கொழும்பு: மீனவர் பிரச்னை குறித்து தமிழக அரசுடனும், இந்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன தெரிவித்தார். இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இந்தியாவுக்கு ஆளும் கூட்டணி அரசு விட்டுக் கொடுத்து விட்டதாக எதிர்க்கட்சியான தேசிய சுதந்திர முன்னணி புகார் தெரிவித்து வருகிறது. அக்குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு சிறீசேன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொழும்பில் தன்னைச் சந்தித்த மீனவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களிடையே அவர் பேசியபோது, இந்தியாவைச் சேர்ந்த சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தும் மீனவர்கள் நமது கடற்பகுதிக்கும், நமது மீனவர்களுக்கும் தீங்கிழைப்பதை தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் நாம் உணர்த்த வேண்டும். இந்தியாவுடனான நமது உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த நான் உத்தேசித்துள்ளேன் என்று கூறினார். மேலும், இந்தியர்கள் யாரையும், இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கவில்லை. இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் அல்லது கப்பல்களைப் பறிமுதல் செய்யும்படி கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தியாவில் நான் மேற்கொண்ட பயணத்தின்போது, தொடர்கதையாகி வரும் இரு நாட்டு மீனவர்களின் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்தியாவுடன் இலங்கைக்கு இருக்கும் நீண்டகால நட்புறவுகள் பாதிக்கப்படாத வகையில், மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆழ்கடல் மீன்பிடித்தலை கைவிடும்படி, இந்திய மீனவர்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணும் விவகாரத்தில், தமிழர்கள் ஆட்சி நடைபெறும் வடக்கு மாகாண கவுன்சில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். கொழும்பில் உள்ள இந்தியத் தூதருடன் கலந்தாலோசித்து, இதுதொடர்பாக வடக்கு மாகாண கவுன்சில் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகக் குறிப்பிட்டார் சிறிசேன.
சுரேஷ் ரெய்னா திருமணம்: தோனி, சீனிவாசன் நேரில் வாழ்த்து
புது தில்லி; தனது பள்ளித்தோழி பிரியங்காவைத் திருமணம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா. வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், வி.ஐ.பி.க்கள் பங்கேற்றனர். அரசியல் கட்சி பிரமுகர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் வருகை தந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வீரர்கள் பிராவோ, ஸ்டீபன் பிளமிங், ஐசிசி தலைவர் என்.சீனிவாசன், இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகியோர் கலந்து கொண்டனர். 28 வயதான கிரிக்கெட் வீரர் ரெய்னாவும், தற்போது ஆம்ஸ்டர்டாமில் உள்ள பிரியங்காவும் பள்ளிப் பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருந்தவர்கள். அவர்கள் இருவரின் குடும்பமும் நெருங்கிய நட்பு கொண்டது. திருமணத்துக்குப் பின்னர் தனது வேலையை விட்டுவிட்டு, பிரியங்கா இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது. திருமணம் முடிந்த கையோடு, வரும் ஏப். ஆம் தேதி ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை வருகிறார் ரெய்னா. அப்போது அவருடைய மனைவி பிரியங்காவும் சென்னை வந்து, அவரை உற்சாகப் படுத்தவுள்ளார்.
