புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் மசோதா தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டது. முன்னதாக இந்தச் சட்டம் வரும் ஏப்.5ஆம் தேதியுடன் காலாவதியாவதால், இந்த அவசரச் சட்டத்தை மறுபிரகடனம் செய்ய மத்திய அரசு முயற்சி செய்தது. மக்களவையில் நிறைவேற்றப் பட்ட இந்தச் சட்டத்துக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் கிட்டவில்லை. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இந்த அவசரச் சட்டத்தை மறுபிரகடனம் செய்ய அரசு முடிவு செய்தது. அதற்கு வசதியாக மாநிலங்களவை முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அவசரச் சட்டத்தின் மறு பிரகடனத்தில் கையெழுத்திட்டார். இதை அடுத்து இந்த அவசரச் சட்டம் மறுபிரகடனம் செய்யப்பட்டு அமல்படுத்தப் பட்டது.
சின்னத்திரை இயக்குனர் பாலாஜி தற்கொலை
சென்னை: பிரபல சின்னத்திரை இயக்குனர் பாலாஜி, இன்று தற்கொலை செய்து கொண்டார். பாலாஜி, பல்வேறு சின்னத் திரை தொடர்களை இயக்கியவர். அண்மையில் குடும்பப் பிரச்னைகளால் மன உளைச்சலில் இருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில், அவரது தற்கொலைகு குடும்பப் பிரச்னை காரணமா அல்லது தொழில் தொடரபான அழுத்தங்கள் எதையும் அவர் சந்தித்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர பாலபிஷேகம்
கரூர்: கரூர் பகுதியின் புகழ் பெற்ற முருகன் மலைக் கோவில்களுள் ஒன்றான அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இன்று அதிகாலையில் இருந்தே நூற்றுக் கணக்கான பால்குடங்கள் பக்தர்களால் கொண்டு வரப்பட்டன. மதியம் 12 மணியளவில் கரூர் நகரத்தார் சங்கம் சார்பில் சிறப்பு அபிஷேகங்கள் முருகனுக்கு நடைபெற்றது. விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தயிர், மஞ்சள், பழ வகை, அரிசி மாவு, சந்தனம் என நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் பால் அபிஷேகம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. கரூர் நகரத்தார் சங்கத் தலைவர் சுப.செந்தில்நாதன், கோயில் அறங்காவலர் சொக்கலிங்கம் செட்டியார், ராதா, கணேஷன் செட்டியார், கரு.ரத்தினம், வயிரவன், கைலாசம், மோகன், ராம்.மெய்யப்பன், அகல்யா.மெய்யப்பன், சீனிவாசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். கரூர் நகரத்தார் சங்க செயலாளர் மேலை.பழநியப்பன் முருகன் பெருமை பற்றி பேசினார். அனைவருக்கும் அழகம்மை மஹாலில் மதிய விருந்தும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் கரூர் நகரத்தார் சங்கம் சார்பில் 25 வது மாதமாக பொளர்ணமி கிரிவலம் நடைபெற்றது. அமர்ஜோதி ஆறுமுகம், கைலாசம் குழுவினர் கிரிவலத்தை முன்னின்று நடத்தினர்.
உங்களின் மாயமானவரைத் தேடுங்கள்: எங்களின் இல்லாத குறைகளைத் தேடாதீர்கள்: அமித் ஷா
பெங்களுரு: மாயமான உங்கள் கட்சித் தலைவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள், எங்களிடம் இல்லாத குறைகளைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள் என்று காங்கிரஸாருக்கு அறிவுரை கூறினார் பாஜக தலைவர் அமித் ஷா. மேலும், மத்தியில் மோடியின் ஆட்சி இன்னும் 20 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இன்று காலை பெங்களூருவில் உள்ள லலித் அசோக் ஓட்டலில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. இந்த இரண்டு நாள் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, மூத்த தலைவர்கள் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே.அத்வானி உள்ளிட்ட தேசிய செயற்குழு உறுப்பினர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பாஜக மாநிலத் தலைவர்கள் என 111 பேர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமித் ஷா, “நிலம் கையகப்படுத்தும் சட்டம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானதல்ல. பாஜக., விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. எதிர்க் கட்சியினர், திட்டமிட்டே நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்துக்கு எதிராக வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். எனவே, விவசாயிகளிடம் உண்மையை எடுத்துரைக்க நாங்கள் விரிவான பிரசாரத்தைக் கையாள்வோம். பாஜக., விவசாயிகளின் நண்பன். விவசாயிகள்தான் எங்களுக்கு பெருமளவில் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். எனவே, விவசாயிகள் மத்தியில் பாஜக குறித்த தவறான பிரச்சாரத்தை காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டாம். காங்கிரஸ் கட்சி உண்மையில் தன்னம்பிக்கை இழந்து திக்கு திசை தெரியாமல் தவித்து வருகிறது. அதனால்தான் இவ்வாறு காணமுடியாத குற்றங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடிக்க முயல்கிறது. ஏதாவது தேடியே ஆக வேண்டும் என விரும்பினால், அவர்கள் அவர்களின் தலைவரைத் தேடலாமே” என்றார் அமித் ஷா. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அண்மைக் காலமாக கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் காங்கிரஸாரே உள்ள நிலையில், அவர் பெயரை நேரடியாகச் சுட்டிக் காட்டாமல் அமித் ஷா இவ்வாறு மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். மேலும், மோடியின் அரசு இன்னும் பத்து முதல் இருபது ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறினார். “மோடி அரசு வந்து விட்டது. இனி அடுத்த 10-20 ஆண்டுகளுக்கு அதிகாரத்தில் இருப்பது உறுதி. பிரதமர் நரேந்திர மோடி புதிய அரசியல் கலாச்சாரத்தையும் புதிய சூழலையும் உருவாக்கியுள்ளார். முன்பு நிலவிய கொள்கை முடக்கம் முடிந்து விட்டது. ஐ.