர்களிடம் கடன் வாங்கினார் மோடி அதைத் திருப்பிச் செலுத்த தற்போது உங்களது நிலங்களைப் பிடுங்கி அவர்களிடம் தரப் போகிறார். குஜராத் மாடல் அதைத்தான் சொல்கிறது. விவசாயிகளிடமிருந்து எளிதாக நிலத்தைப் பிடுங்கி தொழிலதிபர்களுக்கு கொடுப்பதே குஜராத் மாடலாகும். மேக் இன் இந்தியா என்ற மோடியின் கனவு பலிக்காது. உங்களது நிலத்தைப் பிடுங்குவதே அவர்களது முதல் நோக்கமாக உள்ளது. உங்களுக்கு வேலையில்லாமல் செய்து விடுவார்கள். அவர்கள் உங்களது நிலத்தை எடுத்தால் அந்த இடத்தில் நாங்கள் இருப்போம், உங்களுக்காகப் போராட. நான் வருவேன் என்றார். காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற இந்த விவசாயிகள் மாநாட்டில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 55 நாள் விடுமுறைக்குப் பின்னர் திரும்பியுள்ள துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் முறையாகப் பேசினார். மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து இந்த மாநாட்டுக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. சுமார் 2 மாத விடுப்புக்கு பின்னர் தில்லி திரும்பிய ராகுல் காந்தியின் தலைமையில் பிரமாண்ட விவசாயிகள் பேரணியாக இது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் அணி
இன்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் போட்டியில் ஆமதாபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. நடப்புத் தொடரில் இதுவரை இந்த இரு அணிகளும் தோல்வியை சந்திக்கவில்லை. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி, 18.2 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து ரஹானே, வாட்ஸன் அதிரடியில் 157 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
டண்டணக்கா – விவகாரம் : ரூ. 1கோடி நஷ்ட ஈடு கேட்டு டி.ராஜேந்தர் நோட்டீஸ்
சென்னை: டண்டணக்கா பாடல் தொடர்பாக ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகரும் இயக்குனருமான டி.ராஜேந்தர், ரோமியோ ஜூலியட் படத்தின் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிபாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அறிமுக இயக்குநர் லட்சுமணன் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா, பூனம் பாஜ்வா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ரோமியோ ஜுலியட்’. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்துக்காக ‘டன் டணக்கா’ என்ற பாடலை அனிருத் பாடியிருக்கிறார். அப்பாடலை ரோகேஷ் எழுதியிருக்கிறார். ஏற்கனவே இப்பாடலுக்கு டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தற்போது படத்தின் தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். ரோமியோ ஜூலியட்’ படத்தில் ‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று துவங்கும் பாடல் சம்பந்தமாக அதன் இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் அனிரூத் (பிரபல இசையமைப்பாளர்), பாடலாசிரியர் ரோகேஷ் (அனேகனில் ‘டங்கா மாரி ஊதாரி…’ பாடலை எழுதியவர்), தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகிய நான்கு பேருக்கும் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு பிரபல டைரக்டரும் நடிகருமான டி. ராஜேந்தர், வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அதில் கூறியிருப்பது….. ‘‘டண்டணக்கா…ணக்கா… ணக்கா’ எங்க தல டீயாரு சென்டிமென்ட்ல தாருமாறு மைதிலி என்னைக் காதலின்னாரு அவரு உண்மையா லவ் பண்ணச் சொன்னாரு மச்சான்’ – அங்க தான்டா எங்க தல நின்னாரு…’’ – என்று துவங்கும் பாடலை ரோகேஷ் எழுதி இருக்கிறார். அனிரூத் பாடியிருக்கிறார். ‘தமிழ் சினிமாவில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமான நடிகர்–டைரக்டர் டி. ராஜேந்தர் தனக்கென்று வித்யாசமான பாணியில் வசனங்களை உச்சரித்து, நடிப்பிலும் தனி ஸ்டைலை உருவாக்கி இருப்பவர். மாநில அரசு, மத்திய அரசின் பல்வேறு விருதுகைளப் பெற்றிருப்பவர். இதேபோல கலைக்கு இவர் ஆற்றி வந்திருக்கும் அரிய சேவைக்காக பல்வேறு அமைப்புகளிடமிருந்து எண்ணற்ற வசதிகளைக் குவித்திருப்பவர். சென்னையைச் சேர்ந்த நந்தகோபால் என்பவர் தயாரிக்கும் படம்–ரோமியோ ஜூலியட். படத்தின் இயக்குனர் லட்சுமணன். இசையமைப்பாளர் டி. இமான். இந்தப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல்–‘டண் டணக்கா… ணக்கா… ணக்கா’ என்று ஆரம்பமாகிறது. இந்தப் பாடலில் டி.ராஜேந்தரின் ஒரிஜினல் குரலை காப்பியடித்து, ‘இமிடேட்’ செய்து பாடியிருக்கிறார். பாடலின் பின்னணியில் டி.ராஜேந்தர் பேசும் வசனம்–அவர் குரலிலேயே ஒலிக்கிறது. இதன் மூலம் என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்கள். கட்சிக்காரரிடமிருந்து முறையான அனுமதி இல்லாமலும் அவர் பேசும் வசனத்தை, பின்னணியில் ஒலிக்கச் செய்திருக்கிறார்கள். இது, பல ஆண்டுகளாக– பல்வேறு படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி நடை–ஸ்டைலை வைத்திருக்கும் என் கட்சிக்காரரின் தனி நபர் உரிமையையும், ‘காபிரைட்’ உரிமையையும் இதன் மூலம் மீறியிருக்கிறீர்கள் என்று டி.ராஜேந்தர் சார்பில் வாரான் அண்ட் சாய்ராம்ஸ் நிறுவனம் (வழக்கறிஞர்கள் தியாகேஸ்வரன், ராமகிருஷ்ணன்) வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதே பாட்டும், பதிவு செய்யப்படும் காட்சிகளும் ‘யூ ட்யூப்’ தளத்திலும், சன் மியூசிக் சாட்டிலைட் சானலிலும் வெளியிடப்பட்டுள்ளது (ஆடியோ_வீடியோ வடிவில்). படம் திரையிடப்படுவதற்கு முன்னால் இப்படி ஒரு வெளியீடு–‘பெருமைக்குரிய’ என் கட்சிக்காரரின் பெயரை துஷ்பிரயோகம் செய்யும் நோக்கத்தோடே அமைந்திருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், இந்தச் செயலுக்காக_ சட்டத்துக்குப் புறம்பாக என் கட்சிக்காரரின் முறையான அனுமதியில்லாமல் அவர் பெயரையும், இமேஜையும், அவரது தனிப்பாணி உச்சரிப்பு வசனத்தையும் பயன்படுத்தியிருப்பதற்காக ரூ.1 கோடி நஷ்டஈடு தரவேண்டும். மேலும் யூ ட்யூப், சன் மியூசிக் சாட்டிலைட் சானல் உள்பட எந்த ஒரு ஊடகத்திலும், எந்த ஒரு தளத்திலும் வெளியிடுவதை உடனே நிறுத்த வேண்டும். அதோடு வழக்கு செலவினங்களுக்காக ரூ.1000 தர வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
வளர்ந்து வரும் பாடலாசிரியர் கருணாகரன்
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான வல்லவன் படத்திற்கு ஒரு பாடல் எழுதி திரைத்துறையில் அறிமுகப்படுத்தபட்டவர் பாடாலாசிரியர் கருணாகரன். கார்த்தி, இயக்குனர் சுராஜ் மற்றும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில் உருவான அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்தின் வெற்றி பாடலான “பேட் பாய்ஸ்” பாடல் மூலமாக பட்டி தொட்டி எங்கும் வார்த்தை ஜாலத்தில் நுழைந்தார். அதனை தொடர்ந்து SS தமன் இசையில் டமால் டுமில் படத்தில் உஷா உத்துப் பாடிய டமால் டுமில் பாடல் மூலமாக ஜொலித்தார். அருள்நிதி நடித்து வெளிவந்த தகராறு, கடவுள் பாதி மிருகம் பாதி, சேர்ந்து போலாமா உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார். தற்போது SS தமன் இசையில் அருண்விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள வா டீல் திரைப்படத்தில் காதல் கலோக்கியல் அந்தரு அந்தரு என்ற பாடலை எழுதியுள்ளார். மேலும் திரைக்கு வரவுள்ள 30க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் கருணாகரன்
அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..