மனதின் ஆழத்தில் உள்ள எண்ணங்களை
“பக்தர்களின் மனதின் ஆழத்தில் உள்ள எண்ணங்களைப் படிக்க அந்த மகானால் முடியும்” தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒருமுறை மகான் மதுரை அருகே முகாமிட்டிருந்த சமயம். மகானைத் தரிசிக்க பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. நாராயணசாமி என்றொரு பக்தர் தன் நண்பருடன், அந்த நடமாடும் தெய்வத்தைத் தரிசிக்கப் போயிருந்தார். கையில் அவ்வளவு பண வசதி இல்லாதவர்.கொஞ்சமாகத்தான் எடுத்துக் கொண்டு போயிருந்தார். அவர் ஒரு சம்சாரி. எந்தச் செலவு என்றாலும் அளவோடு தான் செலவு செய்ய முடியும்? மகானைத் தரிசிக்க வந்ததில் நண்பருக்கும், அவருக்கும் பணம் பஸ்கட்டணத்திற்கே சரியாகப் போய்விட்டது.மகானைத் தரிசித்தோம் என்கிற ஆனந்தத்திற்குப் பதிலாக, திரும்பவும் ஊர்ப் போய்ச் சேர கையில் காசில்லையே என்கிற கவலைதான் அவரை அதிகமாக ஆட்கொண்டது. மகானிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு எப்படி ஊர் திரும்புவது என்ற விசனத்தோடு, அவர் வெளியே வெகு தூரம் வந்துவிட்டார். அவரது பின்னால் ஓடிவந்த ஒருவர், அவரை மகான் திரும்ப அழைப்பதாகச் சொன்னார்.நாராயணசாமி அய்யருக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்வளவு பெரிய பக்தர்கள் கூட்டத்தில் தன்னை மட்டும் மகான் குறிப்பிட்டு அழைப்பானேன். மனதில் குழப்பத்துடன் பெரியவாளின் முன்பு நின்றார். “பாவம் நீ சம்சாரி, இதை வச்சுக்கோ” என்று ஐந்து ரூபாயை மகான் கொடுத்தபோது சாட்சாத் சுந்தரேஸ்வரரே தன் கஷ்ட நிவர்த்திக்கு பணம் கொடுத்து அருளுவது போன்ற பிரமை அவருக்கு ஏற்பட்டது. பக்தர்களின் மனதின் ஆழத்தில் உள்ள எண்ணங்களைப் படிக்க அந்த மகானால் முடியும் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். இதைப் போன்ற அருள் சுரக்கும் பரமேஸ்வரரைத் தரிசித்து வணங்கினால் வாழ்வில் சகல ஐஸ்வர்யங்களையும் சர்வ மங்களங்களையும் பெற்று ஆனந்த வாழ்வு பெறுவது சாத்தியமே
திருமயிலை திருக்கல்யாண அழைப்பிதழ் : கிரேஸி மோகன் கவிதை

“செல்வன் கபாலியை செல்வியுமை கற்பகம்
கல்யாணம் செய்தவன் கைத்தலம்-செல்லும்
தினம்நாளை சேர்வீர் திருமயிலாப் பூர்க்கு
இனம்ஜாதி இல்லை இதற்கு”
“கைத்தலம் பற்றி கபாலியும் கற்பகமும்
நெய்த்தலம் சுற்றி நடந்தனர் -மெய்த்தவ
வேதியர் ,மாலயன் ,வானோர் குழுமிட
ஆதியின் பாதி அளிப்பு”
“அன்னைக்கும் தந்தைக்கும் ,அர்த்தமதன் சொல்லுக்கும்
புன்னைக்கும் பூங்கொடி பெண்ணுக்கும் -இன்னைக்கு
கையோடு கைகோர்க்கும் கல்யாண உற்சவம்
மொய்யெழுதும் நேரமிது மெய்க்கு”
“குங்குமமும் வெண்ணீறும் கூடிக் கலந்தின்று
சங்கமம் ஆகுது சன்னிதியில் -தங்களை
வாயாரக் கேட்கிறேன் வந்திதைக் காணவினை
நோயாறிப் போகும் நொடித்து”
“பங்குனி உத்திரத்தில் சங்க ரனுமையாள்
பங்குநீ என்றுதன் பாகத்தை -மங்களமாய்
தந்த மணநாளாம் இன்று மயிலையில்
வந்து வடுக்களை வாழ்த்து”
பலன்….
“கைத்தலம் பற்றிய கற்பகத்தின் காதலால்
மெய்தலப் பாதி மகிந்தளித்த -வைத்திய
பாகனின் பாதம் பணிய சனிபகவான்
நோகான்நம் பாகம் நளன்”
- கவிதை: கிரேஸி மோகன்
சாலை விபத்தில் மரணம் – எஸ்.டி.பி.ஐ அனுதாபம்
விபத்தில் பலியான பேராசிரியர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை சென்னை:சாலை விபத்தில் மரணம் பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க எஸ்.டி.பி.ஐ கோரிக்கை விடுத்துள்ளது. இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இயங்கிவரும் மக்தூமியா அரபி கல்லூரியின் பேராசிரியர்களும், மாணவர்களும் நேற்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகே அவர்கள் பயணித்த கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மக்தூமியா அரபி கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே அகால மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்விபத்தில் பலியான ஆலிம் பெருமக்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் மக்தூமியா அரபி கல்லூரியை சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களது மறுமை வாழ்வு வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். மேலும் இவ்விபத்தில் அகால மரணமடைந்த வரலாற்று சிறப்புமிக்க மக்தூமியா அரபி கல்லூரியின் பேராசிரியர்கள் உட்பட அனைவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் புனித வெள்ளி
நெல்லை மற்றும் தூத்துக்குடிமாவட்டத்தில் புனித வெள்ளி தினத்தை முன்னிட்டு அனைத்து சர்ச்சுகளிலும், இயேசுவின் சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடுகள் நடந்தன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பிரசித்தி பெற்ற பனிமயமாதா சர்ச்சில் இயேசு கிறிஸ்து சிலுவை சுமப்பது போன்ற சொரூபம் சர்ச்சினை சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடியில் பாதிரியார் லெரின் டீரோஸ் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. திரு இருதய சர்ச்சில் தூத்துக்குடி பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து இயேசு உயிர்த்தெழுந்த, ஈஸ்டர் பண்டிகை தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்று நள்ளிரவு அனைத்து சர்ச்சுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கவுள்ளது.தென்காசி,செங்கோட்டை,அகரக்கட்டு.உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புனித வெள்ளி தினம் கொண்டாடப்பட்டது.
இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைப்பு
இன்ஜின் பழுது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நிறுத்திவைப்பு கன்னியாகுமரியிலிருந்து நெல்லை வழியாக சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று இரவு சுமார் 7மணியளவில் நெல்லை வந்தது.இந்நிலையில் ரயில் கன்னியாகுமரியிலிருந்து புறப்படும் போதே இன்ஜினில் கோளாறு ஏற்ப்பட்டுள்ளது.அதனை ஓட்டுனர் சரி செய்து நெல்லைக்கு கொண்டுவந்தார்.நெல்லையிலிருந்து சுமார் 7.10.க்கு புறப்பட வேண்டிய இந்த ரயில் இன்ஜின் மீண்டும் கோளாறு செய்யவே ரயிலை இயக்க முடியாமல் ஓட்டுனர் நிறுத்தி வைத்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.அதனைத்தொடர்ந்து மாற்று இன்ஜின் பொருத்தப்பட்டு சுமார் 1.20 மணி நேரம் தாமதமாக 8.26க்கு சென்னைக்கு புறப்பட்டு சென்றது.இதன் காரணமாக பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கடன் தொல்லையால் குடும்பமே ரயில் முன் பாய்ந்து தற்கொலை
சென்னை: கடன் தொல்லை காரணமாக, கட்டுமானத் தொழில் ஒப்பந்ததாரர், குடும்பத்துடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த குமரன் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார். இவர் ரூ. 50 லட்சத்துக்கு மேல் கடன் வாங்கி அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் சிக்கித் தவித்துள்ளார். கடன் தொல்லையால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, குமரன் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். இதற்காக பூச்சிக் கொல்லி மருந்து வாங்கி வந்து, தன் குடும்பத்தினருடன் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் சென்றுள்ளார். பூச்சி மருந்து குடித்து காப்பாற்றப்பட்டு விட்டால் என்ன செய்வது என்று எண்ணி, அந்த முடிவைக் கைவிட்டு, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார். அந்த எண்ணத்துடன் நேற்று மாலை 4.30க்கு அங்குள்ள ரயில்வே இருப்புப்பாதையில் தனது குடும்பத்தினருடன் ரயில் முன் பாய குமரன் காத்துக் கிடந்து, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த ரயில் முன் திடீரென தனது மனைவி மாலதி, மகள் மோனிகா (15), மகன் கணேஷ் (6) ஆகியோருடன் பாய்ந்துள்ளார். இதில் கணேஷ் மட்டும் அதிர்ஷ்டவசமாக பலத்த உயிர் தப்பியுள்ளார். மற்றவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார், படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரயிலில் அடிபட்டு இறந்தவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா விவகாரம்: 4 பேர் கைது
கோவா: கோவாவில் புகழ் பெற்ற ஃபேப் இண்டியா ரெடிமேட் ஷோரூமில் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா பொருத்தப் பட்டிருப்பதாக, இன்று அங்கே சென்ற மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி கண்டுபிடித்து புகார் செய்தார். இந்த விவகாரம் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஷோரும் உரிமையாளர், திருட்டைத் தடுக்க அறைக்கு வெளியே சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். இருப்பினும் போலீஸாரின் தீவிர விசாரணையையை அடுத்து, இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவா முதல்வர் பர்சேகர், இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்மிருதி இராணியிடம் உறுதியளித்துள்ளதாகக் கூறினார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். பர்சேகர் தற்போது, பெங்களூரு தேசிய செயற்குழுவில் கலந்து கொண்டிருக்கிறார்.