மு. கூட்டணியின் 10 ஆண்டு கால ஊழல் ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது. இப்போது ஊழல் என்றே பேச்சுக்கே இடமில்லை” என்று குறிப்பிட்டார் அமித் ஷா. தில்லி தோல்வி குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், அடுத்த வெற்றியை நோக்கி கட்சியினர் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். “கடந்த முறை பிஹார் மக்கள் பாஜக-ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு வாக்களித்தனர். ஆனால் மக்களின் முடிவை தூக்கி எறிந்து கூட்டணியிலிருந்து அவர்கள் தற்போது பிரிந்து சென்றுள்ளனர். எனவே மக்களை ஏமாற்றியது நாங்கள் அல்ல அவர்கள்தான். தற்போது பிஹாரில் நடைபெறுவது ‘இரண்டாம் காட்டு தர்பார்’. இதனால்தான் பிஹார் மக்கள் கடும் கோபமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்” என்று பிகார் மாநில நிலை குறித்து தனது பேச்சில் குறிப்பிட்டார் அமித் ஷா. இந்தக் கூட்டத்தில், அருண் ஜேட்லி, எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் அமித் ஷா பேசும்போது கேட்டுக் கொண்டிருந்தனர்.
மும்பையில் முகாமிடும் சூர்யா
அஞ்சான் படத்தையடுத்து சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் 24 படதில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு 8ம் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறது. இதற்காக மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுவிட்டதாம். ஏ.ஆர்.ரஹ்மான் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் 6 வருடங்களுக்கு பிறகு சூர்யாவின் 24 என்ற படத்தை இயக்கவுள்ளார். சூர்யா தற்போது நடித்துள்ள மாஸ் படம் மே 1ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இச்செய்தி பற்றிய தங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யவும்
இலங்கை அணி தேர்வுக் குழு தலைவர் ஜெயசூரியா ராஜினாமா
முன்னாள் கிரிக்கெட் வீரரும் இலங்கை கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுத் தலைவருமான ஜெயசூரியா தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இவர் தனது ராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயகவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தேர்வுக் குழுவில் உள்ள வேறு சில உறுப்பினர்களும் ராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனத் ஜெயசூரியா கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் தேர்வுக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா டுடே கணிப்பில் மோடியின் செல்வாக்கு சரிவு
புது தில்லி: இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. எப்படி இருந்தாலும், இதுவரை வந்த பிரதமர்களிலேயே மோடிதான் சிறந்தவர் என்று பெருவாரியானவர்களும் கூறியுள்ளனர். அடல் பிஹாரி வாஜ்பாய், இந்திரா காந்தி ஆகியோரைக் காட்டிலும் மோடி சிறந்தவர் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியா டுடே, 12 ஆயிரம் பேரிடம் பிரதமர் மோடி தலைமை குறித்து ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. பிரதமர் மோடி தலைமையில் பா.ஜக., ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் – 300 நாட்கள் நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் மோடியின் செல்வாக்கு எப்படி உள்ளது, அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது குறித்து அந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப் பட்டது. அந்த முடிவுகளை அது இன்று வெளியிட்டது. அந்தக் கருத்துக் கணிப்பின் படி, 38 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடு நன்றாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். 22 சதம் பேர் மிக நன்றாக இருந்ததாகவும், 11 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இல்லை என்றும் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் தேர்தல் நடத்தப் பட்டால், தற்போதுள்ள சீட்களைக் காட்டிலும், பாஜக 27 சீட்களை இழக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துள்ளது என்றும், கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பின்போது, மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று 57 சதவீதம் பேர் தெரிவித்து இருந்ததாகவும், அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர் என்றும், இது தற்போது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும், மோடியின் ஆட்சி மோசம் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேரும் தற்போது 11 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளதாக அந்தக் கருத்துக் கணிப்பு கூறுகிறது. கடந்த 6 மாதத்தில் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 1 சதவீதம் குறைவாகவும், மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்டதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சதவீதம் பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அது தெரிவிக்கிறது.
