புது தில்லி: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு CTET-2015 இன் முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டன. CTET-2015 தேர்வுகள், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி 988 மையங்களில் நடத்தப்பட்டன. சுமார் 6.77 லட்சம் பேர் எழுதியிருந்த இந்தத் தேர்வில், 13.53 % பேர் தேர்ச்சி யடைந்துள்ளனர். ஆனால், தேர்ச்சி சதவீதம் சென்ற ஆண்டைக் காட்டிலும் சற்றே அதிகம். சிடிஇடி தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியர்களாகப் பணியாற்ற முடியும்.
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் : ராமதாஸ்
சென்னை: நிலம் கையகப் படுத்தும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு மீண்டும் பிறப்பித்திருக்கிறது. இந்தியாவில் ஓர் அவசரச் சட்டம் இரண்டாவது முறையாக பிறப்பிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். நாட்டு நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வாய்ப்பை உழவர்களின் நலனை பாதிக்கும் விஷயத்திற்காக 2-ஆவது முறையாக அரசு பயன்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை – நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்காக முதன்முதலில் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டபோதே அதை கடுமையாக எதிர்த்தேன். இந்த அவசர சட்டத்திற்கு மாற்றான சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாத நிலையில், அதன் தீமைகளை விளக்கி, இந்த முயற்சியை மத்திய அரசு இத்துடன் விட வேண்டும்; இன்னொரு முறை அவசரச் சட்டத்தை பிறப்பிக்கக் கூடாது என்று கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தினேன். மக்களின் விருப்பமும் இதுவாகவே இருந்தது. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் அவசரச் சட்டத்தை பிறப்பித்ததன் மூலம் பெருநிறுவனங்களிடம் தனது விசுவாசத்தை அரசு மீண்டும் நிரூபித்திருக்கிறது. மாநிலங்களவையில் கட்சிகளுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் இந்த சட்டத்தை மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது. இதனால் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தை கூட்டி இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்படும். அரிதிலும் அரிதாக பயன்படுத்த வேண்டிய வாய்ப்புக்களை விவசாயத்தை ஒழிக்கும் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்த வேண்டுமா? என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும். நாட்டின் உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அவசரச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது காலாவதியாக விட வேண்டும். என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
சந்திர கிரகணத்தை ஒட்டி கோயில் நடைகள் மூடல்: திருப்பதியில் சேவைகள் ரத்து
திருப்பதி: சந்திர கிரகணம் இன்று மதியம் 3.45 மணி முதல் இரவு 7.15 வரை இருப்பதால், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கோயில்களிலும் சந்நிதி நடைகள் மூடப் படுகின்றன. இன்று திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைமூடப்பட்டது. சுமார் 11 மணி நேரம் வரை சாத்தப்படுவதை முன்னிட்டு கோவிலில் வழக்கமாக நடைபெறும் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டது. ரூ. 300, ரூ. 50 தரிசன டிக்கெட் முன்பதிவு ரத்து செய்யப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோயில், 6 மணி நேரம் முன்னதாகவே, அதாவது காலை 9 மணி முதலே மூடப்பட்டது. பின்னர் இரவு 8.30 மணிக்கு மேல் கோயில் நடை திறக்கப்பட்டு, நடை சுத்தம் செய்யப்பட்ட பின்னர் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பதி கோவிலில் தற்போது வசந்த உற்ஸவம் நடைபெற்று வருகிறது. கடைசி நாளான இன்று சந்திர கிரணகத்தால் வசந்த உற்ஸவம் அதிகாலை 5 மணிக்கே தொடங்கப்பட்டது. சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், ருக்மணி, சத்தியபாமா, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி ஆகியோர் மூன்று வாகனங்களில் கோவிலில் இருந்து புறப்பட்டு நான்குமாட வீதிகளில் ஊர்வலமாக வந்து வசந்த மண்டபத்தை அடைந்தனர். உற்ஸவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் முடிந்த பின்னர் சந்நிதியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டது. இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.
