Home Blog Page 6097

கல்ராஜ் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடியாணை

புது தில்லி: உத்தரப் பிரதேசத்தில் 2009-ம் ஆண்டு தேர்தலின்போது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான வருண்காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைதானார். அஹை அடுத்து அப்போது பிலிபிட் நகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்நேரம், தடை உத்தரவை மீறி, தற்போது மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சராக இருக்கும் கல்ராஜ் மிஸ்ரா தனது ஆதரவாளர்களுடன் நீதிமன்ற அறைக்குள் சென்றதாகவும், அப்போது அங்குள்ள பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு பிலிபிட் நீதிமன்றம் கல்ராஜ் மிஸ்ராவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் அதில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து, கல்ராஜ் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடியாணை பிறப்பித்து நீதிபதி அப்துல் கயூம் உத்தரவிட்டுள்ளார்.

2ஜி வழக்கில் இறுதி வாதம்: இன்று துவக்கம்

புதுதில்லி: 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில், தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை தொடங்குகிறது. 2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீது குற்றம் சாற்றப்பட்டுள்ளது. 2012 பிப்.2-ல் சிபிஐ தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் 2ஜி அலைக்கற்றை தொடர்பான 122 உரிமங்கள் வழங்கப்பட்டதில் அரசுக்கு ரூ.30,984 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை, சிபிஐ தரப்பில் 154 சாட்சிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். குற்றம் சாற்றப்பட்டோர் தரப்பில் 29 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இந்த நிலையில் 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் இறுதி விசாரணை இன்று முதல் தொடங்குகிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒரு தரப்பு அரசியல் கட்சிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலையில், 2ஜி வழக்கும் பெரிய எதிர்பார்ப்பை தமிழகத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதுமே ஏற்படுத்தியுள்ளது.

தில்லி திரும்பும் ராகுலுக்கு தடபுடல் வரவேற்புக்கு ஏற்பாடு

புதுதில்லி: சுமார் 2 மாத கால மிக நீண்ட ஓய்வுக்குப் பின்னர் அகில இந்திய காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தில்லிக்குத் திரும்புகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க இளைஞர் காங்கிரஸார் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ராகுல் விடுப்பு எடுத்துச் சென்றது கட்சியினர் மட்டுமல்லாது, பொது மக்கள் மத்தியிலும் பல்வேறு ஊகங்களைக் கிளப்பின. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வியால் ராகுல் மிகவும் அதிருப்தியும் விரக்தியும் அடைந்தார் என்றும், காங்கிரசுக்கு மீண்டும் புத்துணர்ச்சி கொடுக்கவும், அதை செயல்படுத்தவும் ராகுல் நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யப்போகிறார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இரு மாதங்களுக்கு முன்னர் கட்சியில் விடுப்பு எடுத்துக் கொண்டு ராகுல் திடீரென காணாமல் போனார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலும் கலந்து கொள்ளாமல் சென்றதால், அவர் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார்… என்பது பற்றியெல்லாம் பல்வேறு ஊகங்கள் உலவின. இடையில் காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றப்பட்டதில், சோனியாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளிநாடு சென்றதாகவும் கூறப்பட்டது. மேலும், அவர் ஒரு பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும், குளியல் அறையில் வழுக்கி விழுந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூட செய்திகள் உலவின. ஒவ்வொரு முறையும் அவர் இன்று திரும்புவார், நாளை திரும்புவார் என்று கூறப்பட்டு, அது பொய்யாகி, இதனால் ராகுலை யாரும் கண்டு கொள்ளாத நிலை உருவானது. இந்நிலையில், தில்லியில் வரும் 19 ஆம் தேதி நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நடத்தும் விவசாயிகள் பேரணியில் ராகுல் கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அறிவித்தனர். இதனை காங்கிரஸ் தலைவர் ஏ.கே.அந்தோணி உறுதி செய்தார். இதன் மூலம் ராகுல்காந்தி இந்த வாரம் தில்லிக்குத் திரும்புவது உறுதியானது. இந்நிலையில் அவர் இன்று தில்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது. இன்று தில்லி திரும்பும் ராகுலுக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுக்க தயாராகி வருகிறார்கள்.