தென்மாவட்டங்கள் வளம்பெற அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. வாசுதேவநல்லூர்: தென்மாவட்டங்கள் வளம்பெற வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழுதடைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டு பகுதியை நோக்கி அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரள – தமிழக எல்லை பகுதியில் திருவிதாங்கூர் மற்றும் சிவகிரி ஜமீன் ஆட்சி காலத்தில் வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்செண்பகவல்லியாறு அணைக்கட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டு 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதன்படி வாசுதேவநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முதல் சாத்தூர் வரை விவசாய நிலங்கள் பயனடையும் வகையில் தமிழக எல்லை பகுதியை நோக்கி கன்னியா மதகு அமைக்கப்பட்டது. இந்த மதகு கடந்த 1976ம் ஆண்டு கனமழையால் இடிந்து விழுந்தது. அதன் பிறகு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதனை சீர்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசின் பங்கு தொகையாக ரூ.5 லட்சம் கேரள அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மதகு சீரமைப்பு பணியை இழுத்தடித்த கேரள அரசு 2006ம் ஆண்டு அப்பணியை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டது. கன்னியா மதகு சீரமைக்கப்படாததால் நெல்லை, தூத்துக்குடி,விருதுநகர் ஆகிய மாவட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறின. இப்பகுதியில் விவசாயம் அடியோடு அழிவதை தடுக்க கன்னியா மதகை சீரமைக்க கோரி அப்போதைய தென்காசி எம்.பி லிங்கம், அன்றைய முதல்வர் கருணாநிதியை சந்தித்து மனு கொடுத்தார். இந்நிலையில் செண்பகவல்லி அணைக்கட்டு கன்னியா மதகு உடைப்பை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய லிங்கம் எம்பி அப்பகுதிக்கு சென்றார். அவருடன் 20 பேர் சென்றனர். வாசுதேவநல்லூர் – மதுரை மெயின் ரோட்டில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சிமலை இருக்கிறது.இந்தப்பகுதியில் செண்பகவள்ளி அணைப்பக்கம் கேரளா அரசு தனது அதிகாரிகள் குழுவை முகாமிடசெய்துள்ளது. ஆனால் உரிய பாதுகாப்பு வசதியின்றி இந்த அணைப்பகுதிக்குள் சென்றாலும்,கேரள பகுதிக்குள் கால்வைக்க முடியாது.அந்தளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்த அணையின் உடைப்பை சரிசெய்து விட்டால் தேன் மாவட்டங்களான திருநெல்வேலி.தூத்துக்குடி,விருதுநகர் மாவட்டம் சாத்தூர்வரை தண்ணீர்ககு பிரச்சினை வராது விவசாயம் செழிப்பாக நடைபெறும்.என்பதில் மாற்றுகருத்தில்லை.சமீபத்தில் வைகோ தலைமையில் இங்கு உண்ணாவிரதம் நடைப்பெற்றது,அதன் பின் புதிய தமிழகம் கிருஷ்ண சாமி தலைமையிலும் உண்ணாவிரதம் நடைப்பெற்றது.வைகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் இந்த அணைப் பிரச்சனையில் ஒன்றிணைந்து போராடினால் வறட்சியில் கிடக்கும் பூமி செழிப்படையும் என்பது உண்மை.அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..?
பள்ளி ஆண்டு விழா
keelapavoor: கீழப்பாவூர் சரகம் ராஜகோபாலபேரியில் உள்ள டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பாளையங்கோட்டை டி.டி.டி.ஏ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மேனேஜர் ஜேசுநேசபாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜெபராஜ்ஞானசுவாமி, கீழப்பாவூர் உதவி தொடக்கக்கல்வி கூடுதல் அலுவலர் வனிதா தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சந்திரா வரவேற்றார். ஆசிரியை மரியதிரவியம் ஆண்டறிக்கை வாசித்தார், விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் மரியசெல்வம் நன்றி கூறினார்.