விஜயகாந்த், சரத்குமார், ஜி.கே.வாசன் ஈஸ்டர் வாழ்த்து
சென்னை: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜி.கே.வாசன் வாழ்த்து: இயேசு கிறிஸ்து மறைந்து மீண்டும் உயிர்த்தெழுந்த 3 ஆம் நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். நம் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக கல்வித் துறையிலும், மருத்துவத் துறையிலும் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கு தொண்டாற்ற தொண்டு நிறுவனங்களை நிறுவி, சிறப்பாக சேவை செய்து வருவது மிகுந்த பாராட்டுக்குரியது. கிறிஸ்தவ சமுதாய மக்கள் பணி தொடரவும், வளரவும், அவர்களது வாழ்வு செழிக்கவும், அவர்கள் ஒற்றுமையாகவும், பாதுகாப்புடனும், அமைதியாகவும் வாழ ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் விஜயகாந்த் வாழ்த்து: ஏழைகளுக்கு இரக்கம் காட்டி, எதிரிகளுக்கும் அருள் செய்ய வேண்டும், பாமரர்களுக்கும் அன்புகாட்டி உதவி செய்திட வேண்டுமென மனித குலத்தை வாழ்விக்க இறைத்தூதர் இயேசுநாதர் அவர்கள் அளித்த போதனைகள் சிறப்பானதாகும். மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைய தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர். இயேசுநாதர் ஆவார். அவர் மீண்டும் உயிர்த்தெழுந்த நன்னாளையே, ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகிறார்கள். நாம் செய்கின்ற தொண்டும், தியாகமும் வீண் போகாது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டாகும். உலகில் அமைதி நிலவ, மனிதநேயம் தழைக்க ஈஸ்டர் திருநாள் ஒரு இன்பத் திருநாளாக மலரட்டும். நம்மாலான உதவிகளை ஏழை, எளியவர்களுக்கு செய்திட வேண்டும். ஏழைகளுக்கு செய்யும் தொண்டு, இறைவனுக்கு செய்யும் தொண்டாகும். “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்பது தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை முழக்கமாகும். இந்நாளில் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்த அனைத்து மக்களுக்கும், தேமுதிக சார்பில் எனது இதயமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஆர். சரத்குமார் வாழ்த்து; சிலுவையில் மரித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த புனித நன்னாளம் ஈஸ்டர் திருநாள் உலகெங்கும் கிறிஸ்தவ பெருமக்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே – என்னிடத்தில் வந்து இளைப்பாறுங்கள்++ என்று அனைவரின் பாவச்சுமைகளை தான் ஏற்று அன்பையும், கருணையையும், பிரதிபலனாக உலகிற்கு அளித்த ஏசுபிரானின் போதனைகள், மனித குலம் தழைத்தோங்கச் செய்யும் மகத்துவம் மிக்கவை. அன்பும், சகோதரத்துவமும், மனித நேயமும், சக மனிதர்களிடையே நிலைபெற்று நின்று புவி எங்கும் சமாதானம் தழைத்தோங்கும் விதமாக இந்த ஈஸ்டர் திருநாள் அமைந்திட நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக. விரதம் முடித்து ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சொந்தங்களுக்கு என் அன்பான நல்வாழ்த்துக்களைதெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ ஈஸ்டர் வாழ்த்து
சென்னை: மதிமுக., பொதுச் செயலர் வைகோ ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் அவரது வாழ்த்துச் செய்தியில்… மனித குலத்தின் மனக்காயங்களுக்கு மருந்திடுவதோடு, அழுத்தும் துன்ப இருளில் இருந்து விடுவித்து நம்பிக்கை ஒளி ஏற்றும் உன்னதத் திருநாள்தான், உலகெங்கும் கிறித்தவ மக்கள் போற்றிக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை நாளாகும். அன்பையும் கருணையையும், தீங்கு புரிந்தோருக்கும் நன்மை செய்யும் மனிதநேயத்தையும் போதித்த இயேசு கிறிஸ்து நிந்தைக்கு ஆளாகி, பிலாத்து சபையில் வேதபாரகர்களின் தூண்டுதலால் ஏற்பட்ட நிர்பந்தத்தால் தண்டனைக்கு உள்ளாகி, சிலுவையைச் சுமந்தார், சித்ரவதைக்கு ஆளானார். கொல்கதா எனும் கபால ஸ்தலத்தில் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் முள்முடி சூட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். சிரசிலும், கைகளிலும், கால்களிலும் ஆணிகள் அறையப்பட்டன. தாங்கள் செய்வது அறியாமல் செய்யும் இவர்களை பிதாவே மன்னியும்! என்று கூறியவாறு உயிர் நீத்தார். மூன்றாம் நாள் இயேசுநாதர் உயிர்த்து எழுந்த ஞாயிற்றுக்கிழமை புனித ஈஸ்டர் திருநாளாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. காலம் காலமாக தமிழகம் சமய நல்லிணக்கத்தைப் போற்றி வருகிறது. ஆனால் சகிப்புத்தன்மைக்கும், சமய ஒற்றுமைக்கும், மதச்சார்பற்ற கொள்கைக்கும் அறைகூவலும் அச்சுறுத்தலும் தலைதூக்கி வரும் இன்றைய காலகட்டத்தில் இயேசுநாதரின் அமுத மொழிகளை நினைவில் கொண்டு மனிதநேயத்தையும், சமய நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க ஈஸ்டர் பண்டிகை நாளன்று உறுதி ஏற்போம்! தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து
