ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலம் வெள்ளிக்கிழமை நேற்று கைது செய்யப்பட்டார். இதை அடுத்து, காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கிலானி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனால், காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மசரத் ஆலம் கலந்து கொண்ட கூட்டத்தில், பாகிஸ்தான் ஆதரவு முழக்கங்களும், பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டும் பரபரப்பை ஏற்படுத்தியதால், பிரிவினைவாதி மசரத் ஆலம் கைது செய்யப்பட்டு நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார். அதை அடுத்து அவரை நீதிமன்றம் 7 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதை அடுத்தே கிலானி காஷ்மீரில் பந்த் நடத்த அழைப்பு விடுத்தார். இதனால் இன்று காஷ்மீர் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலம் பட் ஸ்ரீநகரில் நேற்று கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஸ்ரீநகரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் கொடி பறக்கவிடப்பட்டு, ஆதரவு கோஷங்கள் எழுப்பப்பட்டது தொடர்பாக கிலானி, மசரத் ஆலம் பட் உள்ளிட்டோர் மீது பட்காம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேச விரோத செயலில் ஈடுபட்டதாக மசரத் ஆலம் பட் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அதிகாலை ஹப்பாகடல் பகுதி யில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரை கைது செய்தனர். கைது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மசரத் ஆலம் … இது புதுமையானது அல்ல. அதிகார பலத்தில் காஷ்மீரில் ஆட்சி நடத்தப்படுகிறது. பாகிஸ்தான் தேசியக் கொடியை பறக்க விடுவதும் பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் போடுவதும் விடுதலை முழக்கம் எழுப்புவதும் 1947-ஆம் ஆண்டிலிருந்தே நடந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.
மசரத் ஆலம் கைது; முழு அடைப்புக்கு கிலானி அழைப்பு: காஷ்மீரில் உச்சபட்ச பாதுகாப்பு
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ. ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். துபாயில் இருந்து நேற்று காலை, 5:30க்கு, ‘ஏர் இந்தியா’ விமானம் சென்னை வந்தது. இந்த விமானம் மீண்டும் காலை, 6:40க்கு உள்நாட்டு விமானமாக, மும்பை செல்வது வழக்கம். விமான நிலைய ஊழியர்கள் விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஓர் இருக்கையின் கீழே பழுப்பு நிற கவரில், தலா அரை கிலோ எடையில் ஏழு தங்கக் கட்டிகள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.1.5 கோடி என அதனைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் கூறினர். இந்த விவகாரத்தில் இதனைக் கடத்திக் கொண்டு வந்தவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டுவருகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் அருகே குடிசைப் பகுதியில் தீ விபத்து
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் ரயில் நிலையம் அருகே உள்ள நமச்சிவாயபுரத்தில் நேற்று மதியம் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நமசிவாயபுரம் பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை மதியம் குடிசை வீடுகளின் அருகில் போடப்பட்டிருந்த குப்பைகளில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர். அதிலிருந்து பரவிய தீ குடிசை வீடுகளுக்குப் பரவியது. இதனால் குடிசைகளில் தீ பற்றி எரிந்தது. அடுத்தடுத்து உள்ள குடிசைகளிலும் தீ பரவியது. தகவலறிந்து, கீழ்ப்பாக்கம், எழும்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 9 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் ரவி தாகூர் நேரில் ஆய்வு
திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வனப் பகுதியில், தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை தேசிய பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவர் ரவி தாகூர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஆந்திர அரசு அதிகாரிகளுடனும் அவர் விரிவாக ஆலோசனை நடத்துகிறார். பின் தில்லி செல்லும் ரவி தாகூர், தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பழங்குடியினர் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். செம்மரம் வெட்டியதாகக் கூறி, ஆந்திர வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த சசி குமாரின் குடும்பத்தினரிடம் ரவி தாகூர், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று விசாரணை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், தமிழர்கள் சுடப்பட்ட சம்பவத்தை மனித உரிமை ஆணையம் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
‘பிரியாணி’யில் கார்த்தியுடன் நடித்த நடிகை ஹானி மரணம்
வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த பிரியாணி படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியவர் ஹானி. அந்தப் படத்தில் ஓரு ஷோ ரூம் திறப்பு விழா காட்சியில் ஹானி நடித்திருந்தார். ஷோ ரூம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஹானியை கார்த்தி முதல் சந்திப்பிலேயே காதல் வலையில் வீழ்த்துவார். இருவரும் தொலைபேசி எண்களை பரிமாறிக் கொள்வர். அஜீத்தின் ஆரம்பம் படத்திலும் ஹானி சிறிய வேடத்தில் நடித்துள்ளார். ஹானிக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டு, பல மாதங்களாக அதற்கு அவர் சிகிச்சை எடுத்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். மிக இளம் வயதில் ஏற்பட்ட ஹானியின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேகதாதுவை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் பந்த்
பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகின்றன. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்தது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது, தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதி விவசாயிகள், அனைத்துக் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கர்நாடக அரசை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில், பதிலுக்கு தமிழகத்தைக் கண்டித்து கர்நாடகத்தில் சனிக்கிழமை இன்று முழு அடைப்புப் போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்துகின்றன. இதற்கு கர்நாடக அரசு ஊழியர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம், ஆட்டோ, வாடகை கார் ஓட்டுனர்கள் சங்கம், கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் உள்பட மாநிலத்தில் உள்ள 400-க்கும் அதிகமான சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இன்று பெரும்பாலான பஸ், ஆட்டோக்கள் ஓடாது என்றும், அரசு அலுவலகங்களும் இயங்காது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அரசு ஆதரவு இல்லை என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். அசம்பாவித சம்பவங்கள், வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