மாஸான கதையை கூறி விஜய்யை கட்டிபோட்ட சசிகுமார்
விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் புலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள பேண்டஸி படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புலி படம் விஜய்யின் பிறந்தநாளன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தன்னுடைய 59வது படத்தை இயக்கும் பொறுப்பை அட்லீயிடம் ஒப்படைந்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கவிருக்கின்றனர். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த படத்தையடுத்து விஜய் எந்த படத்தில் நடிப்பார் என்ற கேள்வி தற்போதே ரசிகர்கள் மனதில் கோலொங்கி உள்ளது. இந்நிலையில் விஜய்யின் 60வது படத்தை சசிகுமார் இயக்கவிருக்கிறார் என்ற ருசிகர தகவல் ஒன்று நம்பதகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ளது. சசிகுமார் கூறிய கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போனதால் கைவசம் உள்ள இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு நடிப்பதாக கூறியுள்ளாராம்.
துணிக்கடை உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: ஸ்மிருதி இராணி அதிர்ச்சி
பனாஜி: கோவாவில் துணிக்கடை ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்றார். அப்போது அந்தக் கடையின் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமிரா ஒன்று பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவா தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கலங்குட்டே கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க கோவா வந்தார் மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி. அப்போது, அவர் அந்தப் பகுதியில் புகழ்பெற்ற ஃபேப் இண்டியா – ரெடிமெட் ஷோரூமில் துணிகள் வாங்கினார். பின்னர் உடை மாற்றும் அறைக்குச் சென்று, உடையின் அளவை சரிபார்க்க முயன்றார். அப்போது அங்கு வெளிப் பார்வைக்குப் புலப்படாத வகையில், கேமிரா ஒன்று இருந்ததைக் கண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து உள்ளூர் எம்.எல்.ஏ மைக்கேல் லோபோவிடம் தகவல் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ மைக்கேல் லோபா போலீசில் புகார் அளித்ததால், கோவா மாநில போலீசார், அந்தக் கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதுடன், கடைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தனர். அமைச்சர் ஒருவரே ரகசியமாக கண்காணிக்கப்படவிருந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூபாய் நோட்டுகளை இந்தியத் தயாரிப்பில் வெளியிடுங்கள்: மோடி கோரிக்கை
மும்பை: மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் 80 ஆவது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ரூபாய் நோட்டுகளை இந்தியத் தயாரிப்பிலேயே வெளியிடுங்கள் என்று கோரினார். மேக் இன் இந்தியா திட்டத்தில் மை, தாள் உள்ளிட்டவை இந்தியத் தயாரிப்பிலேயே இருக்க வழி செய்யுங்கள் என்றார். ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, நாட்டின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் நீடிக்கச் செய்ய பல சிறந்த திட்டங்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வகுத்துள்ளார். அவரது செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. பொருளாதார நிலவரம் தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் பல கருத்தொற்றுமைகள் உள்ளன. நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியம் என்றார். மேலும், இந்திய காகிதங்கள், மை ஆகியவற்றைக் கொண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, இன்றைய நாளில் நாம் ஓர் இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அந்த நாளில், நாம் அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் காகிதங்களும், மையும் இந்தியத் தயாரிப்புகளாக இருக்க வேண்டும். சுதேசி இயக்கத்துக்காகப் போராடிய காந்தியின் புகைப்படம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காகிதங்களில் அச்சடிக்கப்படுவது முரண்பாடான விஷயமாகும். இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை, ரூபாய்நோட்டுகளில் இருந்து தொடங்க வேண்டும் என்றார் மோடி.