சென்னை: பாமக நிறுவுனர் ராமதாஸ் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி: . உலகை இரட்சிக்க வந்தவரான இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி தமிழக மக்கள் கடந்த 49 ஆண்டுகளாக எதிர்கொண்டு வந்த துயரங்கள் விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் நிறைவேறியே தீரும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன. தலையில் முள்முடி; பாரமான சிலுவை; அந்தச் சிலுவையோடு சேர்த்து ஆணிகளால் அடிக்கப்பட்ட கொடுமை; இத்தனை துன்பங்களை அனுபவித்த போதிலும் தம்மை துன்புறுத்தியவர்களை மன்னியும் என்று இறைவனிடம் இயேசு மன்றாடினார் என்று விவிலியத்தில் படிக்கிறோம். இயேசு பெருமான் எப்படி சிலுவையில் அறையப்பட்ட பிறகு உயிர்த்தெழுந்தாரோ, அதேபோல் தமிழகத்தில் சிலுவையில் அறையப்பட்ட உண்மை, நேர்மை, நீதி, மக்கள் விழிப்புணர்வு ஆகியவையும் விரைவில் உயிர்த்தெழும். இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் பண்டிகையைக் கொண்டாடுகிற இந்த நேரத்தில் அவரைப் பின்பற்றி மற்றவர்கள் மீது அன்பு செலுத்தவும், மற்றவர்களை மன்னிக்கவும் கற்றுக்கொள்வோம். பசித்தவர்களுக்கு உணவு அளிக்க முன்வருவோம். ஏழைகளை நேசிப்போம். மற்றவர்களின் குற்றங்களை மன்னித்து அனைவரிடமும் அன்பு செலுத்தி அன்புள்ளவர்களாக வாழ உறுதியேற்போம்.
சின்னத்திரை இயக்குனர் பாலாஜி தற்கொலை: கடன் தொல்லை காரணம்?
சென்னை: சின்னத்திரை தொடர்களின் இயக்குநர் பாலாஜி யாதவ் சென்னையில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அதற்குக் காரணம் கடன் தொல்லை என்று கூறப்படுகிறது. டப்பிங் செய்யப்படும் தொடர்கள் அதிகரித்து வருவதால் பாலாஜி யாதவ்க்கு சரியாக வேலை வாய்ப்பு அமையவில்லையாம். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த பாலாஜி யாதவ் தற்கொலை செய்துகொண்டார் என்று அவரது மனைவி கிருஷ்ணவேணி கூறியுள்ளார். தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பாலாஜியின் உடலை விருகம்பாக்கம் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பாலாஜி யாதவ் உடல் இறுதிச் சடங்குகளுக்காக சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. பாலாஜி யாதவ் உடலுக்கு சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் உள்பட நடிகர்-நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் அஞ்சலி செலுத்தினர் உயிரிழந்த பாலஜி யாதவ் (45) சென்னை சாலிகிராமம் காவேரி தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ‘லட்சுமி’, ‘துளசி’, ‘பயணம்’, ‘பந்தம்’, ‘உறவுகள்’, ‘அரசி’, ‘காயத்ரி’, ‘புகுந்த வீடு’, ‘செல்வி’, ‘ரோஜா’ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நெடுந்தொடர்களை இயக்கியுள்ளார். பாலாஜிக்கு திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத நிலையில் ஹர்ஷிதாவை 2 மாத கைக்குழந்தையாக வடபழனி கோவிலில் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். அண்மையில் சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார் டப்பிங் தொடர்கள் தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் அதிகளவில் ஒளிபரப்பாவதால் அவருக்கு நேரடி தமிழ் தொடர்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. கடந்த 6 மாதமாக வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வீட்டுக்கான கடன் தவணை செலுத்த முடியாமல் தவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் வங்கியில் இருந்து வீட்டுக்கான கடன் தொகையை செலுத்தாவிடில் ஜப்தி செய்வதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதுதான் அவரது தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டப்பிங் தொடர்களால் தாங்கள் பாதிக்கப் படுவதாக சின்னத்திரைக் கலைஞர்கள் தெரிவித்தனர். அண்மைக் காலமாக பிறமொழித் தொடர்கள் காரணமாக தமிழில் உள்ள கலைஞர்கள், தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. ஆகவே தொலைக்காட்சிகள் மொழிமாற்றம் செய்யும் தொடர்களை ஒளிபரப்பக்கூடாது என்று பலரும் வலியுறுத்தினர்.