ஜெயலலிதா ஜாமீன் நாளையுடன் முடிகிறது: நீட்டிப்பு கோரி மனு தாக்கல்; 17ல் விசாரணை

புது தில்லி: பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தண்டனையை அடுத்து, ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. அந்த ஜாமீனுக்கான காலக்கொடு வரும் 16ம் தேதியுடன் முடிகிறது. இதனால், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்குமாறு கோரி ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் 17ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமது ஜாமீன் காலத்தை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் ஏப். 17 நாளை மறுநாள் நடைபெற உள்ளது.

நதிகள் இணைப்பை விரைவுபடுத்த சிறப்புக் குழு

புது தில்லி: நதிகள் இணைப்பை விரைவுபடுத்தும் வகையில், மாநிலங்களுக்கிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்த, மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் பி.என்.நவலவாலா தலைமையில் சிறப்புப் பணிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து மத்திய நீர்வளத் துறை வெளியிட்ட அறிக்கையில்… நதிகள் இணைப்பு தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்தும் வகையில் திட்டங்களைத் தயாரிப்பதற்காகவும், அதற்கான நிதி சார்ந்த திட்டங்களை பரிந்துரைப்பதற்காகவும் சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட இணைப்புத் திட்டங்களை ஆராய்ந்து, தற்போதுள்ள் திட்டத்தினுடைய சாத்தியமற்ற இணைப்புகளுக்கு மாற்றுத் திட்டங்களையும் இந்தக் குழு பரிசீலிக்கும். ஒவ்வொரு நதிநீர் இணைப்புத் திட்டம் தொடர்பான பொருளாதார சாத்தியக்கூறு, சமூகப் பொருளாதாரம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், அப்பகுதியில் உள்ளவர்களை வேறு பகுதியில் குடியேற்றுவது ஆகியவை குறித்த மதிப்பீட்டு நெறிகளையும் பணிக்குழு உருவாக்கும்; மேலும் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும் இது முயலும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆழியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு: தமிழக அரசு உத்தரவு

ஆழியாறு உள்பட 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பு: கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பொள்ளாச்சி கால்வாய், வேட்டைக்காரன் புதூர் கால்வாய், சேத்துமடை கால்வாய், ஆழியாறு ஊட்டு கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்துக்காக புதன்கிழமை (ஏப். 15) முதல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், கோவை மாவட்டத்திலுள்ள 22 ஆயிரத்து 332 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் கீழுள்ள தெற்கு பிரதான கால்வாய், வடக்கு பிரதான கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழ் பாசனம் பெறும் நிலங்களின் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

வேலைநிறுத்த பாதிப்பில்லை: தமிழகத்தில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின

சென்னை: தமிழகத்தில் பஸ்கள் நேற்று வழக்கம்போல் இயங்கின. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஏமாற்றத்தை அடுத்து 14 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தன. இதனால் போக்குவரத்து முடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் பஸ்கள் வழக்கம்போல் ஓடின. மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. 12–வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் குறித்து தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழு மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் சென்னை குரோம்பேட்டையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. அண்ணா தொழிற்சங்க பேரவை உள்பட 28 தொழிற்சங்கங்கள் இதனை ஆதரித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் தி.மு.க.வின் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., பா.ம.க., தே.மு.தி.க. உள்பட 14 தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வை ஏற்கவில்லை. அதிருப்தியடைந்த 14 தொழிற்சங்கங்களும் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன. இதனால் பேருந்து இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்றாலும் அண்ணா தொழிற்சங்கப் பேரவை உள்பட 28 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களைக் கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் மாநகர போக்குவரத்துக்கழகம் சார்பில் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்கள் வழக்கம்போல் அனைத்து வழித்தடங்களிலும் ஓடியது. இதனால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், கோயம்பேடு பஸ் நிலையத்தில் எப்போதும் போல் இயல்பான பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. இதுபோல மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பஸ் போக்குவரத்து வழக்கம்போல் இருந்தது.