மக்களுக்கு இணையதள சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றி கிடைக்க வேண்டும் வைகோ
மக்களுக்கு இணையதள சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றி கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ அறிக்கை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள் வாழ்வில் இன்றியமையாத தேவையாகிவிட்டன. அமெரிக்கா போன்ற நாடுகள் இணைய சேவைகளை இலவசமாக வழங்குவதால் கோடிக்கணக்கான மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இணையதள சேவைகளை வழங்கி வருகின்றன. இணையதளம் என்பது நாட்டின் சொத்து. அலைக்கற்றைகள் மூலமாக இணைய சேவை அளிப்பதற்கு மத்திய அரசு உரிமங்கள் தருகின்றது. இவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்கள் சில இணையதள தகவல் தொகுப்புகளை கட்டுப்படுத்த விரும்புகின்றன. இதனால் இணைய சமநிலை (Net Neutrality) பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. கணினிகள், கைப்பேசிகள், டேப்லட் போன்றவற்றின் மூலம் இணைய சேவையை பெற்று வரும் வாடிக்கையாளர்கள் அதற்கு உரிய கட்டணங்களை தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு செலுத்தி வருகின்றனர். ஆனால் இக்கட்டணங்களை விருப்பம்போல அவ்வப்போது நிர்ணயித்துக் கொள்ளும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தற்போது இணையதள பக்கங்களை மக்கள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை கொண்டு வர முயற்சி செய்கின்றன. இணையதள நிறுவனங்கள், வாட்ஸப், பேÞபுக், ஹைப், யூடியுப் மற்றும் மொபைல் அப்ளிகேஷன் தயாரிப்பாளர்கள் கட்டணம் செலுத்தினால்தான் அவர்களின் இணையதளங்களை விரைவான வேகத்தில் அளிக்கப்படும். இல்லையேல் குறைந்த வேகத்தில்தான் செயற்படும் என்று கூறுகின்றன. இதனால் இனி இந்த சேவைகளுக்கு வாடிக்கையாளர்கள் தனித்தனியாக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். தொலைத் தொடர்பு நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள அமைப்பான தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) இதுகுறித்து வரைவு அறிக்கை ஒன்றை மார்ச் 27 ஆம் தேதி மக்கள் கருத்துக் கேட்புக்காக வெளியிட்டு இருக்கிறது. ‘ட்ராய்’ வெளியிட்டுள்ள அறிக்கையில் இணையதளங்கள் கட்டணம் இன்றி பார்க்கும் வசதி தொடர்ந்தால் தனிமனிதர் மற்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. எந்தெந்த இணையப் பக்கங்களை காண வேண்டும் என்பதை பயன்படுத்தும் வாடிக்கையாளர்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் இணையதள நிறுவனங்கள் அளிக்கும் கட்டணத்திற்கு ஏற்பவே ‘இணையத்தின் வேகம்’ இருக்கும் என்பதால் சில இணையதளங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கிடைக்கும். இதன் மூலம் மக்கள் தங்கள் விருப்பப்படி இணைய பக்கங்களை பயன்படுத்தும் வாய்ப்பு பறிபோகும். இணையதள சமநிலையை சீர்குலைக்கும் வகையில், தனியார் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுக்கக் கூடாது என்று இதுவரை 8 இலட்சம் வாடிக்கையாளர்கள் ‘ட்ராய்’க்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். மக்கள் தேவைகளுக்கு ஏற்ப எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி விருப்பம் போல இணையதள சேவைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
மாவு தலை… துரத்தும் விஜய் ரசிகர்கள், நொந்து போன அஜித் ரசிகர்கள்
சமீப காலமாக அஜித் தன்னுடைய படங்களில் சால்ட் ஆன்ட் பெப்பர் லுக்கில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இந்த கெட்டப்பையே தொடர்ந்து வந்தார் அஜித். ஆனால் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் அஜித்தின் கெட்டப்பை மாவு தலை என்று கிண்டல் செய்ய விஜய் ரசிகர்கள் இதை விடாமல் பிடித்து கொண்டனர். இது போததென்று பாலிவுட் நடிகர் கமால் கானும் அஜித்தை பார்த்தால் வயசான காவலாளி போல் இருக்கிறார். அவரை எப்படி தென்னிந்திய மக்கள் ஏற்று கொண்டார்கள்… என்று தனது டுவிட்டரில் தெரிவிக்க இதுபோதாத விஜய் ரசிகர்களுக்கு… சின்ன புள்ளி வைத்து கொடுத்தாலே அதில் பெரிய ரோடு போட்டு விடுவார்கள். ஆனால் இவர்கள் பெரிய கோடே போட்டு கொடுத்து விட்டார்கள். இதனால் மாவு தலை என்ற புதிய வலைதளப் பக்கத்தையே தொடங்கி விட்டனர் விஜய் ரசிகர்கள். சமூக வலைதளங்களில் தொடர்ந்து கிண்டல் செய்யவதால் நொந்து போய் விட்டனர் அஜித் ரசிகர்கள். இதனால் அவர்கள் தற்போது அஜித்திடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இனி சால்ட் ஆன்ட் பெப்பர் லுக்கில் நடிக்காமல் டை அடித்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அஜித் தனது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