வங்கக் கடலில் தமிழக மீனவர் மீன்பிடி உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை தேவை: ராமதாஸ்
சென்னை: வங்கக் கடலில் தமிழக மீனவர்களின் மீன் பிடி உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்க அந்நாட்டு அரசு மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களை கைது செய்யவும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யவும் இலங்கை கடற்படைக்கு அந்நாட்டு அதிபர் சிறீசேனா ஆணையிட்டிருக்கிறார். அதன்படி, வங்கக்கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் 33 பேரை 5 படகுகளுடன் சிங்களப்படை நேற்றிரவு கைது செய்துள்ளது. வங்கக் கடலில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினை கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்குப் பிறகு ஏற்பட்ட இச்சிக்கல் 1980 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரம் அடைந்தது. இக்காலகட்டத்தில் வங்கக் கடலில் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாகக் கூறி 800&க்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள்; ஏராளமான மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இருநாட்டு அரசுகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இரு நாட்டு மீனவர் அமைப்புகளே இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இரு நாட்டு மீனவர்களுக்கிடையே சென்னையில் கடந்த 24 ஆம் தேதி நடந்த மூன்றாம் கட்ட பேச்சுக்களின் போது, இலங்கை கடல் பகுதியில் ஆண்டுக்கு 83 நாட்களுக்கு மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக மீனவர்கள் விடுத்த கோரிக்கையை இலங்கை மீனவர்கள் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தான் உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை சமாளிப்பதற்காக தமிழக மீனவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் இந்த அறிவிப்பை இலங்கை அதிபர் வெளியிட்டிருக்கிறார். இந்தியா & இலங்கையைப் பொறுத்தவரை கடல் எல்லையை பிரித்துப் பார்க்க முடியாது; அப்படிப் பிரித்துப் பார்த்தால் மீனவர்கள் பிழைப்பு நடத்த முடியாது என்பது தான் உண்மை. இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறுகியது. இராமேஸ்வரம் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் சர்வதேச கடல் எல்லை வந்து விடும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் தான் விசைப்படகுகள் மீன் பிடிக்க முடியும் என்பதால் பல நேரங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும் நுழைவது தவிர்க்க முடியாதது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் எந்த அளவுக்கு கைது செய்யப்பட்டு இருக்கிறார்களோ, அதில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இலங்கை மீனவர்களும் இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்ற புள்ளிவிவரமே இதை உணர்த்தும். இந்த உண்மையை உணராமல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக் கொல்வோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மிரட்டுவதும், வங்கக் கடலில் மீன்பிடிப்பதற்கான தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை இலங்கை அதிபர் சிறீசேனா மறுப்பதும், அதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 33 பேர் அவர்களின் படகுகளுடன் கைது செய்யப்பட்டிருப்பதும் ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. இது மீனவர்கள் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குமே தவிர தீர்க்க உதவாது. வங்கக்கடலில் காலம் காலமாக தமிழக மீனவர்களும், இலங்கை மீனவர்களும் நட்புடன் மீன்பிடித்து வந்துள்ளனர். சர்வதேச வழக்கச் சட்டங்களின்படி (Customary international laws) பாரம்பரிய உரிமைகள் சட்டப்படி செல்லும். அந்த அடிப்படையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள வங்கக்கடலில் மீன் பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு உண்டு. இதை இந்தியா வலியுறுத்திக் கேட்கும்போது அதை இலங்கை அதிபராலோ, இலங்கைப் பிரதமராலோ ஒருபோதும் மறுக்க முடியாது. ஆனால், இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள இந்திய அரசு மறுப்பது தான் வேதனையான உண்மை ஆகும். ஐக்கிய நாடுகள் அமைப்பால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice) முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும். மேலும், வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கைக் கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சர்வதேச காவல்துறை மூலம் மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையில் இலங்கையை வழிக்கு கொண்டு வர முடியும். எனவே, இலங்கை மீது கருணை பார்வை காட்டுவதை விடுத்து, அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் வங்கக்கடலில் மீன் பிடிப்பதற்கான சட்டபூர்வ உரிமையை தமிழக மீனவர்களுக்கு மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும். அத்துடன் கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுகளுடன் மீட்கவும் மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்மிருதி இராணி புகாரால் விடிவு: கோவாவில் அனைத்து கடைகளிலும் ’ரகசிய கேமரா’ சோதனை!