தமிழகத்தில் 45% வாக்காளர் ஆதார் விவரங்கள் சேர்ப்பு

சென்னை: தமிழகத்தில் 45 சதவீத வாக்காளர்களின் ஆதார் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் கமிஷனர்சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தபோது… தமிழகத்தில் உள்ள 5.62 கோடி வாக்காளர்களில் இது வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 2.4 கோடி வாக்காளர்களின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது மொத்த அளவில் 45 சதவீதம் ஆகும். வரும் மே மாதம் 31-ம் தேதி வரை வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று விவரங்கள் சேகரிப்பர். மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் இத்திட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. வாக்காளரிடமிருந்து பெறப்படும் செல்போன், இமெயில் போன்றவை ரகசியமாக வைக்கப்படும். தேர்தல் ஆணையத்துக்கும் வாக்காளர்களுக்கும் இடையேயான பரிமாற்றத்துக்கு மட்டுமே இந்த விவரங்கள் பயன்படுத்தப்படும்… என்று கூறினார்.

காஞ்சியில் ஸ்ரீராமானுஜர் உற்ஸவம் தொடக்கம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம: அனைத்துலகும் வாழப்பிறந்தவரான எதிராச மாமுனிவருடைய உத்ஸவம் இன்று தொடங்கப் பெறுகிறது.. வாழி எதிராசன்.. வாழி எதிராசன்.. என நாற்றிசையும் தொண்டர் குழாம் , ஏற்றி மகிழும் தன்னிகரில்லாச் சிறப்புடைய திருநாளாம் சித்திரைத் திருவாதிரைத் திருநாள்.. ந சேத் ராமானுஜேத்யேஷா சதுரா சதுரக்ஷரீ காமவஸ்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவோ ஹந்த மாத்ருச: என்கிறபடியே ராமாநுசர் திருவவதரித்திருக்கவில்லையெனில் நம் போல்வார் நிலை மிக மிக வருந்தத் தக்கதாயிருந்திருக்கும்.. வைணவம் என்பது ஒற்றுமையின் அடையாளம்.. அனைவரையும் விஷ்ணு சம்பந்திகளாக அடையாளம் காட்டுவதன் மூலம், உலகத்தினர் அனைவரையும் ஓர் குடும்பத்தினராக இணைக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து காட்டிய உயர்ந்த சமயம் வைணவம்.. த்ரிஜகத் புண்ய பலமான த்ரிதண்டத்தை கையிலேந்தியவராய்.. நம் அனைவருடைய ஆன்ம நன்மைக்காக பாடுபட்டவரான ராமானுசரை குருவாகப் பெற்றமை நம் அனைவருடைய பேறாகும்.. இன்று காலை , ராமானுசர் உத்ஸவ தொடக்கத்தினை ஒட்டி , ஸ்ரீ காஞ்சீயில் , எம்பெருமானார் விஷயமான முக்தக ச்லோகங்களும், ஸ்ரீ வரவரமுனி சதகமும் அனுசந்தித்தபடி திருவீதி ப்ரதக்ஷிணம் நடைபெற்றது.. தகவல்: அக்காரக்கனி ஸ்ரீநிதி  

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அன்னதானம்

kizapavur-annadanam பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் சிறப்பு மிக்க அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரர். இந்தக் கோவிலில் நான்காவது ஆண்டாக சித்திரை முதல் நாள் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டுகாலையில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. . தொடர்ந்து தீபாராதனையும், அதனை தொடர்ந்து பகல் 1மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. இதில் கீழப்பாவூர் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் சிவபக்தர்கள் சார்பில் செய்யப்பட்டிருந்தது வருடப் பிறப்பை முன்னிட்டு சிறப்பு அன்னதானம் பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் உள்ளது வென்னிமலை முருகன் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொறு ஆண்டும் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு அன்று காலை சிறப்பு பூஜைகள், அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனையும், அதனை தொடர்ந்து பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது. இதில் அருகில் உள்ள ஊர்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர். அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் வட்டார அரிசி ஆலைஅதிபர்கள், நெல்,அரிசி வியாபாரிகள், மற்றும் தவிடு வியாபாரிகள் செய்திருந்தனர்.