சத்துணவு ஊழியர்கள் மீது காவல்துறை அத்துமீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்
சென்னை: சத்துணவு ஊழியர்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்னன் வெளியிட்ட அறிக்கை: சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழகத்தில் அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக்குவது, குடும்ப பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்குவது, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்புவது, சத்துணவுக்கான உணவு மானியத்தை உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல கட்டப் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனர். தற்போது தமிழக அரசோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் அவர்களது கோரிக்கை ஏற்கப்படாத நிலையில் வேறு வழியின்றி ஏப்ரல் 15 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (17-4-15) தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு பல்லாயிரம் பெண் ஊழியர்களும், ஆண் ஊழியர்களும் பங்கேற்று ஜனநாயக ரீதியில் நடத்திய மறியல் போராட்டத்தினை ஒடுக்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தமிழக காவல்துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். பெண் ஊழியர்கள் என்றும் பார்க்காது கொடுந்தாக்குதலை நடத்தியுள்ளனர். சென்னையில் மாநிலத்தலைவர் கே.பழனிச்சாமி கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல்துறையின் இந்த வன்முறைத் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. அரசுப் பள்ளிகளில் சத்துணவுத்திட்டம் துவக்கப்பட்ட 1982 தொடங்கி கடந்த 32 ஆண்டு காலமாக தமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சிகளே தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆனால் சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கவோ, ஓய்வு ஊதியம் வழங்கவோ, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்தவோ திமுக, அதிமுக ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏழ்மை நிலையிலுள்ள சத்துணவு ஊழியர்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக தொடர்ச்சியாக உயரும் விலைவாசி, மற்றும் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடும் நிலையில் உள்ளனர். வாழ்வாதாரத்திற்கான கோரிககைகளை முன்னிறுத்தி ஜனநாயக வழிமுறைகளில் பல ஆண்டுகளாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தொடர்ந்து போராடுகிற சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, காவல்துறையை ஏவிவிட்டு கொடுந்தாக்குதல் நடத்துவது, பணி நீக்கம் செய்யப்போவதாக அச்சுறுத்துவது அதிமுக அரசின் ஊழியர் விரோத, ஜனநாயக விரோத மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறது. எனவே, இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் அவர்கள் நேரடியாக தலையிட்டு போராடும் ஊழியர்கள் மீது அரசு ஒடுக்குமுறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடாமல், அவர்கள் முன்வைத்துள்ள பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, நியாயமான ஓய்வூதியம், சத்துணவுக்கான மானியத்தை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளின் நியாயத்தை கருத்தில் கொண்டு அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வை ஏற்படுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
சதாசிவத்தை மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கக் கூடாது: வழக்கு
புதுதில்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவத்தை தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யக்கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த பி.சதாசிவம், ஓய்வு பெற்ற பின்னர் கேரள மாநில ஆளுநராகப் பதவியேற்றார். இந்நிலையில், அவர் மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்படலாம் என்றும், மத்திய அரசு அதுகுறித்துப் பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது மனித உரிமை ஆணைய தலைவராக உள்ள நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிக்காலம் வரும் மே மாதம் 12ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை அடுத்து இந்தப் பதவிக்கு சதாசிவத்தின் பெயரை மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவத்தின் பெயரை தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆற்றல் மிக்க தலைவர்கள் ஜீ ஜின் பிங், மோடி: டைம் பத்திரிகை புகழாரம்
நியூயார்க்: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜீ ஜின் பிங்கும் ஆற்றல் மிக்க தலைவர்களாக விளங்குகின்றனர் என்று அமெரிக்காவின் “டைம்’ பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது. மோடி, ஜீ ஜின் பிங் இருவரும் வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதிக்க உத்வேகத்துடன் செயல்படுகின்றனர் என்றும் அது தெரிவித்துள்ளது. டைம் பத்திரிகை உலக அளவில் புகழ்பெற்ற 100 பேரின் பட்டியலை வெளியிட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜின் பிங், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களைப் பற்றி, பிரபலங்கள் சிலர் கட்டுரை எழுதியுள்ளனர். மோடி குறித்த கட்டுரையை “இந்தியத் தலைமை சீர்திருத்தவாதி’ என்ற தலைப்பில் அமெரிக்க அதிபர் ஒபாமா எழுதியிருந்தார்.
குருவாயூரில் ரணில் விக்ரமசிங்க: சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு
திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை இன்று வருகிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது குடும்பத்தினரும் உச்சபூஜை முடிந்த பின்னர் ஸ்வாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குருவாயூர் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இலங்கையில் பொதுத் தேர்தல் நடைபெறும் முன்பு ரணில் விக்கிரமசிங்க குருவாயூர் வந்து சென்றார். இப்போது அவர் இலங்கையில் பிரதமராக உள்ளார். பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக குருவாயூருக்கு அவர் வருகை தருகிறார். ரணில் வருகையையொட்டி கேரளத்திலும் குறிப்பாக குருவாயூரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