பனாஜி: கோவாவில் உள்ள ஃபேப் இந்தியா ரெடிமேட் துணைக் கடையில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா இருந்ததை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டுபிடித்தார். இதை அடுத்து அவர் புகார் தெரிவித்ததில், போலீசார் கடை மேலாளர் உள்பட 4 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது புகாரால், ஏற்கெனவே புகாருக்கு உள்ளான அந்தக் கடையின் மீது மேலும் அழுத்தம் ஏற்பட்டதுடன், கோவாவில் அனைத்து ரெடிமேட் கடைகளிலும் ரகசிய கேமரா குறித்த ஆய்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி விடுமுறையில் தனது கணவர் சுபினுடன் கோவா வந்தார். நேற்று காலை அவர் கண்டோலிம் என்ற இடத்தில் உள்ள ‘பேப் இந்தியா’ ரெடிமேட் துணிக்கடைக்கு உடைகள் வாங்கச் சென்றார். உடைகள் வாங்கிய பின்னர் அங்குள்ள உடை மாற்றும் அறைக்குச் சென்றார். அப்போது அவர் அந்த அறையில் ஒரு சிறிய ஓட்டையும், அதற்குள் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டிருந்ததையும் கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் கோவா எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோவுக்கு தொடர்பு கொண்டு கூற, லோபோ சிறிது நேரத்தில் போலீசாருடன் அந்தக் கடைக்கு வந்தார். இது தொடர்பாக போலீசில் லோபோ புகார் அளித்ததால், போலீசார் அந்த அறையை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கிருந்த ரகசிய கேமராவையும், அந்தக் கேமராவில் பதிவாகும் காட்சிகளை சேமித்து வைத்துள்ள ஒரு ‘ஹார்டு டிஸ்க்’கையும் கைப்பற்றினர். அந்தக் கடையின் ஊழியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த கேமரா 4 மாதங்களுக்கு முன் பொருத்தப் பட்டது தெரியவந்தது. அங்குப் பதிவாகும் காட்சிகள் மேலாளர் அறையில் உள்ள கணினித் திரையில் தெரிந்தது. கடையில் திருட்டைத் தடுக்கவே இந்த சிசிடிவி கேமரா பொருத்தப் பட்டுள்ளது என்று கடை மேலாளரும் ஊழியர்களும் கூறினாலும், அந்தக் கேமராவில் பதிவாகும் காட்சிகள் வீடியோ பதிவுகளாக கணினியில் சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் உடைமாற்றும் காட்சிகள் அந்தக் கணினியில் பதிவாகியுள்ளன. இந்தத் தகவல் கிடைத்து பத்திரிகை, காட்சி ஊடக செய்தியாளர்களும் அங்கு வந்தனர். இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய லோபோ, இதுதொடர்பாக போலீசில் புகார் செய்துள்ளேன். அந்தக் கேமராவில் பதிவான காட்சிகள் சோதித்துப் பார்க்கப் பட்டதில், ஏற்கெனவே அங்கே உடை மாற்றிய பலரது வயிற்றுக்கு மேலே உள்ள பகுதிகள் அந்தக் கணினியில் பதிவாகி இருக்கிறது என்று கூறினார். இதனால் இந்தப் பிரச்னை மேலும் பெரிதானது. இதனிடையே இந்த ஷோரூமில் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா கண்டுபிடிக்கப்பட்டது இது முதல்முறை அல்ல என்று பலரும் கூறியுள்ளனர். இதுவரை பெரிய அளவில் புகார் வந்து, நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில் மத்திய அமைச்சரே நேரடியாகக் கண்டறிந்து புகார் அளித்ததின் பேரில் கோவா நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது. அதற்கு ஏற்ப, கோவா முழுவதும் உள்ள ரெடிமேட் ஷோரூம், துணிக் கடைகளில் தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமேஷ் கூறினார்.
தாலி – அவரவர் தனிப்பட்ட உரிமை: கருணாநிதி
சென்னை: தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். தி.க.வின் தாலியறுப்புப் போராட்டம், தனியார் டி.வி. ஒன்றில் தாலி குறித்த சர்ச்சை என தாலியை மையப் படுத்தி எழுந்துள்ள அரசியல் சூழலில் அவரது கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் கருணாநிதி. கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில்…
- தாலி குறித்த சர்ச்சை பற்றி?.
** “பிள்ளையாரை வணங்கவும் மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காய் உடைக்கவும் மாட்டேன்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னதைப்போல, தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும், அணிந்த பிறகு அதை வேண்டாம் என்று கழற்றி வைத்து விடுவதும் என்பது அவரவர் விருப்பத்தையும், நம்பிக்கையையும், தனிப்பட்ட உரிமையையும் சார்ந்தது.
- நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மாநிலங்களவையில் பெரும்பான்மையில்லாமல் நிறைவேற்ற முடியாத நிலையில், மீண்டும் ஒரு அவசரச் சட்டமாகவே கொண்டுவர மத்திய பா.ஜ.க. அரசு முடிவெடுத்திருக்கிறதே?.
** இந்தச் சட்டத்திற்கு இந்திய அளவில் விவசாயிகள் பெரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நிலையில் பா.ஜ.க. அரசு எதற்காக நில எடுப்பு மசோதாவில் பிடிவாதம் காட்டுகிறது என்று தெரியவில்லை. இந்தப் பிரச்சினையில் பிரதமர், பின்வாங்க மாட்டோம் என்று கூறியிருப்பது சரியான முடிவில்லை என்பதே என் கருத்து. சொந்த நிலத்தின் மீது விவசாயிகளுக்குள்ள அடிப்படை உரிமையைப் பாதுகாத்திடத் தவறினால், விபரீதமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று நான் ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன். நாடெங்கிலும் உள்ள எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும் எதிர்க்கும் இந்த முடிவை மத்திய அரசு மேற்கொள்ளாமல் இருப்பதுதான் பா.ஜ.க. அரசுக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல பெயரை ஏற்படுத்தித் தரும் என்பதை மனதிலே கொண்டு, பிரதமர் மோடியே முன்வந்து அதற்கான அறிவிப்பினைச் செய்து பிரச்சினையை முடித்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
- உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெறும் ஏமன் நாட்டில் இருந்து திரும்ப முடியாமல் தமிழக நர்சுகள் தவிப்பது பற்றி?.
** ஏமன் நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், அங்கு வசிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இன்றுகூட சுமார் 40 தமிழர்கள் உட்பட 300 இந்தியர்கள் அங்கிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். ஆனாலும் மேலும் சிலர் அங்கே தவித்துக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தமிழக அரசினர் உடனடியாக மத்திய அரசோடு தொடர்பு கொண்டு ஏமன் நாட்டில் எஞ்சியுள்ள தமிழர்கள் நாடு திரும்ப முயற்சி மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
- சூரியசக்தி மின் கட்டண ஆணையை, மின்சார ஒழுங்கு முறை ஆணையம், 6 மாதங்களுக்கு நீட்டித்திருப்பதாகவும், அதனால் மின் வாரியத்திற்கு 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் வந்துள்ளது என்றும் செய்தி வந்திருக்கிறதே?.
** தமிழ்நாடு மின் வாரியம், சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கான கட்டண ஆணையை 12-9-2014 அன்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டது. அதன்படி, 12-9-2015-க்குள் சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து, மின் உற்பத்தியைத் துவக்குவோரிடம், மின்வாரியம் ஒரு யூனிட் மின்சாரத்தை 7.01 ரூபாய் விலையில் வாங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று நேற்றிரவு சூரிய சக்தி மின் கட்டண ஆணையை 1-4-2016 வரை, அதாவது 6 மாத காலத்திற்கு நீட்டித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு யூனிட் 7.01 ரூபாயாக இருந்த சூரியசக்தி மின் விலை, தற்போது 5.84 ரூபாயாகக் குறைந்துள்ள போது, அதிக விலை கொடுத்து வாங்க என்ன அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது?. இவ்வாறு அதிக விலை கொடுத்து ஒப்பந்தக்காலமான 25 ஆண்டுகளுக்கு மின் வாரியம், மின்சாரம் வாங்கினால் 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மக்களுக்கு நல்லது செய்யத்தானே உள்ளது? பெருமளவு கடன்களில் தள்ளாடும்போது, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முறைகேடுகள் மேலும் மேலும் பெருகிக் கொண்டிருக்கின்றனவே; எங்கே போய் முடியுமோ? என்று கூறியுள்ளார்.

